Thursday, May 25, 2006

கவி 17: பழையக் கிறுக்கல்கள்



என் மனசு
வெள்ளையாய் தான் இருந்தது..
நீ...உன் பார்வைகளால்
அதில் ரங்கோலிபோடும் வரை....

------------------------------------------------

உன் கண்ணில்
தூசு விழுந்தாலும்
கலங்கிப் போவதென்னவோ
நான் தான்..
உன் கருவிழி குளத்திற்குள்
கலங்கலாய் என் உருவம்..

-------------------------------------

சொல்லித் தெரிவதில்லை
காதல்...
நீ சொன்னது...
கடற்கரையோரம்...
திரும்பி பார்த்தேன்...
என் பாதச் சுவடுகள் மீது
உன் சின்னக் காலடி தடங்கள்..

---------------------------------------------

உனக்கு வெட்கப் படத் தெரியுமா?
ச்சீ போடா...என்றாய்
உன் கன்னம் சிவந்தது
அந்த கன்னச் சிவப்பில்
நான் படித்து ரசித்த
மூன்றெழுத்து கவிதை
கா...த...ல்......

Wednesday, May 17, 2006

கதை 7:நண்பனின் காதலி (3)

நண்பனின் காதலி - பகுதி 1

நண்பனின் காதலி - பகுதி 2

பீச் ரயில் நிலையத்தில் காலையில் இருந்து காக்க காக்க வைத்தான் நண்பன் சிரீஷ்.

"இன்னிக்கு அவ எப்படியும் வ்ருவா...இதை விட்டா எனக்கு வேற வாய்ப்பு அமையாது மாப்ளே.."

மதியம் உச்சி பொழுதுல்ல கொளுத்துற வெயில்ல நண்பனோடக் காதலுக்கு நீர் பாய்ச்சும் வேலைப் பாக்க வந்த என்னை நானே நொந்துக்கறதைத் தவிர எனக்கு வேற வழி தெரியல்ல.

மூணாவது ஓசி சிகரெட்டும் முழுசா ஊதி முடிச்சு க்டுப்பு தலைக்கேற உக்காந்து இருந்தேன். அந்நேரம் எந்த வடநாட்டுப் புண்ணியவானும் புண்ணியவாட்டியும் பெத்தெடுத்தாயங்களோ அவங்க வாழ்க.... கோதுமை அல்வா கடை ஒண்ணு... டைட்டா ஜீன்ஸ் போட்டுகிட்டு தனியா அங்கே வந்துச் சேர்ந்ததுச்சு.

அந்த கொஞ்ச நேரத்துல்ல எனக்கும் அந்தப் பொண்ணுக்கும் ஏற்ப்ட்ட தவிர்க்க முடியாத ஒருதலைக் காதல் காவியத்தைப் பத்திப் பிறகு விரிவாச் சொல்லுறேன். இப்போதைக்கு என் நண்பனின் காதல் கதையிலே கவனம் செலுத்துவோம்

அல்வாக் கடையை வாய் பிளந்துப் பாத்துகிட்டு எனக்குத் தெரிஞ்ச பிராத்மிக் ஹிந்தியிலே ஒரு மூணு ஹிந்திப் பாட்டை அதுல்ல கொஞசம் இதுல்ல கொஞ்சம்ன்னு கலந்துப் பாடிகிட்டு இருந்தேன்.

நண்பன் சிரீஷ் படு டென்சனா வர்ற போற ஒவ்வொரு ரயில் பொட்டியிலும் அவளை அதான் அவன் காதலிக்கற அவளைத் தேடிக்கிட்டு இருந்தான்...

ஒரு சின்ன பிரேக் எடுக்க நம்ம பக்கம் வந்தான். நான் பாட முயற்சி பண்ணிகிட்டு இருந்த ஹிந்திப் பாட்டுக்கு வார்த்தை எடுத்துக் கொடுத்து ஹெல்ப் பண்ணான். நான் வெட்கம் பார்க்காமல் தேங்க்ஸ் சொன்னேன்.

"ச்சீ... எனக்கு உதவி பண்ண வந்துட்டு....தனியா ரூட் போட்டு... தப்பு தப்பா இந்தி பாட்டுப் பாடிகிட்டு உக்காந்து இருக்க.... இதுல்ல எனக்கு தேங்க்ஸ் வேற சொல்லுற....உன்னை....."
சிரீஷ் கோபத்தையும் எரிச்சலையும் காட்ட ஒரு ஆள் தேவை. அந்த இடத்தில் என்னை விட்டால் அவனிடம் அகப்படுவார் யாரும் இல்ல.

"இந்தா மச்சி இந்த தம் போடு... அப்புறம் கூலா ஆயிடுவே..."

"அடிங்க... என் காதலுக்கு ஆப்பு வைக்கிற முடிவில்ல உறுதியா இருக்க நீயி.. அவ இப்போ வர்ற நேரம் நான் தம் பத்த வக்கணும் அதை அவ பாக்கணும்... அத்தோட எல்லாத்துக்கும் மங்களம் பாடணும் நல்ல நண்பன்டா நீயி.. வாழ்க உன் நட்பு"

ம் எனக்கும் கோவம் வந்தது.. சரி இப்போ வேணாம் அப்புறம் வச்சிக்கிறேன் உனக்கு தனி கச்சேரி. இப்போ நீ வாசிடா மகனே.. என மவுனம் காத்தேன்.

இன்னொரு சிகரெட் எடுத்து பற்ற வைக்கப் போனேன். என் உதட்டில் வைத்த சிகரெட்டை ஈவு இரக்கமின்றி பிடுங்கி எறிந்தான்.

"ப்ளீஸ் அவ வந்துப் போற வரைக்கும்.. என் செல்லம் இல்ல" இருகைக் கூப்பியது என் நட்பு. நான் ஒப்புக் கொண்டேன்.

"வருவாளா?" இது நான்.

"இன்னும் இருபது நிமிஷம் இருக்கு.. அடுத்த ட்ரெயின்ல்ல கண்டிப்பா வருவா" அவன் பதில் சொன்னான்.
"சரி லெட்டரை ஒரு நல்ல கவர்ல்ல போட்டுக் கொடு" நான் ஐடியா கொடுத்தேன்.

"OH MY GOD"அவன் கரண்ட் கம்பியில் கால் வைத்ததுப் போல் அலறினான்.

மொத்த பீச் ஸ்டேஷனும் திரும்பிப் பார்த்தது. ம்ம் மொத்தம்ன்னு நான் சொன்னது அங்கிருந்த ஒரு பத்து பேர். அதுல்ல என்னுடைய அல்வா கடையும் அடக்கம்... யப்பா என்ன ஒரு லுக்..அதை ரசிக்க விடாமல் படுபாவி மறுபடியும் அலறினான்.

"அந்த லெட்டர் தான் அன்னிக்கு தண்ணி அடிக்கும் போது வாங்கி நீ கிழிச்சிப் போட்டுட்டியே"
"ஆமா.. வேற லெட்டர் எழுதிட்டு வர்றல்லயா"

"அப்படின்னு லெட்டர் இல்ல... நேராச் சொல்லிடு"

"நான் மாட்டேன்"
"ஏன்"
"அது வந்து மாட்டேன்னா.. மாட்டேன்"

"ஓ.. செருப்பு டயலாக் ஞாபகம் வந்துருச்சோ"

அவன் பதில் சொல்லவில்லை.
எனக்கென்ன உங்களூக்கும் தான் காரணம் புரிந்திருக்கும்

"ஒண்ணு பண்ணு வீட்டுக்குப் போய் நிதானமா லவ் லெட்டர் எழுதிட்டு வந்து நாளைக்குக் கொடுப்போம்... இன்னிக்கு ஓர்க் அவுட் ஆகாது போ"
என் கண்கள் அல்வா கடையை வட்டம் இட்டன. யப்பா என்ன ஒரு....அவன் மறுபடியும் அலறினான்.

"நீ நினைச்சா எனக்கு உதவி பண்ணலாம்?"
"என்ன உதவி?"

"எனக்கு அவசரமா நீ ஒரு லவ் லெட்டர் எழுதி கொடுடா மாப்பூ.. உம் திறமை மேல எனக்கு நம்பிக்கை இருக்குடா"
"பதினைஞ்சு நிமிசத்துல்ல காதல் கடிதமா? நோ..நோ..."
"ப்ளீஸ் டா.. இதை விட்டா எனக்கு வாய்ப்பு கிடைக்காதுடா"

அவனைப் பார்த்தால் பாவமாய் இருந்துச்சு. ஒத்துக் கொண்டேன்.

"மச்சி நான் சொல்ல சொல்ல நீ எழுதுடா"

"எனக்கு நல்ல நேரத்துல்லயே தமிழ் தகராறு.. அதுவும் இந்த நேரத்துல்ல யுத்தமே வந்துறும்டா.. ப்ளீஸ்டா"

அவன் சொல்வதிலும் ஒரு நியாயம் இருந்ததை என்னால் மறுக்க முடியவில்லை.

ஒரு வெள்ளைப் பேப்பர்... பால் பாயிண்ட் பேனா என் கைக்கு வந்தது.
உபயம் சிரீஷ்.

அல்வா கடையைப் பார்த்ததில் எனக்குள் காதல் மழைப் பொழியத் துவங்கியது.. கூடவே கவிதையும் புயலெனப் புறப்பட்டது.

ஒரு பெண் ஒரு ஆணுக்குள் எப்படியெல்லாம் அரசாங்கம் செய்கிறாள்.

இரு விழிகளால் ...அவன் இதயம் கிழித்து..
தனக்கென அவனில் ஒரு இடம் பிடித்து...
சின்னச் சிரிப்பினால் அவனைச் சிறையெடுத்து...
அவனைத் தன்னுடையவனாக்கி...
அவனை மெல்ல மெல்ல ஆளுகிறாள்...
இப்படி ஆளப்படுவதையே ஒவ்வொரு ஆணும் உள்ளூர விரும்புகிறான்....

எழுதினேன்... வார்த்தைகளை அப்படி இப்படின்னு புரட்டிப் போட்டு.. என்னமா எழுதினேன் தெரியுமா?

கிட்டத்தட்ட எழுதி முடித்த நிலையில மறுபடியும் அவனிடமிருந்து ஒரு அலறல்...

"அவ வந்துட்டா டா"
நான் லெட்டரை அவனிடம் நீட்டினேன். அவன் வாங்கிக் கொண்டு ஓடினான்.

"டேய் ஒரு தடவப் படிச்சுப் பாத்துட்டு கொடுடா"

"நீ எழுதுனாச் சரியாத் தான் இருக்கும்"
சொல்லிக்கிட்டே அவளை நோக்கி ஓடினான். எனக்குள் ஒரு பெருமிதம்.
நட்பின் பெருமிதம்.

பெருமித உணர்வினில் இருந்து விடுபட்டு அல்வாக் கடைப் பக்கம் பார்வையைத் திருப்பினேன்.

அங்கே....

ஜாங்கிரி கல்ர்ல்ல ஒரு சேட்டு பையன் அல்வா கடை இடுப்பை வளைச்சி என்னமோ பண்ணிகிட்டு இருந்தான். வளைஞ்சது அவ இடுப்பு. ஆனா ஒடைஞ்சது என்னமோ என் மனசு.

அண்ணா சொன்னார் எதையும் தாங்கும் இதயம் வேண்டும்ன்னு.. அது எனக்கே எனக்கு சொன்னார் போலன்னு பாக்கெட்டுல்ல கைவிட்டு சிகரெட் தேடுனேன்.

நான் சிகரெட் தேடவும் சிரீஷ் ஓட்டமா வந்து என்னை இடிக்கவும் சரியா இருந்துச்சு..

பின்னாடி செருப்பு வருதான்னு தலையைச் சாய்ச்சி டவுட்டா நான் பாத்தேன். அப்படி எதுவும் இல்ல.

ஷிரீஷ் சிகரெட் பற்ற வைத்தான் எனக்கும் சேர்த்து. இரண்டு பேரும் படிக்கட்டு மறைவினில் அம்ர்ந்தோம்.

"லெட்டரைக் கொடுத்துட்டேன்"

"என்னச் சொன்னா?"

"எங்கப்பா உங்களுக்குப் பின்னாடி வந்துட்டு இருக்கார்.. அப்படியே போயிடுங்கன்னு சொன்னா"

"அப்புறம்"

"அதான் பாத்தி இல்ல.. ஓடி வந்துட்டேன்..நீ என்ன நினைக்கிற?"

"ம் சோ.. செருப்புத் தூக்கல்ல... உன்னை அவங்க அப்பா கிட்டப் போட்டும் கொடுக்கல்ல..."

"ஆமா"

சிரீஷின் கன்னங்கள் ஆப்பிளாய் சிவந்தன். பொண்ணு வெக்கப் படுறதைவிட ஒரு ஆண் வெட்கப்படுறது இன்னும் அழகு தான். காதலித்தால் ஆணுக்கும் வெட்கம் வரும் போலும்.

மாடிப் படிகளில் ஏறி போன ரஞ்சனி அங்கிருந்து சிரீஷ் தென்படுகிறானா என கண்களை நாலுபுறமும் சுழல விட்டாள்...அவனைக் காணாமல் அவள் முகம் சுருங்கியது. காதலுக்கே உரிய உலக குணங்கள் அவள் முகத்தில் தென்பட்டன.

நான் சிரீஷ் பக்கம் திரும்பினேன்.

சிரீஷ் பெரிய காரியத்தைச் சாதித்துவிட்ட திருப்தியில் சிக்ரெட்டை ஆழமாய் சுவைத்து வானம் பார்த்து ஊதினான். தனக்குத் தானே சிரித்துக் கொண்டான்.

அவன் சந்தோஷம் என்னையும் தொற்றிகொண்டது.

அப்போதைக்கு ஒலிம்பிக்ல்ல ஓடி கோல்ட் மெடல் வாங்கியிருந்தாக் கூட அவ்வள்வு சந்தோஷப் பட்டிருப்போமோ என்றால் சத்தியமாக இல்லை என்றே சொல்லுவேன்.

" யேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்" இருவரும் ஒரே சத்தமாய் கத்தினோம்...

நாங்கள் கத்தி முடிக்கவும் .. அந்த அல்வா கடை அவளுடன் இருந்த ஜாங்கிரி தோளில் சாய்ந்துக் கொண்டு எங்களைக் கடப்பதற்கும் சரியாக இருந்தது.

"யே லோக் பாகல் ஹெய்ன்" என்று குச் குச் ராணி குரலில் அவனிடம் குறிப்பாக என்னைக் காட்டிச் சொன்னாள்.

"அடிங்க..." என்று எழுந்த சிரீஷின் கையைப் பிடிச்சு இழுத்து உட்கார வைச்சேன்.

"என்னடா?" என்று பரிவாய் கேட்டான் சிரீஷ்.

"விடுடா.. அவளை நான் லவ் பண்ணிட்டேன் .. பொழைச்சுப் போகட்டும் "

நான் சிரியசாச் சொன்னான். படுபாவி சிரீஷ் விழுந்து விழுந்து சிரித்தான். இப்படி அன்று மாலைக் கும்மாளமாய் வீடு திரும்பினோம்.

அது நடந்தது 2000ஆம் வருடம் மே மாதம்....
அன்னிக்கு பீச் ஸ்டேஷ்னில் ரஞ்சனியைப் பாத்ததுக்கு அப்புறம் அவளை சிரீஷ் ம்றுபடியும் பாத்தது...கதையின் முதல் பகுதிக்குப் போங்க...

தன் அலுவலகத்தில் தனக்கு மேலதிகாரியாக தான்...

இடையில் என்ன நடந்திருக்கும்....

எப்படி யோசிச்சுப் பார்த்தாலும் ஒண்ணும் விளங்கல்ல.

அதுக்கு மறுநாள் சிரீஷ் எதோ இன்டர்வியூன்னு அலைஞ்சுட்டு இருந்தான். அவனுக்கு அந்த இன்ட்ர்வியூ கிளிக்காகி மும்பையிலே ஒரு பெரிய மென்பொருள் நிறுவனத்திலே வேலைக் கிடைச்சுது.

அந்த நல்ல செய்தியைச் சொல்ல அவளைத் தேடி அவ அட்ர்ஸ் கண்டுப் பிடிச்சு அவ வீட்டுக்கேப் போனான். அவங்க வீட்டோட சம்மருக்கு கும்பகோணம் போயிருக்காங்கன்னு தெரிஞ்சது.

சரி ஒரு மாசம் வந்துறுவாங்கன்னு மனசைத் தேத்திகிட்டு மனசை வேற விஷயத்துல்ல செலுத்திகிட்டு சம்மரை ஜாலியாக் கழிச்சான்.

அவன் மும்பைக் கிளம்புற நாளும் வந்துச்சு...அவக் கும்பக்கோணத்துல்ல இருந்து திரும்பல்ல. அப்போக் கூட நான் தான் அவன் மனசைத் தேற்றி ஒரு வழியா பிளைட் ஏத்தி அனுப்பினேன்..

"மச்சி.. அவளுக்கு என்னைப் பிடிக்கல்லயாடா?" பாவமாய் கேட்டான் சிரீஷ்.
"அப்படி எல்லாம் இல்லடா"

"அவங்க வீட்டுல்ல வேற எதாவது நடந்திருக்குமா?" பதட்டத்தில் சிரீஷ்.
"மாப்பு... சும்மா குழம்பாதே... இப்போ நீ உன் ஜாப்ல்ல கவனம் வை... மும்பைக்குத் தானேப் போற.. நினைச்சாத் திரும்பி வந்துடலாம்... நீ நெக்ஸ்ட் டைம் திரும்பி வரும் போது ஏர்போர்ட்க்கு உன்னை ரீசிவ் பண்ணவே அவ வருவாப் பாரேன்"
இப்படி அவன் மனசுக்கு மருந்துப் போட்டு அனுப்பி வைச்சேன். அவனும் போனான். போய் அடிக்கடி போன் பண்ணுவான். அவனைப் பத்திப் பேசுறதை விட அவளைப் பத்தி அதிகம் பேசுவான்.

அப்படி இப்படி அவ போன் நம்பரையும் மெயில் ஐடியையும் அவனுக்கு வாங்கிக் கொடுத்தேன்...அவன் அனுப்புன எந்த மெயிலுக்கும் அவ பதில் அனுப்பல்ல. அவன் எனோ பிடிவாதமாப் போன் பண்ண மறுத்துட்டான். ( அது அவங்கப் பக்கத்து வீட்டு போன்.. செல் எல்லாம் அப்போ ஏது)
இப்படியே காலம் உருண்டுப் போச்சு...எனக்கும் ஒரு வேலைக் கிடைச்சு அதுல்ல அல்லாடி தள்ளாடி தடுமாறி முன்னேறிகிட்டு இருந்தக் காலம். சிரீஷ் மும்பைப் போன மூணாவது மாசம் இங்கிலாந்துப் போனான் அப்படியே அங்கேயே நாலு வருஷம் இருந்தான். வருஷம் ஒரு தடவ வருவான். அப்படி வரும் போதெல்லாம் அவளைப் பாக்க முயற்சி செய்வான். அது தோல்வியில் முடியும். பின்னர் ஒரு குவார்ட்டர் கண்ணீரிலும் ஊறுகாய் புலம்பலிலும் முடியும்.

இப்படி ஒரு முறை வந்தப் போது சுனிதாவின் புகைப்படததை என்னிடம் காட்டி
"பொண்ணு எப்படி இருக்கா?" என்று கருத்துக் கேட்டான்.
"நல்லா இருக்கா... ஆனா..."
"இவத் தான் எனக்கு எங்க வீட்டுல்ல எனக்குப் பார்த்து இருக்க பொண்ணு... அடுத்த மாசம் கல்யாணம்" என்னைப் பேசவிடாமல் அவனேச் சொல்லி முடித்தான்.

"அப்போ ரஞ்சனி..."
"யார் அவ? எதோ வந்தா... போனா... என்ன போகும் போது காயப்டுத்திட்டுப் போயிட்டா அவ்வளவு தான்"

என்னப் பேசுவதென்று தெரியவில்லை. அது அவன் காதல்...அவன் வாழ்க்கை... நான் .. I KNOW EVERY FRIENDSHIP HAS ITS LIMITS I DIDNT WANT TO CROSS IT.

"எப்பவும் நீ கூப்பிடுவே.. இப்போ நான் கூப்பிடுறேன் வாடா .. போய் மூச்சு முட்ட குடிச்சுட்டுக் கொண்டாடலாம்"

சிரீஷின் அழைப்பை ஏற்று மவுனமாய் அவனைப் பின் தொடர்ந்தேன்.
சிரீஷ் அன்று இஷ்ட்டத்திற்கு குடித்தான்.. நான் அவனைத் தடுக்கவில்லை.

"டேய் மாமா... ஒண்ணு சொல்லுறேன் கேளு.. இது என் சொந்தச் சரக்கு இல்ல எங்கியோ கேட்டது..ஆனா ரொம்பக் க்ரெக்ட்டான மேட்டர் மாமா...ஆமா கேளு....

IF U LOVE SOMETHING SET IT FREE
IF IT COMES BACKTO YOU
IT BELONGS TO YOU

IF IT DOES NOT.. DONT WORRY IT NEVER BELONGED TO YOU...

போதையில் நான் உதிர்த்த தத்துவம் தான்...

"இப்போ இல்லாட்டியும் என்னிக்காவது ஒரு நாள் வருவாடா.... ம்ம்ம் நீ கொஞ்சம் கூட நினைச்சுப் பாக்காத வேளையிலே வருவாப் பாருடீ...."

சிரீஷின் கண்களில் கண்ணீர்... நானும் அழுதேன்....

இதோ அதுக்கு அப்புறம் சிரீஷிற்கும் சுனிதாவுக்கும் கல்யாணம் ஆச்சு. சந்தோஷமா வாழ்க்கைப் போகுது. அழகான குழந்தை.

பிளாஷ் பேக் ஓவர்.

ட்ரிங்..ட்ரிங்.... சிரீஷ் கால் தான்.

"ஹாய் மச்சி...சொல்லுடா.. உன் புது பாஸ் என்னச் சொல்லுறா?"
"எங்க புரொஜக்ட் முடிஞ்சுப் போச்சுடா... இன்னிக்கு டீம் மீட்டிங்... அவப் பேசுனாடா..."
"டீம் மீட்ன்னா டீம் லீட் பேசத் தானேச் செய்வா...அதுல்ல என்ன ஆச்சரியம்"
"எல்லாரையும் தேங்க் பண்ணிப் பேசுனா... அவளுக்கு கல்யாணமாம்டா.. அவ வுட்பீ கூட வந்திருந்தான்.. ஆள் நல்லாத் தான் இருக்கான் அவளுக்குப் பொருத்தமா...மீதிய டிஜில்ல எடுத்து வச்சுருக்கேன் வாயேன் பாக்கலாம் " என்றான்.

"வழக்கமான் டீம் மீட்ன்னா விடியோ எல்லாம் எடுக்க மாட்டோம் ... எங்க கம்பெனிக்கெ பெரிய மைல்ஸ்டோன்டா இந்த புரொஜ்க்ட் சக்ஸஸ். இதுன்னாலே எங்க லாபம் எங்கியோ போகப் போகுது."

ரஞ்சனி புடவைக் கட்டி அழகாய் வந்திருந்தாள். கம்பீரமானப் பெண்.
வழக்கமான் நன்றிகளைச் சொன்னாள். தன் வருங்காலக் கணவனைப் பற்றி சொன்னாள். கடைசியாக...சிரீஷ் கம்ப்யூட்டர் வால்யூமைக் கூட்டினான்...
" Now I should thank and appreciate the most important man of this project.. The ever admirable Sirish Ragahavan(இந்த இடத்தில் கரவொலிகளும் உற்சாகக் குரல்களும் ஏராளமாய கேட்டன.) My college senior... blah blah..........I think hes the most right person to lead this project in the coming years "என்று முடித்தாள்.

முடித்தப் பின் சிரீஷை அவள் பார்த்த பார்வை எனக்குப்
பீச் ஸ்டேஷ்னில் சிரீஷை அவள் தேடிய அந்தச் சிலக் கணங்களை ஞாபகப் படுத்தியது.

நான் திடுக்கிட்டு எழுந்தேன்.

"என்னடா?" என்றான் சிரீஷ்.

"ஒண்ணுமில்ல.... ஒண்ணுமில்ல...ப்ச் தண்ணி அடிக்கிறதை நீ நிறுத்திட்டே இல்லன்னா இன்னிக்கு ஒரு பார்ட்டி வச்சு ஜமாய்ச்சுடலாம்" என்றேன்.

அவன் சிரித்தான். நானும் சிரித்தேன்.

ஒரு நெடுநாளையக் கேள்விக்குத் திருத்தாமான விடைக் கிடைச்சிருச்சே.
ம்ம் இந்த விடை எனக்கும் இதைப் படிக்கும் உங்களுக்கும் மட்டும் தெரிந்த ரகசியமா இருந்துட்டுப் போகட்டும்..

சிரீஷ்க்கு தெரிய வேணாம்... ப்ளீஸ்...

நன்றி....:)

Tuesday, May 02, 2006

கதை 7:நண்பனின் காதலி (2)

நண்பனின் காதலி - பகுதி 1

1998 கல்லூரி காலம்... மறுபடியும் உங்களை எல்லாம் ஒரு பிளாஷ்பேக் மூட்க்கு கொண்டு வரும் முயற்சியில் ஈடுப்பட்டால் வார்த்தைகள் விரயம் ஆகும் அதனால் நேரா விஷயத்துக்குப் போவோம்.

அது ஒரு மாலை இளவெயில் நேரம்... ஆகாயம் பார்த்து நம்ம நண்பன் வைரமுத்து ஆகும் முயற்சியில் தான் யார் என்பதையே மறந்துக்கொண்டிருந்த வேளையில் அவனை நான் மெரீனா அலைகளின் ஓரம் சந்தித்தேன்.... ஆமாங்க அவன் கவிதைங்கற பேர்ல்ல என் கழுத்தை கடித்துக் குதறினான். கேட்க யாருமில்லை என்னைத் தவிர.

எனக்குப் புரிஞ்சுப் போச்சு பையன் யாரோ ஒரு பொண்ணைப் பாத்து சித்தம் கலங்கி சீட்டியடிச்சுகிட்டு இருக்கான்னு தெளிவா விளங்கிப் போச்சு...

யாருடா அந்தப் புது பிகரு...?

பிகருன்னு சொல்லாதே ....I AM VERY SERIOUS ABOUT HER"

"ஆஹா இது என்ன புது கரடி... மச்சி சும்மா தமாஸ் பண்ணாதேடா...சொல்லு பிகர் எந்த ஏரியா?"

பிகருன்னு சொல்லாதே...எனக்கு கோவம் வரும்... அவ பேர் ரஞ்சனி... என் காலேஜ் ஜூனியர்... கோடம்பாக்கத்துல்ல இருந்து வர்றா... நான் ட்ரெயின்ல்ல பார்த்தேன்... மச்சி அவ செம ஹோம்லி லுக் மச்சி.....

நான் கேட்ட தகவலையும் தாண்டி அவள் புராணம் பாட ஆரம்பித்தான் சிரீஷ். நான் கொஞ்சம் டென்ஷனாகிப் போனேன்.

"டேய் டேய் நிறுத்துடா... நான் NIITல்ல பாக்காத பிகரா... இல்ல கோயில் வாசல்ல தாவணிப் போட்டு ஹார்ட் பீட்டை எகிற வைக்காத குத்துவிளக்குகளாடா... அப்படி என்னடா இவ பெரிய்ய...."

"போதும் நிறுத்து... இவ ஸ்பெஷல் தான்... அவ அழகை வேணும்ன்னா எனக்கு சரியா சொல்லத் தெரியாம இருக்கலாம்.. ப்ட் அவளை எனக்குப் பிடிச்சிருக்கு.. அவளைப் பார்த்தா மனசுக்கு சந்தோஷமா இருக்கு.... மறுபடியும் பாக்கணும்னு தோணுது..பாத்துகிட்டே இருக்கணும்ன்னு தோணுது...அவக் கிட்ட பேசணும்...அவப் பேச்சைக் கேக்கணும்.. அவச் சிரிப்பைப் பாக்கணும்.. அப்புறம்.."

"மாப்பூ... ஆளை விடுறா... தெரியாம கேட்டுட்டேன்... அவளை இம்புட்டு இதயம் நோக நீ லவ்றங்கற மேட்டர் எனக்குப் புரியாமப் போச்சுடா.. இப்போ புரியுது... சோ நீ எப்படியாவது அவளையே லவ் பண்ணி நாசமாப் போடா... இப்போ நைட் பீர் உட போலாம எப்படி?"

"இல்ல மச்சி எனக்கே அவ நினைப்பே பீர்ல்ல குளிச்ச பீலிங்கையே தருதுடா... நான் வர்றல்ல"

யப்பா சாமீ இந்த மாதிரி பேச்சு எல்லாம் என் லிட்டில் ஹார்ட் தாங்காதுடா சாமீ... நான் போய் இன்னிக்கு ஹாட் அடிச்சுட்டு அந்தர் பல்டி அடிச்சாத் தான் நான் நார்மல் ஆவேன் போலிருக்கு"

சிரீஷ் எழுந்து போய்விட்டான்.. நான் ரொம்ப நேரம் அலைப் பார்த்து உட்கார்ந்திருந்தேன்...சிரீஷ்க்கு காதல் வந்துறுச்சுப் போலிருக்கு... எனக்கு நானேப் பேசிக் கொண்டேன்... சிரித்துக் கொண்டேன்.. சுண்டல் விற்கவந்த சின்னப் பையன் என்னை ஒரு மாதிரியாகப் பார்த்துவிட்டு ஒதுங்கி சென்றான்.

இதற்கு பிறகுத் தறுதலையாய்... சாரி ஒரு தலையாய்... சிரீஷின் காதல் புல்லட் ட்ரெயின் வேகத்தின் சிட்டி ட்ரெயினின் கம்பார்ட்மென்ட்களில் வளர்ந்தது...
சிரீஷ் கிட்டத்தட்ட தேவதாஸ் கோலம் பூண்டுவிட்டான்.. அந்த தேவதாஸ் பக்கத்தில் ஒரு நாய் உண்டு... இவன் பக்கத்தில் என்னை விட்டால் யாருண்டு.

மூணு வருஷமாச்சு... சொல்லித் தான் தொலையேன்டா

சொல்லி அவ வேற மாதிரி எதாவது சொல்லிட்டா... என்னாலே அதை தாங்க முடியாதுடா

"முடியாதுன்னு அவ சொல்லிட்டா சூசைட் பண்ணிப்பியா....?"

"சே..சே அதெல்லாம் செய்ய மாட்டேன்டா..."
"அப்புறம்..."
"தெரியல்ல என்னப் பண்ணுவேன்னு எனக்கே தெரியல்ல..."

"நான் சொல்லுறேன்... போய் சொல்லு...அவ ஒ.கே சொன்னா... கிளப் போறோம்... மூக்கு முட்ட தண்ணியப் போட்டு அந்த சந்தோஷத்தை விடிய விடிய கொண்டாடுறோம் என்ன?"

"நோ சொல்லிட்டா என்னடாப் பண்ணுறது??"

"ம்ம்ம் இருக்கே வழி நேரா அப்பவும் கிளப் போறோம் மூக்கு முட்ட தண்ணியப் போட்டுட்டு விடிய் விடிய சோகத்தைத் தண்ணியிலே கரைச்சுட்டு வீட்டுக்குப் போய் குப்புறப் படுத்துட்டு குறட்டை விடலாம் என்ன?"

சிரீஷ் என்னைப் பார்த்தப் பார்வையில் அவன் மட்டும் நக்கீரனாய் இருந்திருந்தால் சத்தியமாய் என் சாம்பல் கூட மிஞ்சியிருக்காது. அப்பாடியோ... காதல்டா சாமி...

"சரி..சிரிஷ்.. நீ நேராச் சொல்ல வேண்டாம் ... யார்கிட்டயாவது உன் விருப்பத்தைச் சொல்லி இந்தப் படத்துல்ல எல்லாம் வர்ற மாதிரி தூது அனுப்பக் கூடாதா?"

"எங்களுக்குள்ளே அப்படி எந்த ஒரு பொதுவான பிரண்ட்ம் இல்லயே... "

"லவ் லெட்டர்.. அதான் ஒரே வழி..."

கற்காலக் காதல் துவங்கி கலிகாலக் காதல் வரைக்கும் சீராய் வளர்வதற்கும் சிதைந்து சிதறுவதற்கும் வழிவகை செய்யும் ஒரே காதல் யுக்தி காதல் கடிதம் தான். என் அறிவுக்கு எட்டிய மகத்தான ஐடியாவை அடுத்த சில நாட்களில் செயல் வடிவம் கொடுக்கும் முயற்சியில் இறங்கினோம்.
ம்ம்..அப்படி ஒரு டீம் ஓர்க். எத்தனைப் புத்தகங்கள் எத்தனை கவிஞர்கள்.. எத்தனை எழுத்தாளர்கள்..எங்களுக்கு உதவி இருப்பார்கள் தெரியுமா? பின்னே கண்ணதாசனிலிருந்து பழனிபாரதி வரை ஒரு கவிஞரின் வரி விடாது படித்துப் பார்த்து பார்த்து நகல் எடுக்கப் பட்ட ஒரு உன்னதக் காதல் கடிதம் அது...

முழுசா மூணு நாள் உக்காந்து எழுதி முடிச்சு... இதுல்ல ஒரு நாள் காலேஜ்க்கு கட் அடிச்சுட்டு வேற இந்த வேலையை முடிச்சோம்.

இப்போ காதல் என்னும் தேர்வு எழுதும் அந்த முக்கியமான நாள் வந்து நின்னுச்சு. எனக்கு தேர்வு நேரம்.
நம்ம நண்பனைப் பார்த்துக் கடைசி நேரக் கோச்சிங் எல்லாம் கொடுக்க முடியல்ல. அப்போ செல் போன் எல்லாம் பணக்காரகளுக்கு மட்டுமே சொந்தம் என்ற உயர்வான நிலையிலிருந்த ஒரு ஏற்ற தாழ்வின் காலம்.

வீட்டு போனிலிருந்து முனகலாய்... "மச்சி தைரியம்டா.. ஆல் த பெஸ்ட்..." சொல்லிவிட்டு நிமிர...

"ஆமா யாருக்கு குசுகுசுன்னு ஆல் த பெஸ்ட் சொல்லுற கேர்ள்பிரண்ட்க்கா..." என் பாசக்கார கசின் அக்கா கேட்டுச் சிரிக்க... நான் கெக்கப் பிக்கே எனப் பதிலுக்குச் சிரித்து என் கெத்தைக் காப்பாற்ற வேண்டியக் கட்டாயத்துக்குத் தள்ளபப்ட்டேன்.

நம்ம பரீட்சை டென்ஷ்ன் விட நண்பன் வாழ்க்கைப் பரீட்சைத் தான் நமக்கு அதிக டென்ஷன் கொடுத்தது. சாயங்காலம் வீடு வந்ததும்... டெலிபோனைச் சுத்த ஆரம்பிச்சேன்.. கை விரல் ஒரு முக்கா இஞ்ச் தேஞ்சு டேமெஜ் ஆகிப் போற அளவுக்குப் போயிருச்சு... போன் மணி அடிக்குது. அவங்க வீட்டுல்ல யாரும் போனை எடுத்தப் பாடில்லை.

நமக்கா தாள மாட்டேங்குது.

என்னாச்சோ?

ஒருவேளை இப்படி இருக்குமோ? இல்லை அப்படி இருக்குமோ?

மனசு ஒரு நிலை இல்லாமல் தவிச்சுப் போச்சு... இதுக்கு மேலயும் நமக்குத் தாங்காது.

அப்போ சிரீஷ் வீடு மயிலாப்பூர்ல்லயும் என் வீடு திருவான்மியூரிலும் இருந்துச்சு... என் டி.வி.எஸ் 50ஐ எடுத்துகிட்டு அதுல்ல பெட்ரோல் இல்லாமப் போய் நான் அல்லல் பட்டது தனிக்கதை... அவன் வீட்டுக்கு போய் நிக்கும் போது மணி எட்டு.

அண்ணன் வழக்கம் போல் மொட்டை மாடியிலே தவக் கோலம் பூண்டிருந்தார். நான் மூச்சிரைக்க ஓவர் ஹெட் டாங்க் பக்கம் போய் நின்னேன். அவன் எந்த வித சலனமும் இல்லாமல் என்னை நிமிர்ந்துப் பாத்தான். கிட்டத்தட்ட 100 மீ ரேஸ் ஓடி கடைசியா வந்தவன் ( அந்த அனுபவம் நமக்கு ரொம்ப ஜாஸ்திங்க) மாதிரி நான் அவனையேப் பாக்குறேன்...

"காலெஜ் போனீயா?"
"ம்.."

"ம் ண்னா"

"போனேன்"

"அவளைப் பார்த்தீயா?"

"ம்ம்.பாத்தேன்"

"கொடுத்தியா?"

"இல்ல" என்றவன் வானம் பார்த்து லுக் விட்டான். நான் செமக் கடுப்பு ஆயிட்டேன்.

"டேய் என்னடா? விளையாடுறீயா? சொல்லுடா?"

"இல்லடா மச்சி.. காலையிலே அவக் கிட்டே லெட்டர் கொடுக்கத் தான் போனேன். அப்போ இன்னொரு சீனியர் பையன் எனக்கு ஜஸ்ட் முன்னாடி போய் அவக்கிட்ட ஒரு லெட்டர் கொடுத்துட்டான்டா"

"அப்புறம்"

"அவ அழ் ஆரம்பிச்சுட்டா.... பெரிய கலாட்டா ஆயிடுச்சு... கோவத்தில்ல அவனைப் பார்த்து செருப்புப் பிஞ்சிடும் ராஸ்கல்ன்னு வேற சவுண்ட் விட்டாளா நான் கொஞசம் பயந்துப் போயிட்டேன்"

என் மூட் சட்டென மாறி எனக்கு கொல்லெனச் சிரிப்பு வந்தது. விழுந்து விழுந்துச் சிரித்தேன். சிரிஷ் ஒரு மாதிரி ஏக்கத்தில் உட்கார்ந்திருந்தான்.

"மச்சி.. பாப்பா படிப்ஸ் பார்ட்டி போலிருக்கு...சோ யார் பண்ண புண்ணியமோ இன்னிக்கு நீ பப்ளிக்கா செருப்பட் வாங்கமா எஸ்கேப் ஆயிட்டே...சரி சரி இதெல்லாம் உனக்கு ஒத்துவராது... நம்ம வேலையப் பாப்போம் கிளம்பு" என்றேன் நான்.

"ஆமா.. அந்த லெட்டர என்னப் பண்ணுன...?" பாதி பீர் உள்ளேப் போயிருந்தப் பொழுதினில் கேட்டேன்.

"இதோ என் இதயத்துக்கு பக்கமா சேப்டியா வச்சிருக்கேன் மாப்ளே"

"போடா.. வென்று... ஆம்பிளையப் பாத்துச் செருப்பாலே அடிப்பேங்கறா.. அவளுக்கு எழுதுன லெட்டர் அங்கே எதுக்கு ?"
நான் வலுக்கட்டாயமாக அந்த லெட்டரைப் பிடுங்கி சுக்கல் சுக்கலாக் கிழித்து கசக்கி காற்றில் பறக்க விட்டு சிரித்தேன்.
அவனும் போதையில் சிரித்தான் என்று தான் நினைக்கிறேன்.

அதற்கு பிறகு நான் என் தேர்வுகளில் தீவிரமாகக் கவனமானதில் எனக்கும் சிரீஷ்க்கும் ஒரு சின்ன இடைவெளி விழுந்தது.
ஒரு மூணு வாரம் கழிச்சு அவனை அதே தவக் கோலத்தில் அவன் வீட்டு மொட்டை மாடியில் மீண்டும் ஒரு இளம் மாலைப் பொழுதினில் சந்தித்தேன்.
எனக்கு ஒரளவிற்கு விவரம் எல்லாம் புரிஞ்சுப் போச்சு... ம்ஹம் எல்லாம் காதல் செய்த மாயமந்திரம்.
" என்னாலே அவளை மறக்க முடியல்லடா... நான் என்னச் செய்யுறது சொல்லு?"
நண்பனின் மனசு என் கண்ணிலும் நீர்க் கோர்த்தது.

" இன்னும் மூணு நாள்... அப்புறம் காலேஜ் முடிஞ்சுப் போயிடும்டா..
நான் அவளைக் காதலிச்சது அவ்ளுக்கு தெரியாமலே போயிடும்ன்னு நினைக்கும் போது தான் என் மனசுக்கு ரொம்பக் கஷ்ட்டமாயிருக்குடா... முதல்ல எங்கே அவ என்னை விட்டு விலகிடுவாளோன்னு பயந்தேன்... இப்போ நான் சொல்லாட்டியும் விலகத் தான் போறா.. ஒரு வேளை என் காதலை நான் அவக்கிட்டச் சொல்லி அவ என் காதலுக்கு ஓ,கே சொல்லிட்டா... அவ எங்கூடவே இருந்துடுவா இல்லையா?
அதனால நான் என் காதலைச் சொல்லணும்டா"

அவன் அப்படி பேசும் போது அவன் எல்லாத்தையும் மறந்து ஒரு ஆனந்த நிலைக்குப் போயிட்டான்.

ஓ.. ஓ ஒரு வேளை அது தான் காதல் மயக்கமோ... எனக்கு அது என்னன்னு தெரியல்ல...

ஆனா சிரீஷ்வோட மொத்த சந்தோஷமும் அந்த பொன்ணுகிட்ட்த் தான் இருக்குன்னு மட்டும் எனக்கு தெரிஞ்சது... என் நண்பனுக்கு அவன் சந்தோஷம் கிடைக்கணும்ன்னு விரும்புனேன்...

அதுக்கு மறுநாள்....

நண்பனின் காதலி - பகுதி 3