Monday, February 04, 2008

என் அண்ணன் பேரு சரவணன் - 3

முந்தைய பகுதி படிக்க

படிப்பை பத்தி மட்டும் சொல்லிட்டு விட்டுட்டேன்.. விளையாட்டுல்லயாவது எனக்கு எதாவது பெருமை தேறுமான்னு கேட்டா அதுவும் ஒரு பெரிய சோக கதை தான்..சரவணன் டென்னிஸ் கோச்சிங் போனான். அதுல்ல நல்ல தேர்ச்சியும் அடைஞ்சிட்டான். ஸ்கூலுக்காக விளையாடினான்.. கப் எல்லாம் கூடி வீட்டுல்ல வச்சிருந்தான். என்னியும் தான் கோச்சிங்ல்ல சேர்த்து விட்டாங்க... ஆனா முதப் பார்வையிலே எனக்கு அந்த கோச்சுக்கும் பொருந்தாப் பார்வையாப் போயிருச்சு.. அவருக்கு என்னைப் பிடிக்கல்ல எனக்கு அவரைச் சுத்தமாப் பிடிக்கல்ல...

கோச்சிங்கற பேர்ல்ல என்னைய கிட்டத்தட்ட எல்லா நேரமும் பந்து பொறுக்கிவிடுற சாகுல்லயே அலையவிட்டான்... ஒரு நாள் கடுப்பாகி பந்தை எடுத்து திரும்பி நின்னுகிட்டிருந்த அவர் நடு மண்டையில்ல நச்சுன்னு அடிச்சுட்டேன்... சேதராம் ஆகிப் போயிருச்சு... புல் கூட முளைக்க யோசிக்கிற அவர் மண்டையிலே ஒரு எலுமிச்சம்பழம் காய்ச்சுருச்சு.. அதை வீக்கம்ன்னும் சொல்லலாம்...அதுக்கு அப்புறம் என்ன நடக்கும் கோச்சிங்ல்ல இருந்து நம்ம நீக்கம் தான்...

சரி டென்னிஸ் தான் சரி வரல்லயேன்னு விளையாட்டுல்ல இருந்து விலகி நிக்க நம்ம வீர மனசு ஓப்பல்ல.. ஸ்கூல்ல்ல ஸ்போர்ட்ஸ் டே வந்துச்சு..அதுக்கான தகுதி சுற்றுகள் ஆரம்பத் தேதி நோட்டீஸ் போர்ட்ல்ல போட்டாங்க.. நமக்கு டக்குன்னு ஆசைப் பொங்கிருச்சு..ஓடத் தானே செய்யணும்..பஸ்ல்ல இருந்து இறங்கி ஓடுறது... மரம் ஏறி குதிச்சு ஓடுறது... எங்கிட்டாவது தாவி ஓடுறது... அது போதுமே தகுதின்னு களத்தில் இறங்க முடிவு பண்ணிட்டேன்..அதுல்லயும் ஒரு தடை வந்துச்சு

ஓட்டப்பந்தயம் தகுதி சுற்றுல்ல கலந்துக்கணும்ன்னா ஸ்போர்ட்ஸ் ஷார்ட்ஸ் வாங்கணும்ன்னு சொல்லிட்டாங்க... நம்ம கிட்ட இருந்ததோ எல்லா முழு பேண்ட் என்னப் பண்ணுறது யோசிக்க ஆரம்பிச்சேன்... டென்னிஸ்க்கு கூட ட்ராக் சூட் தான் போட்டுகிட்டு போவோம்... நம்ம் தைஸ் எல்லாம் இன்னும் அவ்வளவா டெவலப் ஆகாத நேரம்... பெப்சி செவன் பிடோ டிடோ லெக்ஸ் பாத்து இருக்கீங்களா அப்படி இருக்கும் நம்ம கால்... ரொம்ப நேரம் யோசிச்ச பின்னாடி கணேஸ் என்னைப் பாத்து ரொம்பவும் அக்கறையாக் கேட்டான்... டேய் நீ அவசியமா ஓடித் தான் ஆகணுமா....தேவையான்னு யோசி...நானும் எந்த விளைவைப் பத்தியும் கவலைப்படாம ஆமான்னு திடமாத் தலையாட்டினேன்,, எனக்கு ஸ்போர்ட்ஸ் ஷார்ட்ஸ் ஏற்பாடு செய்யும் பொறுப்பை அவன் ஏற்று கொண்டான்.

தகுதி சுற்று நாள் அன்னிக்கு எப்படியோ ஒரு ஷார்ட்ஸ் ஏற்பாடு பண்ணி கொண்டு வந்திட்டான் கணேஸ்... சைஸ் தான் கொஞ்சம் பெருசா இருந்துச்சு... இருந்தாலும் நாடாவெல்லாம் போட்டு இறுக்கி கட்டி நானும் கிளம்பிட்டேன்...பசங்க எல்லாம் என்னை உற்சாகப் படுத்த ஒரு கும்பலா வந்து இருந்தாங்க.. எனக்குப் பெருமையா இருந்துச்சு... எனக்காக இல்லன்னாலும் உங்களுக்காகவது ஜெயிக்கிறேன்டா அப்படின்னு சொல்லிட்டு ஓட கிளம்பினேன்.. அன்னிக்கு மட்டும் ட்ரெக்ல்ல அப்படி ஒரு விபத்து நடக்காமப் போயிருந்தா.. இன்னிக்கு ஒரு வேளை இந்தியாவுக்காக ஓலிம்பிக்ல்ல ஓடியிருப்பேனோ என்னவோ... என்னப் பண்ணுறது விபத்து எல்லாம் சொல்லிட்டா நடக்குது.. அது பாட்டுக்கு நடக்குது. நாசங்களை ஏற்படுத்துது..

அந்தக் கோர விபத்துக்கு காரணம் என் பக்கத்து ட்ராக்ல்ல ஓடுன கேசவன்... அவன் சிலிப்பாகி விழப் பார்த்தான்... விழப்போனவன் பிடிக்க எதாவது தேட அவன் கையில் சிக்கியது என் ஷார்ட்ஸ் நாடா... அவ்வளவு தான்... புதுசா எதோ ஒரு சோரூம்க்கு ரிப்பன் கட் பண்ண மாதிரி ஒரே கைத் தட்டல் தான்... நான் ஓப்பன் கிரவுண்ட்ல்ல ஓப்பனாகி நிக்க... அந்த விபத்து எங்க பள்ளி ஸ்போர்ட்ஸ் வ்ரலாற்றுல்ல இன்னும் எதோ ஒரு பக்கத்துல்ல இருக்குதாம்.. இப்படித் தான் என் விளையாட்டு வாழ்க்கை முற்றும் முடிந்து அவிந்துப் போனது...

"புதுசா ஒரு கம்பெனி ஆரம்பிக்கலாம்ன்னு இருக்கேன்... உங்க பேங்க்ல்ல எதாவது லோன் கிடைக்குமா பார்த்து சொல்லேன்" சோமு சீனியிடம் கேட்டான். அதுக் கேட்டு நானும் நினைவுக்கு வந்தேன்

"பண்ணலாம் நல்ல ப்ரொபசல் இருந்தாச் சொல்லு...ட்ராப்ட் பண்ணி எடுத்துட்டு உக்காந்து பேசலாம்.. அந்த டிப்பார்ட்மெண்ட்ல்ல நமக்கு வேண்டிய ஒருத்தர் இருக்கார்"

எஸ்.எஸ் லெண்டிங் லைப்ரரி...ஒரு பழைய அட்டைப் பெட்டியைப் பாதியாப் பிரிச்சு அதுல்ல கீரிஸ் ஆயில் வச்சு பெரிசு பெரிசா கையெல்லாம் மை நிறைஞ்சி இருக்க எழுதி முடிச்சு சோமுவைப் பாத்தேன்.. ஆமா நான் முதல் முதல்ல பண்ண வியாபாரம் அது தான்.. லெண்டிங் லைப்ரரி.. முதல்ன்னு மொத்தம் முப்பது ரூபா போட்டோம். நான் பதினைஞ்சு.. சோமு பதினைஞ்சு.. எங்க வீட்டு முன் ரூம்ல்ல இருந்த மூணு செல்ப் தான் நூலகம்.. அதுல்ல இருந்த 18 புத்தகங்களை வச்சு தான் ஒரு சுபயோக தினத்தில் வியாபாரத்தை ஆரம்பிச்சோம்...முதல்ல நூலகத்தில்ல கோகுலம், அம்புலி மாமா, ட்விங்க்ள், அமர் சித்ரகதா, ரத்னபாலா, சிறுவர்மலர், ஸ்போர்ட்ஸ்டார், இப்படி தான் புக் இருந்துச்சு..அவென்யூ வாண்டுகள் தான் எங்க நிறுவனத்தின் பெருமை மிகு வாடிக்கையாளர்கள்.. நாலணா வாடகைக்கு எல்லா புக்கும் கிடைக்கும்.. நாலு நாள்ல்ல திருப்பிக் கொடுத்துரணும் அது தான் சட்டம். வியாபாரம் அமோகமாப் போயிட்டு இருந்த நேரம்... சோமுவுக்கு அப்படி ஒரு யோசனை வந்துச்சு..

சும்மா வைக்கிற குழம்பு இன்னும் கமகமன்னு மணம் வீசணும்ன்னா அப்படி இப்படி மசாலா சேர்த்தா இன்னும் அருமையா இருக்கும்ன்னு ஆளுக்கு ஆள் ஆலோசனை சொல்லுவாங்களே...அந்த டிப்ஸ் சில சம்யம் நல்லா ஒர்க் அவுட் ஆகும் சில சமயம் குழம்பு குப்பைக்கு போற அளவுக்கு நாக் அவுட்டும் ஆகும்...அது மாதிரி தான் ஆச்சு...இப்படி சின்னப்புள்ளங்க பொஸ்தகம் எல்லாம் போட்டு எப்படி நாம் முன்னேறுவது.. கொஞ்சம் வியாபாரத்தை "பெருசா" பண்ணலாம்ன்னு சொன்னான். சேர்த்து வச்ச துட்டை எல்லாம் எடுத்து அப்படி இப்படி நாலு புக் வாங்கி வச்சோம்... அதுக்கு மட்டும் எட்டணால்ல இருந்து ஒரு ரூபாய் வரைக்கும் ரேட் எல்லாம் வச்சு முதல்ல வியாபாரம் பிச்சுகிட்டுப் போச்சு... ரஞ்சனி வந்து எங்க லைப்ரரில்ல மெம்பர் ஆகுற வரைக்கும்...

பொண்ணுங்க எல்லாம் அந்த மாதிரி புக் படிப்பாங்களான்னு சோதிச்சுப் பாக்குற பாழாப் போன ஆசை சோமுவுக்கு வந்து தொலைச்சுது.. அந்த ஆசையை சோதனையா அவன் செய்ய தோதா ரஞ்சனியின் வரவு அமைஞ்சுப் போச்சு...சோதனையின் முடிவைச் சொல்லணுமா என்ன..

ரொம்ப நாள் வரைக்கும் எங்க வீட்டு வாசல்ல அந்த அட்டைப் பெட்டி பெயர் பலகையில் ஒரு எஸ் மட்டும் கிழிந்து தொங்கி கொண்டிருந்தது...எங்கள் முதல் வியாபார முயற்சி இப்படி ஒரு அல்ப ஆசையில் அல்பாயுசில் முடிந்துப் போனது..அந்தக் கிழிந்த எஸ் அட்டையும் பின்னொரு மழை நாளில் நன்றாக நனைந்துப் போனது மெல்ல மொத்தமாய் கிழிந்துப் போனது...

அதுக்குப் பின்னாடி எனக்கு வியாபார கனவுகள் எதுவும் வர்றதே இல்ல.. ஆனா சோமு இன்னும் அந்த கனவுகளைச் சுமந்துகிட்டு தான் திரியுறான்னு நினைக்கும் போது மெல்ல சிரிச்சுகிட்டேன்.

மேடையில் அப்போது அவென்யு சிறுவர்கள் குழுவாக இணைந்து ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே பாட்டைப் பாடிகிட்டு இருந்தாங்க...இது போல நாங்களும் எத்தனை தடவைப் பாடியிருப்போம் யோசிச்சுப் பாத்துகிட்டேன். அந்த குழுவில்ல இரட்டை குழந்தைகள் வேறு இருந்தாங்க... ஒருத்தர் கையை ஒருத்தர் பிடிச்சுகிட்டு அருமையாப் பாடிகிட்டு இருந்தாங்க... இப்படி ஒரு ஆண்டுவிழா நடக்கும் போது... நான் பன்னிரெண்டாம் கிளாஸ் முடிச்சிருந்த நேரம்ன்னு நினைக்கிறேன்... நாங்க ஒரு குழுவா மேடையேறி..அவென்யு வரலாற்றில் முதல் முறையாக சும்மா அதிரும் படியான ஒரு கானாக் கச்சேரியை போட்டு தாக்குனோம்..

சின்னப் பசங்க எல்லாம் செம குத்துப் போட.. அவென்யுவே அல்லோலப்பட்டு அப்படி ஒரு கும்மாளமாப் போச்சு..அன்னிக்கு வாழ்க்கையிலே நான் ரொம்ப சந்தோசப்பட்டேன் ஆனா அந்த சந்தோசம் அதிகப்பட்சம் அஞ்சு நிமிசம் கூட நீடிக்கல்ல... எங்களுக்கு அடுத்து மேடை ஏறுனான் என் அண்ணன் சரவணன்...நம்ம குரல் தேனிசை தென்றல்ன்னா... அவன் குரல் கொஞ்சம் மலையாள தாஸ் ஏட்டன் குரல்... அதுல்லயும் காக்கைச் சிறகினிலே நந்தலாலான்னு ஆரம்பிச்சு அவன் குரல் ஏத்த இறக்கத்துல்ல பெருசு சிறுசு.. முக்கியமா பொண்ணுங்க எல்லாம் சொக்கி சுழண்டாளுங்க...இது எல்லாம் என் கண் முன்னாடியே நடந்துச்சு...

ஹிரோன்னு சொல்லி இன்ட்ரோ கொடுத்து நடுவுல்ல காமெடியன் ஆன மாதிரி இருந்துச்சு எனக்கு.

சரவணா...சரவணா... இன்னொரு பாட்டு பாடுப்பா... எல்லாரும் கேட்க....

ம்ம்ம்ம் நல்ல ரொமான்டிக்காப் பாடுப்பா... பொண்ணுங்க பக்கம் இருந்து குரல் வந்தது...யாராக இருக்கும் என நான் தலையை நிமித்தி பாத்திருப்பேன், ஆனா ஏற்கனவே கடுப்பிலே கண்டப் படி கவுந்து போய் கிடந்தது என் மனசு...

பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா.. எம் மனசுல் அம்பு விட்ட நிலா.... அவன் குரல் நான் அவென்யு வாசலைத் தாண்டி வந்த பிறகும் என் காதில் ஒலித்துக் கொண்டே இருந்தது. நான் பாட்டுக்கு கோவத்துல்ல எவ்வளவு தூரம் நடக்க முடியுமோ அவ்வளவு தூரம் நடந்தேன்.. கால் வலிக்கற வரைக்கும் நடந்தேன்..அவன் குரல் என் காதில் விழாத வரை நடந்தேன்.. எனக்கு கிடைக்கிற எல்லாச் சந்தோசத்துல்லயும் பங்கு போடணுமா என்ன.... தலை வலித்தது..

தலை வலிக்கு சிறந்த மருந்து எதுன்னு யோசிச்சு முடிக்கறதுக்கு முன்னாடியே நண்பர்களிடமிருந்து வைத்திய முகாமுக்கு அழைப்பு வந்தது... நல்லா தண்ணியைப் போட்டுட்டு கணேஸ் பைக்ல்ல பின்னாடி உக்காந்து அவென்யுக்குள்ளே நுழையும் போது அவன் தான் என் கண்ணில் பட்டான். பத்து மணியாச்சிருச்சு.. பைய போத்திகிட்டு தூங்குற நேரமாச்சே.. இங்கே என்னப் பண்ணுறான்... தள்ளாட்டமாய் வண்டியின் பின்புறம் இருந்து பார்த்தேன்...

சும்மா சிக்கு புக்கு சிக்கு புக்குன்னு ரயில் வண்டியை விட வேகமாய் பைய தம் போட்டுகிட்டு இருந்தான்... என் அண்ணன் சரவணன் .. இம்புட்டு அழகா ரவுண்ட் ரவுண்ட்டா புகை விடுவானா.... எனக்கு போதை தெளிந்தது...

தொடரும்

9 comments:

Anonymous said...

இந்த பாகம்தான் காமெடிங்க...

முன்னாடி எல்லாம் செண்டிங்க...

கப்பி | Kappi said...

//சும்மா சிக்கு புக்கு சிக்கு புக்குன்னு ரயில் வண்டியை விட வேகமாய் பைய தம் போட்டுகிட்டு இருந்தான்... என் அண்ணன் சரவணன் .. இம்புட்டு அழகா ரவுண்ட் ரவுண்ட்டா புகை விடுவானா.... //

ஊருக்குத் தெரியாமப் போன ஒரு 'சூனா பானா' சரவணனுக்குள்ள இருக்கானா :))

Divya said...

தம்பி 'தண்ணீ'...அண்ணன் 'தம்'!!
நல்லாத்தான் இருக்குதுங்கண்ணா!!

Divya said...

தம்பி 'தண்ணீ'...அண்ணன் 'தம்'!!
நல்லாத்தான் இருக்குதுங்கண்ணா!!

துளசி கோபால் said...

ayyayyo..... saravananai pOttuk koduththeengala illai pOttuth thallitteengalaa?

sorry no tamil font(-:

இலவசக்கொத்தனார் said...

கடைசி வரியில் மட்டுமே வரும் சரவணன் இந்த பகுதியில் பல இடங்களில் வந்துட்டானே?!

கோபிநாத் said...

\\\சும்மா சிக்கு புக்கு சிக்கு புக்குன்னு ரயில் வண்டியை விட வேகமாய் பைய தம் போட்டுகிட்டு இருந்தான்... என் அண்ணன் சரவணன் .. இம்புட்டு அழகா ரவுண்ட் ரவுண்ட்டா புகை விடுவானா.... எனக்கு போதை தெளிந்தது...\\

அப்படி போடு அருவாள...இனி சரவணன் காலி அண்ணனுக்கு ஜாலி ;)

G.Ragavan said...

மனசறிஞ்சு சொல்றேன். விழுந்து விழுந்து சிரிக்க வைச்சுட்டீங்க :)))))))))))))))

ஒவ்வொரு நிகழ்ச்சியிலயும் படுற அவமானங்களப் படிக்கிறப்போ...நல்லா யோசிச்சிருக்கீங்க. :)

அனுசுயா said...

சரவணண் எல்லாத்துலயும் பெஸ்ட்டா இருந்துட்டு கடைசில வொர்ஸ்ட் ஆயிட்டானே. சோ சேட் :)