Saturday, December 29, 2007

ஒரு வருடத்தின் முடிவினில்




நாட்காட்டியின்
மெலிந்த தேகம்
முடியப் போகும்
ஒரு வருடத்தின்
அடையாளமாய்
வரவேற்பறையில்

சவரம் தேடும்
மோவாயைத்
தடவியபடி
விட்டம் பார்த்த
விழிகளில்
எஞ்சி நிற்கும் ஞாபகங்கள்

கைப்பேசியின்
மெல்லிய ஒலியழைப்பு
வரப் போகும் வருடத்துக்கான
வாழ்த்துக்களை
விடாது சொல்லிக் கொண்டிருந்தன

கணிணியின்
அஞ்சல் பெட்டியில்
ஆறாங்கிளாஸ் வரை
ஒன்றாய் படித்து
இடையில் தொலைந்து
ஆர்குட்டில் மீண்டு கண்டெடுத்த
நண்பன் ஒருவன்
குடும்ப படம் போட்டு
புது வருட மெயில் அனுப்பியிருந்தான்..

விடியலின் வெளிச்சத்தைப்
போதையின் இருளில்
கூத்தாடும் மனத்தைக்
கட்டவிழ்த்து விட்டு
கூட்டமாய் வரவேற்க
நட்புக் கூட்டம் ஒன்று
குரூப் சேட்டிங்கில் வந்து
திட்டம் போட்டது..

இந்த வருசாமவாது...
ஒவ்வொரு வருடமும்
விடாது ஒலிக்கும்
பெற்றவளின் பக்தி மணி
காதுக்குள் கணீரென
எக்கோ எபெக்ட்டில்
அதிர்ந்து அடங்கியது...

ஒரு நாள் கூத்துக்கு
எத்தனை வேடங்கள்
எதை ஏற்பது
எதை தவிர்ப்பது
சிந்தனைச் செய்ததில்
சூடா ஒரு கப் காபி
மட்டுமே
அப்போதைக்கு
தீர்வானது..

மின்விசிறியின்
தாள லயத்தில்
நெற்றியில் நாட்டியமாடிய
வியர்வைத் துளியினைத்
துடைந்தெறிந்த விரல்
விசைப் பலகையில்
தட்ட நினைத்த
உனக்கானக் கவிதையின்
கடைசி வரி முட்டியது

முற்று பெறாத
கவிதையும்
விடைத் தெரியாதக்
கேள்வியும் என
இதோ
இந்த வருடமும்
இன்னொரு வருடமாய்
முடியத்தான் போகிறது...