Friday, February 17, 2006

கதை 6: ஒரு அம்மாவின் டைரிக் குறிப்பு

என் பெயர் என்ன... கடந்து வந்து காலங்களில் நான் மறந்துப் போன எத்தனையோ விஷயங்களில் என் பெயரும் ஒன்று...
அவசியம் உங்களுக்கு என் பெயர் தெரிய வேண்டுமானால் கொஞ்சம் பொறுங்கள்...
என்னைப் பற்றி சொல்ல என்ன இருக்கு..? என் உலகம் மிகவும் சின்னது. அதில் நானும்...என் இரண்டு தேவதைகளும் அடக்கம்... மூத்தவள் பெயர் ரியா...அடுத்தவள் பெயர் லயா...(எனக்குப் பிடித்தப் பெயர்). மூத்தவளுக்கு வயது 7, அடுத்தவளுக்கு வயது 6...
ரியா என்னுடைய நாடக ராணி... தொட்டதற்க்கெல்லாம் அழுது அடம் பிடித்து சாதிக்கும் குணம் கொண்டவள்...(அவங்க அப்பா மாதிரி).
லயா நிதானமானவள்... நல்லா சிரிப்பா...வேண்டியது கிடைக்காதப் போதும் அவக் கிட்ட இருந்து அந்த சிரிப்பு மறையாது... உலகம் என்னைக் காயப்படுத்தும் போது எல்லாம் எனக்கு மருந்துப் போடுறது லயாவோடச் சிரிப்பு தான்.
இந்த இரண்டு தேவதைகளும் தான் என்னோட ராஜகுமாரன் என்னோட இல்லைங்கற என் ஏக்கத்தை தாங்க எனக்கு சக்தி கொடுக்கிறவங்க... நான் சொன்ன ராஜகுமாரன் எனக்கு மூணாவதாப் பொறந்த பையன்... அவன் பேர் அஷ்வத்.
அஷ்வத் மத்த குழந்தைகள் மாதிரி கிடையாது... இறைவன் எனக்குன்னு விஷேசமாப் படைச்சப் பரிசு அவன். அவனுக்கு மூளை வளர்ச்சி கிடையாதுன்னு உலகம் சொல்லுது. அவனை என்னோட வச்சுப் பார்த்துக்க என்னால முடியல்ல. ஆசை இருந்தும் வசதி பத்தல்ல. அவனுக்கு அதிகமானக் கவனம் தேவைப்பட்டுச்சு. எனக்கு நேரம் போதல்ல. அதான் மனசைக் கல்லாக்கிட்டு அவனை ஒரு இல்லத்துல்லச் சேர்த்துட்டேன். அங்கே அவனை நல்லாக் கவனிச்சுகிறாங்க... அவன் சந்தோஷமா இருக்கான்.

இப்போ அவன் கிட்டார் எல்லாம் வாசிக்கிறான். ரஹ்மான் பாட்டுப் போட்டாத் துள்ளிக் குதிக்கிறான். அவன் சந்தோஷத்தைப் பார்த்து என் மனசும் ஆறுதலடையுது. வாரத்தில்ல இரண்டு நாள் அவனைப் போய் பார்க்கிறேன். ஒரு இரண்டு மணி நேரமாவது அவனோட இருக்கிறேன்.

லயாவுக்கு அவன் மேல பாசம் ஜாஸ்தி. அஷ்வத்தை யாராவது தப்பாப் பேசிட்டா அவ முகத்திலிருந்து சிரிப்புக் காணாமல் போயிடும். மாசம் ஒரு தடவை அஷ்வத்தைப் பார்க்க ரியாவும், லயாவும் என் கூட வருவாங்க.
சம்பளத் தேதியை ஒட்டி அந்தச் சந்திப்பு நடக்கும்.

அஷ்வ்த்துக்கு அவனுக்கு பிடிச்ச ஏ.ஆர்.ரஹமான் சி.டி. ரியாவுக்கு டெம்டெஷன் சாக்லேட், லயாவுக்கு கோல்ட் பிஷ் இதெல்லாம் வாங்கப் பணம் வேணுமே, அந்தப் பணம் சம்பளத்து அன்னிக்குத் தான் கிடைக்கும். அந்த ஒரு நாள் நான் என்னையே மறந்துப் போயிடுவேன். என் குழ்ந்தைகளின் ச்ந்தோஷத்துக்கு முன்னாடி என் மனசு ரெக்கை முளைச்சுப் பறக்கும்....

மத்தப்படி என் வழக்கமான வாழ்க்கை,
காலை 5 மணிக்கு ஆரம்பிக்கும்... லேசாக் கால்களில் அலை வருட பீச்சல்ல ஒரு மணி நேரம் நடப்பேன்.
ஆறு மணிக்கு போர்வைக்குள்ளே ஒளிஞ்ச்சுட்டு இருக்க என் இரண்டு குட்டி தேவதைகளையும் அவங்க உள்ளங்காலை என் விரலால வருடி எழுப்புவேன்.
அவர்களைச் சோப்புப் போட்டுக் குளிக்க வச்சு... சீவி.. சிங்காரிச்சு...ஸ்கூலுக்கு தயார் செய்வேன்.
ரியாவுக்கு முன் நெத்தியிலே ஒரு இரண்டு முடி புரள்ற மாதிரி முடி வாரி விடணும் அப்போத் தான் அவளுக்கு ச்ந்தோஷம். அந்தச் சந்தோஷத்துல்ல பச்சக்ன்னு என் கன்னத்துல்ல அழுத்தி ஒரு முத்தம் கொடுப்பாப் பாருங்க.. அந்தச் சுகம் எனக்கே எனக்காக ஆண்டவன் படைச்சது.
லயா ரொம்பச் சுத்தம் பார்ப்பா.. போடுற உடுப்புல்ல சின்ன அழுக்கு இருந்தாலும் அவ பட்டு முகம் சுருங்கிப் போயிடும்...ரொம்ப் பார்த்துத் துணியைத் துவைக்கணும் அவளுக்கு. I simply love my little angels.

அப்புறம் அவங்க கைப் பிடிச்சுட்டு ஸ்கூல்லுக்குக் கூட்டிட்டுப் போவேன். லயாவும், ரியாவும் மாறி மாறி ரைம்ஸ் சொல்லுற அந்த அழகை நான் அணு அணுவா ரசிச்சு அனுபவிப்பேன்...அப்படி ஒரு ஆனந்தம்.... அதில் இருக்கும்.
அம்மா டாட்டான்னு சொல்லிட்டு ரெண்டும் கிளாஸ் பார்த்து குடுகுடுன்னு ஓடும்.
ரியா மட்டும் யாராவது குழந்தையை அவங்க அப்பாக் கூட்டிட்டு வந்து பைக்கில்ல இருந்து இறக்கி விடுறதைப் பார்த்தா கண்கள்ல்ல ஒரு தீராத ஏக்கத்தோட அப்படியே பார்த்துகிட்டே நின்னுடுவா.
என் இதயம் அந்த வினாடிகளில் அபபடியே சுக்கு நூறா உடைஞ்சுப் போகும். கஷ்ட்டப்பட்டு என்னைக் கட்டுப்படுத்திகிட்டு ரியா கிட்டேப் போவேன். அவ கண்ணைப் பார்த்து நிதானமா அவங்க அப்பா அவளை எவ்வளவு நேசிச்சாருங்கறதைச் சொல்லுவேன். Her Dad was the best in the world ன்னு அவகிட்டே சொல்லுவேன்.
சொல்லும் போதே சில சமயம் என் கண் எனக்கேத் தெரியாம கலங்கிடும். என் கண் கலங்குறது தெரிஞ்ச உடனே லயா என் பக்கமா வந்து நின்னுக்குவா. பெரிய மனுஷி மாதிரி என் தோளை அழுத்திப் பிடிச்சுக்குவா. அவளுக்கு எல்லாம் தெரியுமோன்னுக் கூட நான் நினைப்பேன்.
"ம்மா ஒண்ணுமில்ல.. எல்லாம் சரியாப் போயிடும்"ன்னு அவ வயசுக்குரிய அந்த மழலைக் குரலில் அவச் சொல்லும் போது என் மனசு அப்படியே நெகிழ்ந்து நிக்கும்.

இரண்டு பேரையும் ஸ்கூல்ல விட்டுட்டு வீட்டுக்கு வந்துக் குளிப்பேன்... ஷ்வர்ல்ல தண்ணியைத் திறந்து விட்டுட்டு மனசு ஓயர மட்டும் அழுவேன்.... என் குழந்தைகளின் மனக்காயங்களுக்கு மருந்தாய் நான் தரும் பொய்களை நினைத்து தேம்பி தேம்பி அழுவேன்.

அவன்... ஆம் என் குழந்தைகளின் தகப்பன்.... என் கடைக்குட்டி லயா என் வயிற்றில இருக்கும் போது ஒர் இரவு என்னை ஒரேடியா உதறிட்டுப் போனதை அவங்க கிட்ட நான் எப்படி சொல்லுவேன்....
ரியாவை அவன் ஒரு நாள் கூடத் தூக்கிக் கொஞ்சாத அந்த இரக்கமற்ற செயல்களை அந்த சின்ன உயிர்களுக்கு எப்படி விவரிப்பேன்..

அவன் செத்துப் போனான்... என் பிள்ளைகளுக்கும் எனக்கும் இருக்கும் வரை எந்த நிலையிலும் அவன் அன்பு காட்டவே இல்லை.... இது தான் உண்மை.... ஆனால்... இந்த உண்மைகளை நான் அவன் என்னிக்குச் செத்தானோ அன்னிக்கே அவனோடப் புதைச்சுட்டேன்.....

என் குழ்ந்தைகளுக்கு... ஒரு அன்பான தகப்பன் தேவை.. அதை என் பொய்கள் அவர்களுக்குக் கொடுக்கும்....

என்றாவது இந்தப் பொய்களுக்கு விடைக் கொடுக்கவேண்டி இருக்கும் அது வரை எனக்கும் என் டைரிக்கும் இந்தப் பொய்கள் சுமையாய் இருந்துவிட்டு போகிறது...

ஆங்...என் பெயரைத் தெரிஞ்சுக்குற ஆவல்ல இதுவரைக்கும் பொறுமையாப் படிச்சவங்களுக்கு என் பெயர் சொல்லணும் இல்ல... என் பெயர் அம்மா... இரண்டு குட்டித் தேவதைகளின் அம்மா....கூடவே ஒரு ராஜகுமாரனுக்கும்

கவி 13: உதிர்ந்த ரோஜா



வானத்தில் அந்தியின்
நாணக் கோலங்கள்
அந்தப் பொழுதில்
அரை நிலாவின்
அலங்கார வெளிச்சத்தில்
முழு நிலாவாய்
பக்கத்தில் நீயிருந்தாய்..

மறக்க முடியவில்லை..

நெஞ்சாம் கூட்டில்
பொன் முகம் புதைத்து
பொல பொலவென நீ
வடித்தக் கண்ணீர்..
இன்றும்
இமை மூடினால்
கண்ணுக்குள்
குளம் கட்டுதே...
பூவிரல் தூரிகையால்
என் மார்பின் மத்தியில்
நீ எழுதிய எழுத்து
உளியாய் உள்ளுக்குள்ளே
இறங்கி நிற்குதே...

மறக்க முடியவில்லை..

மரணம் என்னை
மொத்தமாய் விழுங்கும் வரை
மறக்கவும் முடியாத
நிமிடங்கள்...

அந்தி மாலையும்
அரும்பிய இரவும்
ஆரத் தழுவிய
ஆசை நிமிடங்கள்
வானம் வெறித்து
பார்க்க...
மொழி மறந்து
மௌனம் உடையாக
வார்த்தைகள் தொலைந்து
விழிகளில் தேட..
இதழ்கள் வழியே
இதயங்கள் இணைக்கும்
முயற்சியில்
நீயும் நானும்...
உன் மூச்சுகாற்று
உள்ளத்தைஉலையிலிட..
உள்ளும் புறமும்
உன் வாசம் படர..
உணர்வுகள் இடர...
ஒரு வினாடி
மின்னலாய்..
உன் பார்வை
உரசிப் போக....
இடை நெளிந்தாய்...
இருகரம் நடுவினில்
இடைவெளி
ஒரு கரம் உனது...
மறுகரம் எனது....
என் பெருமூச்சுகள்
என் அனுமதியின்றி
உன்னிடம் விடைக் கோரி நிற்க
என் பார்வையில் வெறுமை...

சூரியக் கூட்டுக்கு கதிர்கள்
திரும்பிக் கொண்டிருக்க
அன்று நான்
கண்டதும் உணர்ந்ததும்
இரண்டு அஸ்தமனங்கள்

நீ போனத் திசையில்
மணலில் ஓவியங்கள்
வெற்று பார்வை
நிறைக்கும்
உன் பாதச்சுவடுகள்...
விடியலுக்கு முன்பொழுது
இருட்டில் நானும்
எனக்கு துணையாக
உன் கூந்தல் விட்டுச் சென்ற
உதிர்ந்த ரோஜாவும்....

Wednesday, February 08, 2006

கவி 12:முகங்கள்



(இந்தக் கவிதை என் தாத்தாவின் நினைவாக எழுதப் பட்டது...புகைப்படங்களில் நான் காணக் கிடைத்த அந்த மனித அடையாளங்கள் என் தாத்தா என்பதை நான் நம்புவதற்கே எனக்கு நீண்ட கால அவகாசம் தேவைப்பட்டது...)

வாழ்ந்தும் வாழும் முதியவர்களுக்கு இந்தக் கவிதையைச் சமர்ப்பிக்கிறேன்...

ஒற்றை மனிதனுக்கு
எத்தனை முகங்கள்
தாய் பாலில் கழுவியெடுத்தப்
பச்சிளம் பூமுகம்
மழலையின் திரவியம் பூசிய
சிறு பிள்ளை முகம்
பருவத்தின் வாசலில்
பருக்கள் பூத்த முகம்
பால்யத்தைத் தொலைத்துத்
தடுமாறி தவித்த முகம்
இளமையில்
இரும்பு முகம்
இப்படி
எத்தனை முகங்கள்
மணமாலைக்குள்
மணக்கும் முகம்
சிரிப்பைச் சூடிய
சிங்கார முகம்
வாரிசை
வரவேற்ற பெருமை முகம்

முகம் மாற்றி
முகம் மாற்றி
முகவரி கிடைத்ததில்
முகத்திலும் வரிகள்
வாழ்க்கையில் ஏறுமுகம்
வாழ்ந்ததில் வற்றிப் போன முகம்
இறுகிப் போன
இயந்திர முகம்
இற்றுப் போன
இனறைய முகம்

ஒற்றை மனிதனுக்கு
எத்தனை முகங்கள்
தாத்தாவின் புகைப்படங்களைத்
தூசுத் தட்டிப் பார்த்து முடித்தேன்...

Monday, February 06, 2006

கவி11:ஒரு கிராமத்துக் காதல்...

கார்கில் போர் செய்திகள் வந்துக் கொண்டிருந்த நேரத்தில் எழுதிய கவிதை... கொஞ்சம் பெரியக் கவிதை...



ஒசந்தப் பனை மரத்தடியிலே...
ஒத்த உசுரா நிக்குறேனே சின்னப்புள்ள..

பட்டாளம்ப் போன மாமன்
பட்டாடை கொண்டு வருவான் என்று..
பாதையோரம் விழி பதிச்சு..
பச்சைக் கிளி ஒண்ணு காத்து நிக்குது....

கால்சட்டைப் போட்ட வயசுல்ல...
காதல் கடிதாசுக் கொடுத்து...
பாவி மனசைக் கலைச்சவரே...
பஞ்ச வர்ணமாப் பதிஞ்சவரே..
நெஞ்சமெல்லாம் பொங்குதய்யா
நித்தம் நித்தம் உன் நினைப்பில்...

கண்ணு ரெண்டும் நவாப்பழம்
கன்னம் ரெண்டும் ஆப்பிள் பழம்
கடிச்சுத் தின்னவா கண்மணியே
காதோரம் காதல் சொன்னவரே
உள்ளத்தின் இடுக்கில் எல்லாம்
உன் குரல் தான் கேட்குதய்யா...
உதட்டோடு விரலை உரசி...
உள்ளுக்குள் தீ வைத்தீரே..
இடுப்பின் இடைவெளியில்...
இதயத்தை சொருகிவிட்டுப் போனீரே..
மாராப்பை விலக்காம..
மனசை மட்டும் களவாடிப் போனீரே..
முகத்தோரம் குத்துதய்யா..
முள் முள்ளா உன் மீசை முடி
மூஞ்சுக்குள்ளே சுத்துதய்யா உன்
மூச்சுக் காத்தின் அனல் வீச்சு...
தலை முடிக்கு நாளாச்சு
தண்ணி வச்சு..
கோதிவிட்ட உன் கைவாசம்
கலந்திருக்கே என் கேசத்திலே..
ஓடக் கரையிலே வச்சு..
ஒத்தை முத்தம் நீ கேட்க..
வெக்கத்திலே நான் ஓட...
விழ போனவளைத் தாங்கி நீ பிடிக்க...
இப்பவும் செவந்துப் போகுது அந்த இடம்...
இனிப்பான் உன் நினைப்பு தான் காரணம்.

போருக்குப் போனவரே
போகையிலே சொன்னதென்ன?
காத்திரு செல்லக் கிளி...
கல்யாண வேளை வரும்..
கழுத்துக்கு தாலியும் மாலையும்
கையோடு கொண்டு வருவேன் நிச்சயமா...

சொன்னதைச் செய்யும் சொக்கத்தங்கமே...
சொந்தமெல்லாம் எதிர்பார்த்திருக்க...
ஊரு மொத்தமும் கூடியிருக்க
உனக்காக மட்டுமே
உசுரைப் புடிச்சிகிட்டு நான் இருக்க..
வானம் மழையைப் பூவாத் தூவ..
வந்தாயே ராசா...
மார் மேலத் தேசக்கொடி தாங்கி..
மாலையோட மதுரை வீரனாய்..
மண்ணுக்காகப் போராடிச் செயிச்சுப்புட்டு
மரணத்தேவன் கிட்டேத் தோத்தீராம்
சொன்னாங்க...
சொல்லிக்கிட்டாங்க..
தூரப்பயணம்...
துணை விட்டுப் போனவரே...

இங்கே...இப்போ....
ஓசந்தப் பனைமரத்தடியிலே...
ஒத்த உசுரா நிக்குறேனே சின்னப்புள்ள...

Thursday, February 02, 2006

கவி10: காதல் மாசம்



டீக் கடைகளில்
தினமும் புகையும்...
நண்பர்களின் சிகரெட்டுக்கு
ஊடே என் காதல்...

தங்கையின் கேலியிலும்...
விவரமறிந்த சித்தியின்
கிண்டலிலும்...
வெட்கப்பட்டுப் புன்னகைக்கும்..
என் காதல்....

வானொலிப் பெட்டியில்
நேயர் விருப்பமாய்
வாசிக்கப்படும்...
சின்னத்திரையில்
குறுஞ்செய்தியாய்
குறுக்கும் நெடுக்கும் ஓடும்...
என் காதல்...

மொட்டை மாடி
கட்டைச் சுவரில்...
சாயங்கால
கடற்கரை மணலில்...
தமிழ் பேசும்
என் காதல்...

எங்கும் எதிலும்...
திசைகள் எட்டிலும்...
கண்கள் தாண்டியும்...
ஆழங்கள் உயரங்கள் என
எல்லாவற்றிலும்...
என் காதல்

அவள் மனசு...

அது ஒன்றைத் தவிர...