Friday, April 28, 2006

கதை 7:நண்பனின் காதலி (1)

"எதுக்கு இப்போ என்னை அவசரமா வரச் சொல்லுற? ... இன்னிக்கு புதன் கிழமைப்பா .. கிளைன்ட் கால் இருக்கு...புரிஞ்சுக்கோ மச்சி"

" எனக்கு உன் கூடப் பேசணும்... அவசரமாப் பேசணும்.... பிளடி ஹெல்... ஐ அம் இன் கிரைசிஸ் இடியட்"
செல்போனின் மறுமுனையில் என் ஆத்ம நண்பன் சிரீஷ் ஏறக்குறைய உயிர் போகும் அவசரத்தில் கத்தினான்.

"சிரீஷ் ரிலாக்ஸ்டா.... நானும் ஸ்கூல்.. காலேஜ் எல்லாம் முடிச்சு வருஷமாச்சு... நீ ஒரு குழ்ந்தைக்கு அப்பனாவும் ஆயாச்சு... சோ கூல் இட் ஆப் பட்டீ"
சிரீஷை எப்படியாவது அமைதிப்படுத்தி விட வேண்டும் என அதி தீவிரமான முயற்சியில் இறங்கி வழுக்கி விழுந்தேன்... பின்னே அவன் அடுத்துக் கேட்ட கேள்வி அப்படி....

"நட்புன்னா என்னான்னு தெரியுமா உனக்கு...? தேவான்னா என்னான்னா தெரியுமா உனக்கு அப்படின்னு அடிக்கடி தலைவர் டயலாக்க எடுத்து விட்டா மட்டும் பத்தாது... நண்பனுக்கு ஒண்ணுன்னா அப்படியே துடிச்சு கிளம்பி வரணும்.... இப்படி நண்பனைக் கெஞ்ச விட்டுட்டு முதலாளிக்குச் சொம்பு தூக்கிட்டுப் போகக் கூடாது... புரியுதா?"
கொஞ்சம் என்ன ரொம்பவும் ஒவராவேப் பேசிட்டு காதுல்ல அடிக்கற மாதிரி படக்குன்னு போனை வைச்சுட்டான் சிரீஷ்.

காபி மெஷின்ல்ல சூடா ஒரு கேப்பசின்னோ கப் எடுத்துட்டு தனியா போய் உட்கார்ந்தேன்.... ஜன்னல் வழியா என்னை தாலாட்டி சீராட்டி வளர்த்த சென்னை மாநகரம் தகதகன்னு மாலை வெயில்ல ஜொலிக்கறது தெரிஞ்சுது.

மனசு அப்படியே அதில்ல மயங்கிப் போச்சு....

ம்ம்ம் கதைப் படிக்கிற உங்களுக்கு ஒரு பிளாஷ் பேக் மூட் கொண்டு வரணும் இல்ல.. அதான் இந்த ஜன்னல் மேட்டர்....
கதை ரொம்ப சிறிசு தான்.... ஒரு இரண்டு வரி... கூட ஒரு நாலு வரி வரும்...

சிரீஷ் என் பள்ளித் தோழன் ... நாலாவதுல்ல இருந்து பன்னிரண்டாவது வரைக்கும் ஒண்ணாப் படிச்சோம்... அதுக்கு அப்புறம் அவன் எஞ்ஜினீயரிங் போனதும் நான் நுழைவுத் தேர்வில் கோலடித்து கிடைச்ச சீட்டில் விவேகாவில் கணக்கு படித்து .....
அவன் சீக்கிரமே மும்பைக்கு வேலையாகிப் போனது... நான் கணிதம் முடித்து நிர்வாகப் படிப்பில் இன்னொரு டிகிரி முடித்து அப்பா வாங்கி கொடுத்தக் பைக்கில் அவர் காசில் பெட்ரோலும் போட்டு வீதி வீதியாய் வேலைத் தேடி அலைந்ததும் வரலாற்று ஆசிரியர்களால் இருட்டிக்கப் பட்ட உண்மைகள்...

வாழ்க்கையின் வெவ்வேறு திசைகளில் நாங்கள் இருவரும் நகர்ந்தப் போதும் எங்களுக்குள் இருந்த நட்பு எங்க நெஞ்சாங்கூட்டை விட்டு நகரவில்லைன்னா பாருங்க...
அவன் வாழ்க்கையின் எக்கு தப்புக்கள் எனக்குள் புதைக்கப்பட்டதும்... என் வாழ்க்கையின் புனிதங்கள் அவன் மனத்தில் எரிக்கப்பட்டதும் சத்தியமாய் யாருக்கும் தெரியாது இனி யாருக்கும் தெரியப் போவதுமில்லை...அப்படி ஒரு நட்பு எங்களுக்குள்ளே....
அந்த நட்பு இன்றும் நீடிப்பதில் இருவருக்குமே சந்தோஷம்....

ஆனால் அன்றுப் போலவே இன்றும் சிர்ரிஷின் பிடிவாதம் தொடர்வதில் எனக்கு கொஞ்சம் கூட சந்தோஷம் இல்லைங்க....அவன் கிட்டே எவ்வளவு தான் எடுத்துச் சொல்லுறது.. கேட்க மாட்டான்... சின்ன சின்ன விஷயத்துக்கும் ஆகாயத்தும் பூமிக்கு தாவுவான்.. தவ்வுவான்.... நம்மளையும் சேத்து தவ்வ வைப்பான்... ஆனா சிரீஷ் சிர்ரீஷ் தான்...அவனுக்காக அவன் செய்யுற எல்லா இம்சையும் பொறுத்துக்கலாம்...

இதோ அவன் என்னைத் திட்டிட்டான்... ஆனா மனசு கேட்கல்ல... அவனுக்கு எதோ பிரச்சனை அதான் அப்படி பேசிட்டான்... நான் தான் போகணும்... போய என்னன்னு கேட்கணும்.

ஆனா இதே வார்த்தையை வேற எவனாவது பேசியிருந்தா அவ்வளவு தான்..... எப்படி பேச முடியும் நம்ம கதை நம்ம நட்புக்களுக்கு மட்டும் தானே தெரியும் ... அவங்களுக்கு தானே அந்த உரிமை இருக்கு....

"தேவ்... கிளைன்ட் ஆன் லைன்....உங்கிட்டே பேசணுமாம்...." புதுசா வேலைக்கு சேர்ந்திருந்த திருச்சிப் பொண்ணு சொன்னது பாதி காதில் விழுந்தது.....ஜஸ்ட் டெல் ஹிம்... ஐ வில் கால் பேக்...."
வழக்கமான கால். ஒரு நாள் விட்டா ஓரு ரோமத்துக்கும் சேதாரம் வராது.அரை நாள் விடுப்பில் கிளம்பினேன்.காரை நேராக அடையார் நோக்கி பறக்க விட்டேன்.
கார் ரேடியோவில்... வேட்டையாடு விளையாடு பாட்டு ஓடிக் கொண்டிருந்தது... சும்மாச் சொல்லக் கூடாது ஹாரிஸ் மியுசிக் நல்லாவே போட்டிருக்கான்ப்பா.

இந்திரா நகரில் அவன் வீட்டு வாசலில் காரை நிறுத்தினேன்.... என் நண்பனின் மூன்று வயது ஜூனியர் துவாஷ் துள்ளி வந்து என்னைக் கட்டிக்கொண்டான்... என் பாக்கெட்டில் அவனுக்காக ரெடிமேட்டாகக் காத்திருந்த டெம்டெஷன் சாக்லேட்டை எடுத்து அவனிடம் நீட்டினேன்.சிரீஷின் மனைவி சுனிதா சிரித்தப் படி வாசலுக்கு வந்தாள்.

"அண்ணா... அவனை நல்லாக் கெடுத்து வைங்க... எப்போப் பாரு சாக்லேட்.... "
"சின்னப் பையனுக்கு அது தான் கொடுக்க முடியும்..எங்க உன் சுவீட் ஸ்பெண்ட்?"
"மேலே ரூம்ல்ல... ஒரே டென்ஷன்... வேலையை விடப் போறாராம்... ஒரே புலம்பல்... என்னால கிட்டப் போக முடியல்ல காட்டுக் கத்தல் வேற. நீங்கத் தான் உங்க பிரண்ட்க்குச் சரி."

மொட்டை மாடியில் வாட்டர் டாங்க் மேல அந்த அகோர வெயில்ல கையை முட்டிக்கு மேலே மடக்கி வச்சுட்டு தலைக் குனிஞ்சு உட்கார்ந்திருந்தான். எனக்கு சுளுக்குன்னு சிரிப்பு வந்துடுச்சு.

இதே போஸ்ல்ல அவனை நான் ஸ்கூல் டேஸ்ல்லருந்து பாத்துட்டு இருக்கேன். சிரீஷ் இப்படி தவக்கோலம் பூண்டு இருக்கான்னா அவனுக்கு சீரியசாவே எதோ பிரச்சனைன்னு அர்த்தம். அதாவது அந்தப் பிரச்சனை அவனுக்கு சிரீய்ஸ்ன்னு அர்த்தம். சிரிப்பை அடக்கிட்டு.. மெதுவா அவன் பக்கம் போய் ஆஜர் கொடுத்தேன்.

"உன் வாய் வாக்குப் பலிச்சுடுச்சு. இப்போ எனக்கு வேற வழி இல்ல... வேலையை விடப் போறேன்.. உனக்கு சந்தோஷ்ம் தானே." படபடவென வெடித்து தள்ளினான்.

அவனைப் பேசவிட்டுக் கேட்பது தான் சிறந்ததுன்னு முடிவு பண்ணிகிட்டு அமைதியா நின்னேன். அவன் பாட்டுக்குப் புலம்பி தீர்த்தான்.
ஒரு 30 முழுசா அவன் புலம்பலைக் கேட்டும் அவன் பிரச்சனையின் மையப்புள்ளியை என்னால் நெருங்க முடியாது போகவே.... அவன் சட்டையைப் பிடித்து இழுத்து அவன் பேச்சை நிறுத்தினேன்.

"என் ஆபிஸ்ல்ல எனக்கு ப்ராப்ளம் இல்லன்னு நினைக்கிறீயா... DAMN IT.. EVERYBODY HAVE THEIR OWN PROBLEMS U *$%@%^"

அவன் மேலுக்கு கொஞ்சம் சாந்தம் அடைந்ததுப் போலிருந்தது.... அவனுக்குள் அலை அடித்தது என்னால் புரிந்துக் கொள்ள முடிந்தது.

"இப்போ சொல்லு...WHAT IS YOUR PROBLEM?"
சட்டையைப் பிடித்திருந்த என் கையை விடுவிக்காமலே நின்றான் சிரீஷ். நானும் விடறதா இல்லை.
"ர ஞ் சனி..."
அவன் சேர்த்து தான் சொன்னான். எனக்கு தான் எக்கோ எபெக்டில் கேட்டது.
சட்டையை விட்டிட்டு சகஜ நிலைமைக்குத் திரும்புனேன்.

"யார் மாமா.. உன் காலேஜ் ஜீனியர்... அந்த கோடம்பாக்கம் ட்ரஸ்ட்புரம் பிகரா...."

"கோடம்பாக்கத்துல்ல தான் இன்னும் இருக்காளான்னு எனக்கு தெரியாது.. இப்போ என் ஆபிஸ்ல்ல இருக்கா..."

"வாவ்... மீண்டுமொரு காதல் கதை... நீ மச்சக்காரன்டா மாப்பூ நடத்துடா" என்று அவனை ஏத்தி விட்டேன்.

"செருப்பாலேயே அடிப்பேன்... "

"மச்சி.. இது அவ டயலாக் மச்சி... நீ ஏன்டா மாத்தி பேசுற?"

"மவனே... எனக்கு வர்ற ஆத்திரத்துக்கு உன்னை முழுசா மூணுவாட்டி வெட்டிப் போட்டாலும் தீராதுடா" சிரீஷ் சீறினான்.

"மச்சி... கூல் டவுண்... அவளுக்கு கல்யாணம் ஆயிடுச்சா? விசாரிச்சீயா....?"

"அது இப்போ ரொம்ப முக்கியம்..."என்று அலறியவன் அடிக்குரலில் "இல்லைன்னு தான் நினைக்கிறேன்" என்று ராகம் போட்டான்.

"இல்லீயா... வெரி குட்... உனக்கு செகண்ட் இன்னிங்க்ஸ்க்கு வாய்ப்பு மச்சி" என்று அவனை மேலும் கிண்டிவிட்டேன்.

இது வரைப் படித்தவர்களுக்கு உள்ளங்கை நெல்லிக்கனியென சூழ்நிலைவிளங்கியிருக்கும்ன்னு நம்புறேன்.

இருந்தாலும் ஒரு சின்ன ரீகேப் ஓகேவா?

1998... நானும் சீரிஷ்ம் காலேஜ் படிச்ச டைம்... கைப்பு சொல்லுறாப்பல்ல எங்களுக்கு அப்போ வாலிப வயசு...கொஞ்சம் அழகான பொண்ணைப் பார்த்துட்டாலே உடனே நான் அவனை மச்சாங்கறதும்.. அவன் என்னை மாமாங்கற்தும் சகஜமானக் காலம்... இப்படி எங்களுக்குள் நாங்க எத்தனையோப் பொண்ணுங்களைக் கொடுத்து வாங்கி... அந்தப் பொண்ணுங்க வேற யார் கூடவோ போறதைப் பார்த்து உள்ளம் வீங்கிய அது ஒரு அழகிய கனாக் காலம்...

நாம் எல்லோரும் நம் வாழ்க்கையில் அப்படி ஒரு காலகட்டத்தைக் கட்டாயம் கடந்து வந்திருப்போம்.
சிரீஷ் வாழ்க்கையில் அப்படி ஒரு பூங்காற்றாய் புகுந்தவள் தான் ரஞ்சனி.... என் நண்பனின் காதலி.

"ஒகே சிரீஷ்... ஜோக்ஸ் அப்பார்ட்....இன்னும் அவ பழைய விஷயங்களை எல்லாம் ஞாபகம் வச்சுருப்பான்னு நினைக்கிறீயா..."
சுனிதாப் போட்டக் காபி செம ஸ்ட்ராங்க்... காபியைப் பருகியப் படி பிரச்சனையை அலச ஆரம்பித்தோம்.

"ம்ம்...ஞாபகம் இருக்குன்னு தான் நினைக்கிறேன்..."

"மச்சி.. காலேஜ் வாழ்க்கைங்கறது பட்டாம்பூச்சி தினங்கள்... யூ நோ இந்த மாதிரி சின்ன சின்ன குறும்புகள் எல்லாம் அதுல்ல சகஜம்....அப்போ அவ சின்னப் பொண்ணு ... மே பி 18... இப்போ அவ 28... அவளூக்கு இப்போ பக்குவம் இருக்கும் ...சோ I DONT THINK THERES ANY NEED FOR YOU TO BRING THE HOUSE DOWN"

"இல்ல.. நீ தப்பா புரிஞ்சுட்டு இருக்கே... நானும் அப்படித் தான் நினைச்சேன்...போன வாரம் என்னோட பாஸ் என்னைக் கூப்பிட்டு இந்தப் புது புராஜெக்ட் பத்தி பிரீப் பண்ணும் போது...என்னோட சந்தோஷத்துக்கு அளவே இல்ல... I THOUGHT MY LIFE IS MADE... எல்லாம் புராஜெக்ட் லீடா அவளைப் பார்க்கற வரைக்கும்...I AM NOT A MALE CHAVENIST... இதுக்கு முன்னாடி நான் லேடி பாஸ்கிட்டே ஓர்க் பண்ணியிருக்கேன்...இவளுக்கு என்னைப் பார்த்த உடனே அப்படி ஒரு கடுப்பு...."

"இருக்காதாப் பின்னே" இது என்னுடைய இடைச்செருகல்.

"என்ன இருக்காதேப் பின்னே நக்கல்... யூ நோ என்னை அவ எப்படிப் பார்த்தாத் தெரியுமா? அமெரிக்காகாரான் ஈராக்காரனைப் பாக்குற மாதிரியே பார்த்தாடா... எனக்கு அப்பவேப் புரிஞ்சுப் போச்சு... "

"DONT OVER REACT" இது நான்.

"இல்ல நான் ஓவர் ரிஆக்ட் பண்ணல்ல... அவளுக்கும் என்னப் பிடிக்கல்ல.. எனக்கு அது புரியுது"

"என்ன நடந்துச்சுன்னு விவரமாச் சொல்லுறீயா?"

"என் பாஸ் எல்லோரையும் அவளுக்கு அறிமுகம் செஞ்சு வச்சார்... நான் தான் கடைசி.. எல்லாருக்கும் சிரிச்சுகிட்டே கைக்கொடுத்து ஹாய் சொன்னவ என்னைப் பார்த்ததும் உதட்டை பிதுக்க்ட்டு வெறுமெ தலையை மட்டும் ஆட்டுனா.. அந்த உதட்டை அஷ்ட்டகோணலாப் பிதுக்குனதுக்குப் பேர் ஸ்மைலாம்... அதுப் பார்த்து நாலு பேரு உருகுறான்..."
எனக்கு சிரிப்பு வந்தது.

"என்னை என்ன நினைச்சுட்டான்னாத் தெரியல்ல... வந்த உடனே என் கேபினை மாத்திட்டா.. கேட்டா எதோ மேனஜ்மென்ட் ஸ்டெரஜின்னு எக்ஸ்க்யூஸ் கொடுக்குறா.. ஒரமா ஒதுக்கி ஒரு கேபின்.. அவ்க் கண்ணுல்லயே நான் படக் கூடாதாம் அதான் அப்படி ஒரு ஏற்பாடு.. I CAN UNDERSTAND ALL HER DAMN MOVES"
எனக்கு மேலும் சிரிப்பு வந்தது.

"இப்படி அவமானப் பட்டு அவகிட்ட வேலை செய்ய எனக்கு இஷ்ட்டம் இல்லை.. நான் பிரொபஷனல்.. வேலைக்காரன் எங்கேப் போனாலும் பொழைச்சுக்குவேன்டா.. I AM GOING TO RESIGN"

அவன் வார்த்தையே அவனை மடக்க உதவும்ன்னு நான் நினைக்க்வே இல்லை. ஆனா உதவியா ஆகிப்போச்சு.. நான் அதைச் சரியாப் பயன்படுத்த முடிவுப் பன்ணிட்டேன்.

"எங்கேப் போனாலும் நீ பொழைச்சுக்குவே அப்படிதானே?"

"அதில உனக்கென்ன சந்தேகம்...? "

"அப்படின்னா இங்கேயேப் பொழைச்சுக் காட்டுடா..."

அவன் விரித்த வலையில் அவனையே விழ வைத்தேன்.. அவன் கொஞ்சமும் எதிர்பார்க்காத அஸ்திரம் என்னிடமிருந்து புறப்பட்டது.. அவன் எதுவும் பேசவில்லை. அவன் யோசிக்கிறான் எனபது எனக்குப் புரிந்தது... நான் கொஞ்சம் நகர்ந்து எதிர்பக்கம் சென்று நின்றேன். மறுபடியும் ஒரு சின்ன பிளாஷ் பேக்...

1998 சிரீஷின் காதல் கதைத் தொடரும்...

நண்பனின் காதலி - பகுதி 2
நண்பனின் காதலி - பகுதி 3

Thursday, April 27, 2006

கவி 16: ஒரு முடிவின் கதை

அன்றொரு அந்திப் பொழுதினில்
அருகினில் நீயிருந்தாய்...
ஆசையில் நானிருந்தேன்...
விரல் பட்டது
வெட்கத்தை நீ உடுத்தினாய்..
விழி சுட்டது..
வெப்பத்தில் நான் எரிந்தேன்....
மல்லிகை வாசம்...
உன்னில் பூக்க...
இதழ் தேடினேன்
இதயம் திருடினாய்....
உன்னில் தொலைத்தது
உன்னில் தேட....
என் மொத்தமும்
உன்னில் சங்கமம்....
மார்பில் பூக்கோலங்கள்..
கண்ணீரால் இதய வாசல் தெளித்தாய்...
கையளவு உலகம்
அதில் நீயும் நானும் மட்டும்..
வார்த்தைகள் வழிவிட்டு நிற்க...
உயிரெழுத்தாய் நீயும்
மெய்யெழுத்தாய் நானும்
ஆய்தெழுத்தாய் நம் காதலும்...
உன்னில் புதையவா...
உன்னில் கரையவா...
மொழிகளுக்கு மவுனம் உடுத்தி...
வளைகளுக்கு வார்த்தைப்
பயிற்சி கொடுத்ததில்
கிடைத்தக் காயங்கள்
அன்பு பரிசு....
சுவாசத்தின் ஓசைகளில்
யாருமறியாக் கவிதைகள்
இயற்றினோம்...
கவிதைகளை...
அச்சுக் கோர்க்க...
ச்சீ வெட்கம்
வேண்டாம்....
இது நமக்கான கவிதை...
அந்தக் கணத்தில்
எனக்குத் தோன்றியதைச் சொன்னேன்
"வாழ்க்கை எவ்வளவு அழகானது?"
மீண்டும் விழி திறந்தாய்...
உன் கண்ணீர் இம்முறை
சுடவில்லை...
மாறாக குளிர்ந்தது.....
கரம் பற்றிய படி...
விரல் பேசிய படி...
உன் விழியில் நானும்...
என் விழியில் நீயும்...
அப்படியே கரைந்துப்
போயிருக்கக் கூடாதா?
ஆ....
ஆ...
ஆ..
அந்த இரவினைக் குடித்தக்
களிப்பில்
சிவந்த சூரியன்....
சுள்ளென முகத்தில் அரைய...
விழித்துக் கொண்டேன்...
என் நிர்வாணம்
என்னை நிந்தித்தது...
உதிர்ந்த மல்லிகையும்...
புகைந்த சிகரெட்டும்...
உடைந்த மதுக் கோப்பையும்...
கண்ணீர் மறந்தக் கண்களும்....
அத்தோடு...
ஜன்னலோரமாய்
என்றோ கிழிந்து
இன்னும் தொங்கும்
என் காதலும்....

Wednesday, April 12, 2006

கவி 15: ரகசியம்


உன்னைப் பற்றி
ஒரு கவிதை எழுதி
ரகசியமாய்
ஒளித்து வைத்திருந்தேன்
என் விழிகளுக்குள்...

பிரியும் நேரத்தில்
ரகசியம்
வெளியானது
நீ புரிந்துக் கொண்டாயா?
அது தெரியாது
எனக்கு..

எழுதிய கவிதை
இன்னும் விழிகளுக்குள்
பத்திரமாய்...

எனக்கானப் பொழுதுகளில்
உன் நினைவுகள்
நீள்கையில்
அந்தக் கவிதையை
இன்றும் வாசிக்கிறேன்
ரகசியமாய்.....