Saturday, March 29, 2008

என் அண்ணன் பேரு சரவணன் - 8

முந்தைய பகுதி

"நீ அவச் சொன்னதுக்கு என்னப் பதில் சொன்ன?"

சரவணன் அந்தக் கேள்வியை என்கிட்டக் கேட்டப்போ அதுல்ல கோவம் இருந்துச்சா இல்லையான்னு கூட என்னால அனுமானிக்க முடியல்ல. எல்லா விசயங்களையும் அவன் கிட்டச் சொல்லிட்டேங்கற ஒரு திருப்தி இருந்துச்சு. அடுத்து அவன் என்ன செய்வான்னு என்னால கொஞ்சம் கூட ஊகிக்க முடியாத அளவுக்கு இறுக்கமா உக்காந்து இருந்தான் சரவணன்.

அப்படி ஒரு நிலைமையிலே அவன் கேட்டக் கேள்விக்கு என்ன பதில் சொல்லுறதுன்னும் எனக்குப் புரியல்ல..

"இன்னும் என் கேள்விக்கு நீ பதில் சொல்லல்லயே..." சரவணன் என்னைப் பாக்காமலேக் கேட்டான்.

"தெரியல்ல சரவணா" நான் சொல்லி முடிக்குறதுக்கு முன்னாடியே அவன் எழுந்து போயிட்டான். வேகமாப் போயிட்டான். நான் அவன் போனத் திசையைப் பாத்துகிட்டு உக்காந்து இருந்தேன. அதுக்கு அப்புறம் அன்னிக்கு நடந்த காலேஜ் கலாட்டாக்கள் எதுல்லயும் நான் கலந்துக்காம ஒதுங்கியே நின்னேன்.. ரஞ்சனியும் ஒரு ஓரமா ஒதுங்கி நின்னுட்டா.. அடிக்கடி என்னைப் பாத்துகிட்டே இருந்தா.. நான் வேணும்னே அவப் பார்வையைத் தவிர்த்தேன்...

காலேஜ் பேசன் ஷோவுல்ல நம்ம பசங்க தான் பட்டயக் கிளப்புனாங்க...வழக்கம் போல மேடைக்கு கீழே இருந்து தான்... டெல்லியில்ல இருந்து ஒரு குரூப் வந்துருந்துச்சு... ஒவ்வொருத்தியும் ஒவ்வொரு அழகு... அப்போதையப் பிரச்சனையை அப்படியே ஓரம் கட்டிட்டு அந்த அழகு வெள்ளத்திலே மனசை அடிச்சுட்டு போக விட்டுட்டு கொஞ்ச நேரம் நின்னேன்..

"சிவா.. நான் வீட்டுக்குப் போகணும்... என்னக் கூட்டிட்டு போ..."

கையை மார்புக்கு குறுக்காக கட்டிக்கிட்டு என் முன்னால் வந்து நின்னா ரஞ்சனி..

"பஸ் வரும் அதுல்ல போலாமே."

"பஸ் எடுக்க இன்னும் இரண்டு மணி நேரம் ஆகும்.. எனக்கு அவசரமாப் போகணும்.. பசங்க கிட்ட வண்டி வாங்கிட்டு கொண்டு போய் விடு..." கிட்டத்தட்ட ஒரு கட்டளை மாதிரியே போட்டா..

ரஞ்சனியை அவென்யு வாசலில் போய் இறக்கிவிட்டேன்...

"சிவா...நீ எனக்கு இன்னும் பதில் சொல்லல்ல...பிடிக்கும் பிடிக்கல்ல எதுவுமே ஓ.கே தான்.. ஆனா அந்த பதில் உன் மனசுல்ல இருந்து வரணும் சிவா... புத்தியக் கேட்டு வரக்கூடாது..."

சொல்லிட்டு அவப் பாட்டுக்குப் போயிட்டா. அந்த நேரம் பாத்து சரவணனும் அங்கே வந்தான். எங்களை அவன் பார்த்த பார்வையிலே ஒரு நூறு இருநூறு கோழியை உரிச்சுப் போட்டிருந்தா அருமையான தந்தூரி கிடைச்சிருக்கும்.. அப்படி ஒரு நெருப்பு பார்வை அது..

அவன் கையிலே இருந்த டிராவல் பேக் அவன் அவசரமா ஊருக்குக் கிளம்புரான்னு சொல்லிச்சு... அவன் எதுவும் பேசிக்காம ரோட்டைப் பாத்து நடந்துப் போயிக்கிட்டு இருந்தான், நானும் அவனை அந்த நிமிசம் எதுவும் கேக்க வேணாம்ன்னு விட்டுட்டேன்...பைக்கைத் திருப்பிக் கொடுக்க காலேஜ்க்குப் போயிட்டேன்...

இது நடந்து ஆறு மாசம் ஆயிருச்சு.. அது வரைக்கும் சரவணன் வீட்டுக்கே வர்றல்ல.. ஆபிஸ்ல்ல வேலை அதிகம்ன்னு காரணம் சொன்னதா வீட்டுல்ல பேசிகிட்டாங்க. அவனுக்குப் பொண்ணு பாக்கப் பேச்சு எடுத்தப்போவும் அவன் எதுவும் பிடி கொடுக்கல்லன்னு சொல்லிகிட்டாங்க....

என் அண்ணன் சரவணும் நானும் ஆரம்பகாலத்துல்ல எப்படி இருந்தோமோ அந்த நிலைமைக்கே மறுபடியும் போயிட்டோம்.... முன்னாடி மாதிரி இல்லாம இப்போ என் மனசை எதோ ஒரு பாரம் அழுத்துச்சு...சரவணன் கூடப் பேசணும்..கலகலப்பா இருக்கணும்ன்னு எதோ ஒண்ணு எனக்குள்ளே ஏங்குற மாதிரி இருந்துச்சு...

ரஞ்சனியை விட்டு எவ்வளவு விலக முடியுமோ அவ்வளவு விலகி வந்தேன்...

நான் அவனுக்கு துரோகம் பண்ணல்லன்னு சரவணன் புரிஞ்சுக்கணும்ன்னு நினைச்சேன்... ஆனா அதை எப்படி அவனுக்கு சொல்லுறதுன்னு புரியல்ல...

எப்படியோ ஒரு விடுமுறைக்கு அம்மாவுக்கு உடம்பு முடியல்லன்னு சொல்லி அவனை வர வச்சாங்க... வந்தவனுக்கு ராஜ உபச்சாரம்... வகை வகையா விருந்து வச்சு அவனை திணறடிச்சாங்க... இரண்டு பேரும் ஒண்ணா உக்காந்து தான் சாப்பிட்டோம்.. அவனுக்கு இரண்டு நாட்டு கோழி முட்டை எனக்கு பாதி முட்டை.. இன்னொரு பாதி எங்கப்பாவுக்கு அதையும் அவர் அவனுக்கே வச்சது பெரியக் கொடுமை... முட்டைக் கொடுமையே போதும் மத்த மெனு வெல்லாம லிஸ்ட் போட்டா பதிவு தாங்காது அதுன்னால்ல விடுறேன்..

அவனாப் பேசுவான்னு நான் காத்திருந்து கடுப்பானது தான் மிச்சம்... பொறுத்துப் பாத்துட்டு நானே அவன் முன்னாடி போய் நின்னேன்...

"சரவணா..."

"ம்ம்ம்" அவன் தலையைக் கூடத் தூக்காம முனகுனான்...

"நான் என்னத் தப்பு பண்ணேன்... ஏன் என்னை விரோதி மாதிரி நடத்துற?"

"ம்ம்ம்ம்ம்" தலையை நிமித்துனவன் முகத்தில் அப்படி ஒரு மூர்க்கம். நான் ஒரு நிமிசம் கொஞ்சம் ஆடிப்போயிட்டேன். அடுத்த நிமிசமே மறுபடியும் முகத்தை தரையிலேத் தொங்கப் போட்டுகிட்டான்..

குனிஞ்சத் தலை நிமிரமாலே கேட்டான்....

"ரஞ்சனியை நீ காதலிக்கிறியான்னு அன்னிக்கு நான் உன்னை கேட்டதுக்கு என்னப் பதில் சொன்ன சிவா?"

"தெரியல்லன்னு சொன்னேன் சரவணா"

"உன் கேள்விக்கும் என் பதில் அது தான்..." அப்படின்னு சொல்லிட்டு எந்தரிச்சுப் போயிட்டான்.

கடைசிக் கட்டப் பேச்சு வார்த்தையும் முறிந்த நிலையில் நான் மனத்தை ஆற்ற ஒரு தம் பற்ற வைத்து மாடியில் போய் நின்றேன்.

என் வீட்டு மாடியில் இருந்து பார்த்தால் எங்க அவென்யு தண்ணித் தொட்டி தெரியும்.. அந்தத் தண்ணித் தொட்டிப் படிகளில் உச்சியில் சரவணன் நின்று தம்மடித்து கொண்டிருந்தான்.. இரண்டு பேர் விட்ட புகைக் கூட நேர் எதிர் திசைகளில் பயணித்தன.. அதை யோசிக்கும் போது எனக்கு லேசானச் சிரிப்பு வந்துச்சு...

"என்னடா இது... நான் பாட்டுக்குப் போயிட்டு இருந்தேன்... நூல் இல்லாத பட்டம் மாதிரி... அண்ணனும் இல்ல ஆட்டுக்குட்டியும் இல்லன்னு... தொட்டாலே தகாதுன்னு தள்ளித் தானே நின்னோம்... நீ திருட்டுப் பய மாதிரி அன்னிக்கு ஓடி வர.. எனக்கும் உனக்கும் இனிஷியல் கொடுத்த ஒரு அப்பாவுக்காக உன்னை நான் ஊர் மாத்துல்ல இருந்து காப்பாத்துனேன்... கொஞ்சூண்டு சகோதரப் பாசமும் தான்....பயபுள்ள நீ தானேடா உன் காதலைச் சொல்லி கரையேத்துன்னு என் கிட்டச் சரக்கெல்லாம் வாங்கிக் கொடுத்து ரெக்கமெண்டு கேட்டு நின்ன.... உன் கெட்ட நேரம்.... உன்ன அவளுக்குப் பிடிக்கல்ல... என் கெட்ட நேரம் என்ன அவளுக்குப் பிடிச்சுப் போச்சு... எனக்கும் லேசா அவளைப் பிடிச்சுத் தொலைச்சுருச்சு... ஆனாலும் தம்பி நான் ஜெண்டில் மேன்டா...அண்ணன் ஆசைப்பட்ட பொண்ணுன்னு என் லவ்வை டெவலப்பிங் ஸ்டேஜ்ல்ல டிலிட் பண்ணத் தான்டா ட்ரைப் பண்ணேன்... நீ தான் தம்பியைத் தப்பா.......

நடந்த விசயத்தை எல்லாம் கோர்வையா மனசுல்ல அப்படியே ரீல் ஓட்டிகிட்டு வரும் போது இந்த இடத்துல்ல வந்து தட்டிச்சு

"தம்பியா... ஆகா... நீ என்னைத் தம்பியாவே நினைக்கல்லயேடா.. உன் லவ்வைச் சொல்ல ஒரு போஸ்ட்மேனாத் தானே வச்சுருந்து இருக்க... இத்தன வருசம் இல்லாத பாசம் புதுசாப் பொங்குன உடனே நானும் அண்ணன் அண்ணன் காதல்ன்னு மறுகிட்டேன்.... நீ என்னைக் கேவலம் சரக்குக்கு விலைப் போற சல்லி பயலா இல்லப் பாத்து இருக்க...சரவணா... உனக்கு எப்பவும் எதுல்லயும் ஜெயிக்கணும்... அதுக்கு எதையும் யாரையும் வளைக்கலாம் நெளிக்கலாம்..தம்பி கூட உனக்கு வெறும் ..I HAVE BEEN USED BY YOU TO WIN OVER A GIRL " நினைக்க நினைக்க எனக்கே என் மீது அருவெருப்பாய் வந்தது

"ஆனாலும் உன்னாலே ஜெயிக்க முடியல்லயே சரவணா" இந்த எண்ணம் கொஞ்சம் ஆறுதல் அளித்தது.

அடுத்த நாள் மதியம் மேட்னி ஷோ படம் முடித்து சுற்றி விட்டு அவென்யு வந்து சேரும் போது எங்க வீடு பூட்டியிருந்துச்சு...

"சிவா.. உங்க அண்ணன் சரவணன்.. தண்ணி தொட்டியில்ல இருந்து கால் தவறி கீழே விழுந்துட்டான்.. நிறைய ரத்தம் போயிருச்சு..ராயப்பேட்டை ஆஸ்பத்திரிக்குத் தூக்கிட்டுப் போயிருக்காங்க..." பக்கத்து வீட்டு மாமி சொன்னாங்க...

அந்த வினாடியில் எனக்குள்ளே ஏற்பட்ட அதிர்வுகளை வார்த்தைகளால் சொல்ல முடியாது.... படம் முடிஞ்சு வந்த மொத்த டீமும் அப்படியே ராயப்பேட்டை நோக்கி கிளம்புனோம்... யார் வண்டியிலே நான் உக்காந்துப் போனேன்ங்கற விசயம் இப்போ வரைக்கும் என் நினைவுக்கு வரவே இல்ல.. அதை யோசிச்சு நினைவுக்கு கொண்டு வரும் முயற்சிகளையும் நான் விட்டு ரொம்பக் காலம் ஆச்சு.

அப்பாவோட ரகசிய அழுகை... அம்மாவின் கதறல்.... சரவணன் ஒரு மரக்கட்டை போல் படுத்திருந்த அந்த ஆஸ்பத்திரி அறை... ஒரு பத்து நாட்கள் இப்படியே ஓடிப் போச்சு....

யார் யாரோ வந்து பாத்துட்டுப் போனாங்க... அப்பா கையைப் பிடிச்சு ஆறுதல் சொன்னாங்க.. அம்மா மட்டும் அழுதுகிட்டே இருந்தாங்க... முதல் முறையா அப்பா என் தோளைப் பிடிச்சுகிட்டு ஒரு பத்து நிமிசம் நின்னார்... அவரோட கை ரெண்ட்டும் என் தோளை அழுத்துன விதத்துல்ல நான் நிறைய புரிஞ்சுகிட்டேன்... MY LIFE WAS NEVER GOING TO BE THE SAME..

அப்பாவோட பேங்க் பேலன்ஸ் கணிசமாக் குறைஞ்சது...ஆனாலும் சரவணன் அசையவும் இல்ல.. பேசவும் இல்ல....

ஒரு பத்து நாளுக்கு அப்புறம் அவென்யுக்குப் போனேன்... ஆள் அரவமில்லாத மதிய நேரம்...மதிய தூக்கம் பழக்கமில்லாதக் காரணத்தாலே.. அப்படியே எழுந்து நடந்தேன்... எதேச்சையாத் தண்ணீர் தொட்டி பக்கம் போனேன்.. சரவணனை நான் கடைசியாப் பாத்த இடம்... சரவணன் கால் தடுக்கி விழுந்த இடம்... மெதுவா படிகள் ஏறி மேலப் போனேன்...

இங்கேத் தான்... இங்கே இருந்து தான் சரவணன் கால் தடுக்கி....அந்த சுவத்தையும் அதனை ஓட்டி இருந்த உச்சிப் படிக்கட்டின் கீழ் ஓரத்தில் மறைவாய் சிக்கியிருந்த அந்தப் பொருளையும் கவனித்த என்னால் அவன் கால் தடுக்கி தான் விழுந்திருப்பான் என சத்யமா நம்ப முடியாமல் போனது...

________________________________________________________________________

நாட்கள் நீண்டு.. வாரங்கள் விரைந்தன... மாதங்கள் கரைந்தன... சரவணன் நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை...
"NOW HE IS IN DEEP COMA BUT THERE IS A CHANCE OF HIM SURVIVING IF YOU BELIEVE IN MEDICAL MIRACLES"

எங்க தூரத்து உறவுக்கார டாக்டர் ஒருத்தர் பாக்க நடிகர் மேஜர் சுந்தர்ராஜன் மாதிரி இருப்பார்... எங்க கிட்டச் சொன்னார்...சரவணனைத் தன்னோட மருத்துவமனையிலே வச்சு கவனிக்கறதுமாச் சொன்னார்.. எதோ ரிசர்ச் ரிசன் அப்படின்னு அவருக்கு அதுல்ல ஒரு லாபம்... அப்பா அம்மா இரண்டு பேரும் மெடிக்கல் மிராக்களோ.. என்னவோ பெத்தப் புள்ள கண்ணைத் தொறப்பான்ன்னு நம்புறாங்க..வருசங்கள் ஓடிப் போயிட்டே இருக்கு....

"ஆகா ரொம்ப் நேரம் படியிலே உக்காந்துட்டேன் போலிருக்கே.... அதே இடம்... இப்பவும் அந்த சுவத்தைத் தான் பாத்துகிட்டு இருக்கேன்.... அதுல்ல சரவணன் கையெழுத்துல்ல
சாதல் சாதரணம்... காதல் சதா ரணம்....." அப்படிங்கற கவிதை...
கவிதையைப் படிச்சுட்டு என் பாக்கெட்டுக்குள்ள கைவிட்டு நான் அன்னிக்கு இதே இடத்துல்லப் பாத்த... அந்தப் பொருளை... அந்த உடைந்த வெள்ளிக் கொலுசு மணியை எடுத்து நிலா வெளிச்சதுல்ல பாக்குறேன்... ஒரு பொழுதினில் ரஞ்சனியின் கால்களை அலங்கரித்து என் சித்தம் கொள்ளைக் கொண்ட கொலுசு மணி ஆச்சே அது..."

பிகு: சரவணன் ஆஸ்பத்திரியிலேச் சேந்த அடுத்த நாள் ரஞ்சனி அவென்யு விட்டுப் போயிட்டா. காலேஜ் பைனல் செம் பரீட்சைக்கும் வர்றல்ல. செப்டம்பர்ல்ல எழுதுனதாப் பின்னாடி கேள்விபட்டேன். பின்னாடி அவக் குடும்பமும் மெதுவாக கேரளாவுக்கு இடம்பெயர்ந்துட்டாங்க.. அவென்யு தோழிகள் ஒண்ணு ரெண்டு பேர் கிட்ட எப்போவாது தொடர்பு கொள்ளுரான்னு கேள்வி படுறது உண்டு...அவக் கல்யாணம்... குழந்தை எல்லாம் இப்படி காத்து வாக்குல்ல வந்த செய்திகள் தான்...

நான் , ரஞ்சனி, சரவணன் மூணு பேர் சம்பந்தப்பட்ட இந்த நிகழ்வுகள்ல்ல எனக்குத் தெரிஞ்சதை எல்லாம் உங்க கிட்டச் சொல்லிட்டேன்... எனக்குத் தெரியாத விசயம் ஒண்ணு தான்.. அதைச் சொல்லுற நிலைமையிலே சரவணன் இல்ல... ரஞ்சனி சொல்லுவாளா தெரியல்ல.... ஆனா எனக்குத் தெரிஞ்சிக்கணும் என்னப் பண்ணலாம் சொல்லுங்க...?

Thats all for now folks...

Wednesday, March 19, 2008

என் அண்ணன் பேரு சரவணன் - 7

முந்தைய பகுதி படிக்க

ரஞ்சனியோட நான் ஓட்டலுக்குப் போன விஷயம் அப்பாவோட பிரண்ட் ஒருத்தர் மூலமா அப்பாவுக்கு போய் அது வீட்டு நடுக்கூடத்துல்ல பெரிய பூகம்பமா வெடிச்சு நம்ம பேர் இன்னும் கொஞ்சம் ஆழமா அகலமா ரிப்பேர் ஆச்சு... சரவணன் காதுக்கும் இந்த விவரமெல்லாம் போச்சு.. ஆனா அவன் பெருசா அலட்டிக்கல்ல.. என் கிட்ட எதுவும் கேக்கல்ல...

அதுக்குப் பிறகு நான் ரஞ்சனியோடப் பேசறதைக் குறைச்சுக்க எவ்வளவோ முயற்சி பண்ணேன். ஆனா அதை அவப் புரிஞ்சிக்கவே இல்ல...காலேஜ் கல்சுரல்ஸ் வந்துச்சு.. மெக்கிடோஸ் 2000... அதுக்கு எல்லாரும் தயாராகிட்டிருந்தாங்க...

காலேஜ் ஹாஸ்ட்டல் மொட்டை மாடியிலே முழுசா நாலு சிகரெட்டை நடந்துகிட்டே ஊதி தள்ளூனேன்...பிரச்சனையின் பாரம் உச்சந்தலையை அழுத்துனதுல்ல கத்தையா முடி கொட்டுச்சு...நடந்த நடையிலே செருப்பும் மொட்டை மாடி தரையும் தேஞ்சுப் போச்சு.. ரொம்பவே யோசிச்சதுல்ல மூளையிலே மிச்சம் மீதி எல்லாம் தீஞ்சுப் போயிருமோன்னு பயம் வந்துருச்சு... வர்றது வரட்டும்டா... இனி சரவணன் கிட்டப் போய் இத்தனை நாளும் நான் உன் காதலை ரஞ்சனிகிட்ட சொல்லல்ல... சொன்னதா உங்க கிட்ட ரீல் தான் விட்டேன்னு சொன்னா விளைவு விபரீதமாப் போவுலாம்... இல்ல விவகாரமாவும் போவலாம்... அதுக்குப் பேசாம துணிஞ்சுப் போய் ரஞ்சனி கிட்ட சொல்லிருவோம்...எங்க அண்ணன் உன்னைக் காதலிக்கிறான்... உன்னை அண்ணியாத் தான் நான் பாக்குறேன்னு ( மனசைக் கல்லாக்கி...சரி வர்றல்லன்னா புல்லாக்க்கியாவது) சொல்லிரணும்டா

நாம் எல்லாம் யார்... வந்த வழி என்ன? மன்னன் பூங்குளத்தில் ஒண்ணா ரெண்டா வண்ண மீன்கள்...அட பாவி பைய சரவணன் சென்டிமெண்ட் டைப்... காதல் கருவாடு... சாதல் சடுகுடுன்னு ரைமிங்கா கவிதை எல்லாம் எழுதுறான்... நமக்கு இதயம் பெருசு... இன்னும் எத்தனைப் பேருக்கு அதை ரென்டுக்கு விட வேண்டியிருக்கு...

"டேய் சிவா.. உனக்குப் பாக்குற எல்லாப் பொண்ணுமே பியூட்டிபுல்டா.. கல்லிலும் கலைவண்ணம் காணும் சிற்பி மாதிரிடா நீ.. ஆனா சரவணன்... காதலிச்சு கவுந்துப் போன கப்பிடா... அதுன்னால்ல.... ரூட்டை மாத்து... பாட்டை மாத்து... போயிட்டே இருடா...." உள் மனசு உக்கார வச்சு அம்புட்டு நேர்த்தியாப் புத்தி சொன்னப் பிற்கும் கேக்கல்லன்னா எப்படி... ஒரளவு தெளிவாயிட்டேன்... ரஞ்சனியைப் பாக்கப் கிளம்புனேன்......

பஸ் ஸ்டாப்க்கு எதிரில் வி.ஐ.பி பட போஸ்டர் ஓட்டி இருந்தாங்க...அங்கிட்டும் இங்கிட்டும் மேஞ்சிகிட்டு இருந்த நம்ம கண்ணு போஸ்டர்ல்ல இருந்த பொண்ணு மேல போய் கன்னு மாதிரி குறி வச்சு நின்னுருச்சு.. கையிலே நாயர் கடை டீ சட்டுன்னு ஓவர் சூடு ஆன மாதிரி ஒரு பிலீங்... யம்மாடி ஜீன் ஸ் டைட் பனியன்ன்னு புதுசா ஒரு குட்டி கோலிவுட்டுக்கு அறிமுகம் போலன்னு நெனச்சுகிட்டு டீயை உதட்டுக்கு ஒரு இன்ச் கீழே இறக்கி கொட்டவும்... அந்த நினைப்பு கூட இல்லாம நின்ன என்னை தோள்ல்ல தட்டி ஒரு கை உலுக்கிச்சு....

வூ இஸ் த டிஸ்டர்பன் ஸ் அப்படின்னு ஒரு மாதிரி கோவ எபெக்ட் காட்டி திரும்பிய நான் அப்படியே டீயை மொத்தமா கவுத்துட்டு திறந்த வாய் மூடாமல் நின்னேன்... பின்னே போஸ்ட்டர்ல்ல பார்த்த அதே பொண்ணு என் பக்கத்துல்ல அதே ட்ரெஸ்ல்ல வந்து நின்னா நான் என்ன ஆகியிருப்பேன்ன்னு யோசிச்சுப் பாருங்க....

ஏய்...என்ன.... டீயை எல்லாம் கொட்டிட்டு நிக்குறே..அப்படி என்ன யோசனை?

"இல்ல தீடிரென்னு டீ ஒவராக் கொதிக்க ஆரம்பிச்சுருச்சு அதான்.... " என்று கண்ணை இமைக்க மறந்து அவளையே பார்த்தேன்...

அன்னிக்கு சேலையிலே வந்து மனசை கேக்காமலே வாங்கிப் போனா,, அதைத் திருப்பி வாங்கவே நடையா நடந்து செருப்பையும் மொட்டை மாடியையும் தேய்ச்சு இப்பத் தான் கேக்கலாம்ன்னு வந்து நிக்குறேன்.. அதுக்குள்ள ஜீன் ஸ் ஷர்ட்ன்னு மாடர்ன்னா வந்து மனசை இரக்கமில்லாம மர்டர் பண்ணிருவாப் போலிருக்கே.... வி.ஐ.பியில்ல அறிமுகமான அந்தப் புது பொண்ணு யார்ன்னு கண்டுபிடிச்சிங்கன்னு வைங்க.. ரஞ்சனி எப்படி இருப்பான்னு உங்களுக்கும் தெரிஞ்சுப் போகும்...

"என்ன ஆனாலும் சிவா... ரிவர்ஸ் கியர் மட்டும் போடாதே... உனக்குன்னு ஒரு ரூட் இருக்கு.. இந்த கவிதை கதறல் எல்லாம் உனக்கு ஒத்து வராது... அதுன்னால்ல.."

உள்ளே இருந்த மனச்சாட்சி கிட்டத்தட்ட நெஞ்சாங் கூட்டை கிழிச்சிட்டு வெளியே வந்து என் செவட்டுல்ல நாலு அறை விட்டு, சொன்னதை எல்லாம் மறுபடியும் ஞாபகப்படுத்த முடிவு பண்ணிகிட்டு இருக்கறது எனக்கும் விளங்கிருச்சு...மனச்சாட்சியை உள்ளேயே இருக்கும் படி வேண்டி விரும்பி கேட்டுகிட்டு எடுத்த முடிவுல்ல உறுதியா இருக்கறதா இன்னொரு எக்ஸ்ட்ரா முடிவும் பண்ணிகிட்டேன்...

"ரஞ்சனி நான் உன் கிட்டத் தனியாப் பேசணும்....."

"கல்சுரல் முடியட்டுமே..."

"இல்ல அவசரம்..." நான் கொஞ்சம் பிடிவாதமாவே சொன்னேன்...

அதே ஹோட்டலுக்குப் போனோம்... காபியும் அவளுக்குப் பிடித்த வெங்காயத் தோசையும் சொன்னோம்... இரண்டு கைகளால் காபி கோப்பையைப் பிடித்தப் படி பாதி முகம் மறைத்து அந்த பெரிய விழிகளை விரித்து புருவம் உயர்த்தி என்ன என்பது போல் என்னை ரஞ்சனி கேட்ட அழகு இருக்கே.... ஆத்தாடி அதுக்காகவே அவளோட இன்னும் ஆயிரம் காபி குடிக்கலாம் போலிருக்கே...

அவளூடைய அந்த அலட்சியமான பாவனைகள் ஒவ்வொன்றும் என்னையுமறியாமல் என்னை வசப்படுத்திக் கொண்டு இருந்தன...

"என்னவோ சொல்லணும்ன்னு சொன்ன.. ஒண்ணும் பேசமா உக்காந்து இருக்க...." ஒரு வித கேலியும் கிண்டலும் கலந்துக் கேட்டாள்..

"அது வந்து.. எப்படி ஆரம்பிக்கிறதுன்னு தெரியல்ல" நான் ஒரு ராகமாய் இழுத்தேன்...

"உங்க அண்ணன்ன்னு ஒருத்தன் சுத்திகிட்டு இருக்கானே சரவணனா அவன் பேரு... அவன் சொன்னா மாதிரி... நீயும் சொல்லப் போறீயா...?"

எனக்குள் எங்கோ சுருக்கென்று அவள் கேள்வியில்ல ஒளிஞ்சிருந்த ஏளனம் குத்தியிருச்சு...கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி எனக்குள்ளே இருந்த மயக்கம் கிறக்கம் எல்லாம் அப்படியே சொல்லாமல் கொள்ளாமல் கிளம்பிகிட்டு இருந்தன...ஒரு மாதிரியான இறுக்கம் என்னை அப்படியே வந்து பிடிச்சு அழுத்திச்சு...

"என்னை லவ் பண்ணுறானாம்... என்னைத் தான் கல்யாணம் பண்ணிக்கப் போறானாம்... என் கூட ரெண்டு குழந்தைப் பெத்துக்கப் போறானாம்... பேர் எல்லாம் கூடச் சொன்னான்... இதை எல்லாம் சொல்லுறதுக்கு அவனுக்கு எப்படி.....இந்த இடத்தில் ஒரு அலட்சிய புன்னகை சிந்தியவள் மேலயும் பேசுனா... உங்க அண்ணன் மாதிரி போன ஒரு வருசத்துல்ல என் கிட்ட ஆறு பேர் வந்து சொல்லிட்டானுங்க...எல்லாவன் மூக்கையும் உடைச்சு அனுப்பிட்டேன்... இப்போ நீயும் எதோ சொல்லணும்ன்னு ஆரம்பிக்குறே... என்னச் சொல்லப் போற.. ஐ லவ் யூ வா....?"

அது என்ன எவனுக்கும் அடங்காதப் பேச்சு..அதுவும் என் அண்ணனையே அவமானப்படுத்துற பேச்சு.. அதுவும் என் கிட்டேயே....எனக்குள்ள.. எங்கேயோ ஓரமா படுத்து கால் நீட்டி படுத்துகிட்டு இருந்த சனியன் சட்டுன்னு என் நாக்குல்ல ஏறி நடுமத்தியிலே கால் மேல கால் போட்டு உக்காந்துகிட்டான்... அந்த விவரம் தெரியாத நான் படு பந்தாவா மவுத்தை நல்லா ஓப்பன் பண்ணி சவுண்டா ( சினிமான்னா இந்த சீனுக்கு எக்கோ எபெக்ட் எல்லாம் டி.டி.எஸ்ல்ல் பி.ஜி.எம்மா சேத்துருப்பாங்க) சொன்னேன்....

"ஆமா ரஞ்சனி நான் உன் கிட்ட ஐ லவ் யூ சொல்லத் தான் இங்கே கூட்டிட்டு வந்தேன்... இதோ இப்போவும் சொல்லுறேன்... ரஞ்சனி ஐ லவ் யூ..."

அடுத்து அப்படியே பொங்குவா... வெங்காய தோசையில்ல் மீதி இருந்த தேங்கா சட்னியை எடுத்து முகத்துல்ல வீசுவான்னு ஒரு மாபெரும் யுத்தத்துக்கு ரெடியாவுற போர் வீரன் மாதிரி உள்ளுக்குள்ளே ஒத்திகை எல்லாம் பாத்துட்டு அவளை பாத்தேன்...

அவப் பொங்கவே இல்ல... பொங்குற மாதிரியும் தெரியல்ல... மிச்சம் இருந்த வெங்காயத் தோசையை வெக்கம் இல்லாம தின்னுகிட்டு இருந்தா... வெக்கம் எதுக்குன்னாக் கேக்குறீங்க... போருக்கு நான் ஆயத்தம் ஆன கேப்ல்ல என் தட்டுல்ல மிச்சம் இருந்த வெங்காயத் தோசையை இல்ல அவ தின்னுகிட்டு இருந்தா..

உள்ளுக்குள்ளே இருந்த மனச்சாட்சிங்கற மானஸ்தன் அன் பிளான்ட்(unplanned) லீவை என் கிட்டச் சொல்லாமலே எடுத்துட்டு ஏழு கடல் தாண்டி ஏழு வருசம் பயணம் கிளம்பிட்டான்...

"எல்லாவனுக்கும் சொன்ன பதிலை உனக்குச் சொல்ல முடியாது சிவா... " அவள் விரல்கள் வெங்காயத் தோசையில் மெல்லிய கோலம் போட்டுக்கிட்டு இருந்தன...

"எங்க அண்ணனுக்கு என்ன குறை...?" எப்படியோ கஷ்ட்டப்பட்டு அந்தக் கேள்வியைக் கேட்டே விட்டேன்...

"உன் அண்ணன் கிட்ட என்ன குறைன்னு எனக்கு தெரியாது.. ஆனா நீ என் கூட இருந்தா எந்த குறை இருந்தாலும் பெருசாத் தெரியாதுன்னு மட்டும் மனசுக்குப் படுது சிவா..."

எனக்கு என்னச் சொல்லுறது தெரியாம நின்னேன்...

அதிசயமாய் அந்த மார்ச் மாதத்து பகலில் மழை பெய்தது...

ரஞ்சனிக்குக் காத்திருக்காமல் மழையில் நனைந்தப் படி காலேஜ் நோக்கி நடக்க ஆரம்பிச்சேன்....

காலேஜ் வாசலில் நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை சரவணன் எனக்காக காத்திருப்பான்னு...

தொடரும்

Saturday, March 08, 2008

என் அண்ணன் பேரு சரவணன் - 6

முந்தைய பகுதி படிக்க

விழா கிட்டத் தட்ட முடியும் நிலையை எட்டியிருந்தது.மேடையில் சந்தானம் அங்கிள் நன்றியரை சொல்லிகிட்டு இருந்தார்.அப்பாவைப் பார்த்தேன்.. குருமூர்த்தி அங்கிள் கிட்ட சுவாரஸ்யமாப் பேசிகிட்டு இருந்தார். எனக்கு இருப்பு கொள்ளவில்லை...

"எங்கேடா எந்தரிச்சிட்ட...?" சோமு கையைப் பிடிச்சு இழுத்தான்..

"வந்துடுறேன் மச்சி"

"டேய் பார்ட்டியை மறந்துடாதே...எங்க வீட்டு மாடிக்கு வந்துடு..." சோமு ஞாபகமூட்டி அனுப்பினான்.

நான் தலையாட்டிட்டு அப்படியே நடக்க ஆரம்பிச்சேன்.

அவென்யு வாட்டர் டேங்க் பக்கம் போய் ஒரு தம் எடுத்து பத்த வச்சேன்.. அவென்யூவிற்கு வரும் போது மட்டும் என்னவளுக்குக் கொடுத்த சத்தியத்தைத் தற்காலிகமாய் மீறுவது என் வழக்கம். மெதுவாக தண்ணீ தொட்டி படிக்கட்டுகளில் ஏறி உச்சி படிகட்டில் போய் உட்கார்ந்து கொண்டேன்.

திருவள்ளூர் என்.எஸ்.எஸ் கேம்ப்க்கு மீண்டும் நினைவுகள் போய் வந்தது.

அந்தக் கேம்பில் எவ்வளவோ முயன்றும் என் அண்ணன் கொடுத்த கடிதத்தை ரஞ்சனியிடம் என்னால் கொடுக்க முடியவில்லை...கேம்ப்மும் முடிஞ்சுப் போச்சு..அந்தக் கடிதம் பத்திரமாய் என்னிடமே இருந்தது...

சரவணன் என்னிடம் விசாரித்தப் போது.. கொடுத்தாச்சு என ஒப்புக்கு சொல்லி வைத்தேன்... எப்படியும் கொடுத்துடலாம் என ஒரு நம்பிக்கை தான். சரவணனும் என்னை நம்பிட்டான். இப்படியே நாட்கள் ஓடிக்கிட்டு இருந்துச்சு... அவ்வப்போது சரவணன் அவளுக்குக் கொடுக்கச் சொல்லி எதாவது கொடுப்பான்.. நானும் கொடுப்பதாய் வாங்கி வைத்து கொள்வேன்... இது கொஞ்சக் காலம் ஓடியது...

அவ என்னச் சொன்னா அப்படின்னு கேப்பான்... இந்த ஸ்கூல் எக்ஸாம் எல்லாம் முடியட்டும்ன்னு சொன்னா காலேஜ் அட்மிஷ்ன் முடியட்டும்ன்னு சொன்னா.. இன்னும் ஒரு வாரம் போகட்டும்ன்னு சொன்னா... அடுத்த மாசம் பாக்கலாம்ன்னு சொன்னா... இப்படியே வகை வகையா பிட் போட்டு அவன் ஆசையில்ல தண்ணி ஊத்திகிட்டு வந்தேன்... அவன் ஆசை நெருப்பாயிருக்கும் தண்ணி ஊத்துனா தணிஞ்சுப் போயிரும்ன்னு நான் நினைச்சேன்... படுபாவி அண்ணனோட ஆசை செடியா இருந்திருக்கு நான் ஊத்துன தண்ணியில்ல அது பாட்டுக்கு வேர் விட்டு நிலையா வளந்துருக்கு.. இந்த விவரம் எனக்கு கொஞ்சம் லேட்டாத் தான் தெரிய வந்துச்சு...

சரவணன் வேலைக்குன்னு பெங்களூர் போயிட்டான்... நான் உள்ளூர்ல்லேயே நம்ம மார்க்குக்கு தகுந்த ஒரு காலேஜ்ல்ல சேர்ந்து படிக்க ஆரம்பிச்சேன்...ரஞ்சனியும் என் கல்லூரியில் தான் சேர்ந்தாள்... அவ வேற டிப்பார்ட்மெண்ட் நான் வேற டிப்பார்ட்மெண்ட்... ஆனா இரண்டு பேரும் ஒண்ணா ஒரே பஸ்ல்ல தான் காலேஜ்க்கு போவோம் வருவோம்...அவென்யூவில்லே நான் அதிகமாப் பேச்சு வார்த்தை வச்சிக்காத ஒரே பொண்ணு ரஞ்சனி தான்...

அவளைப் பத்தி எல்லாம் நான் அதிகம் யோசிச்சதே இல்ல... ஆனா இந்த அண்ணன் சரவணன் அவளைக் காதலிக்கிறான்ன்னு தெரிஞ்சப் பின்னாடி தான் அவளை நான் கவனிக்கவே ஆரம்பிச்சேன்.. சின்ன வயசுல்ல ரஞ்சனி கூட எவ்வளவோ தடவை விளையாடி இருக்கேன்... அப்புறம் ஒரு கட்டத்துல்ல எதோ ஒரு திரை விழுந்து ரொம்ப பக்கத்துல்ல இருந்தாலும் ரஞ்சனிக்கும் எனக்குமான இடைவெளி ரொம்ப அதிகமாப் போயிருச்சு...பார்த்தாலும் பேசுறது இல்ல... சிரிக்கிறது இல்ல... கிட்டத்தட்ட தெரியாதவங்க மாதிரியே போயிட்டோம்... எப்படி அப்படி ஆனோம்ன்னு எனக்கும் தெரியல்ல.. அதைப் பத்தி எல்லாம் எப்பவும் நான் யோசிச்சதும் இல்ல..

ரஞ்சனிகிட்ட அப்படி என்ன இருக்குன்னு இந்த சரவணன் அவப் பின்னாடி போனான் அப்படின்னு யோசிக்க ஆரம்பிச்சேன்.. இந்தக் கண்ராவி காதலை எப்படித் தான் பண்ணுறானுங்களோன்னு எனக்கு நானே கேட்டுகிட்டேன்...

அன்னிக்கு கல்லூரியிலே எதோ பங்க்சன் போல... பொண்ணுங்க எல்லாம் சும்மா விதம் விதமா புடவைக் கட்டி கல்யாண வீட்டு ரிசப்ஷ்ன்ல்ல நிக்குறதுக்கு கிளம்புன மாதிரி வந்திருந்தாளூங்க... பசங்க எல்லாம் பத்த வச்ச சிவகாசி பூவாணம் மாதிரி வாயெல்லாம் சிரிப்பா விரிய...குஷி ஜோதிகவா தனக்கு எந்தப் பொண்ணு சிக்குவான்னு கண்களை அலை பாய விட்டுகிட்டு இருந்தாங்க.. நானும் தான்...ஒவ்வொரு பொண்ணா பாத்துகிட்டே வந்தேன்...

ஒரு மூணூ நாலு இருக்கை தள்ளி முன்னாடி இருந்த இருக்கையிலே பச்சக் கலர் புடவையிலே ரஞ்சனி...
எனக்கு எப்பவும் நாலு இருக்கைத் தள்ளி தான் ரஞ்சனி பஸ்ல்ல உக்காருவா... நானும் அதிகமா அவ இருக்க பக்கம் பாக்க மாட்டேன்..ஆனா அன்னிக்கி என்னவோ தெரியல்ல அவளைப் பாத்துட்டு கண்ணை வேற பக்கம் திருப்ப முடியல்ல....

பச்சக் கலர் சைனா சில்க் புடவை... அதுல்ல்ல அழகௌ அழகா கண்ணை டேமேஜ் பண்ணாத ஓவியங்கள்... அதுக்கு மேட்சிங்கா ரவிக்கை... ரவிக்கை ஓரம் லேசான தங்க நிறத்துல்ல கொஞ்சம் வேலைப் பாடு... காதுல்ல பச்சக் கல் வச்ச ஜிமிக்கி ரஞ்சனி அப்படி இப்படி தலையை ஆட்டும் போது எல்லாம் அது பாட்டுக்கு ஊஞ்சல் கட்டி ஆட ஆரம்பிசிடுது... அப்புறம் பஸ் போற வேகத்துல்ல ஜன்னல் வழியா நுழைஞ்ச காத்து அவ நெத்தியிலே விழ்ந்த ஒரு கற்றை முடியைக் கலைத்துப் போடுவதும் இவ ஒரு கையால அதை சரிப் படுத்துறதும்ன்னு ஒரு கலைக் கச்சேரியே நடந்துகிட்டு இருந்துச்சு.. நான் வச்ச கண் வாங்கமா இதை எல்லாம் பாத்துகிட்டே இருந்தேன்...என்னையுமறியாமல் என் முகத்துல்ல ஒரு அசட்டு சிரிப்பு தவழ்ந்தது எனக்கே தெரிந்தது...சிரிப்பை அடக்க நான் முயற்சி எதுவும் செய்யல்ல

பஸ் கல்லூரிக்குள்ளே நுழைஞ்சு நின்றது.. எல்லாரும் இறங்கி அவங்க அவங்க பிளாக் பாத்து நடக்க ஆரம்பிச்சாங்க.. ரஞ்சனி கிளாசுக்குப் போக எங்க பில்டிங் தாண்டி தான் போகணும்...ரஞ்சனி முன்னால் நடந்துப் போயிகிட்டு இருந்தா நான் கொஞ்சம் மெதுவா அவப் பின்னாடி நடந்தேன்.. இதுக்கு முன்னாடி நான் ரஞ்சனியைப் புடைவையில் பார்த்தது இல்லை... அவென்யு விழாக்களுக்குக் கூட அவளை அப்படி பாத்ததா எனக்கு ஞாபகம் இல்ல

புடவையை இவ்வளவு அழகாக் கட்ட முடியுமான்னு என்னை யோசிக்க வச்சிட்டா...எப்பவோ படிச்ச தேவைதக் கதை எல்லாம் ஞாபகத்துக்கு வந்துப் போச்சு... தேவதைகள் எல்லாம் புடவைக் கட்டுனா இப்படித் தான் இருக்குமோ....அப்படின்னா ரஞ்சனி தேவதையா...?

நான் இதை யோசிச்சுகிட்டே நடந்துட்டு இருக்கும் போது முன்னால் நடந்துகிட்டு இருந்த ரஞ்சனி நின்று கொண்டு இருந்தாள்..அவளைக் கவனித்தும் கவனிக்காத மாதிரி அவளைத் தாண்டி போயிராலம்ன்னு கொஞ்சம் வேகமா அடி எடுத்து போட்டேன்

சிவா.... ரஞ்சனியின் குரல் கேட்கவே... கால் அப்படியே பிரேக் போடு நின்னுருச்சு.

என் நாக்கு உள்ளுக்கு ஒட்டிக் கொண்டது... கொஞ்சம் தயக்கம் கொஞ்சம் தடுமாற்றம் என மெதுவாக அவப் பக்கம் நடந்துப் போனேன்... போகும் போது அவ முகம் பாக்குறதைக் கூடுமான மட்டும் தவிர்த்தேன்.. குறிப்பா அவ கண்ணை விட்டு என் கண்ணை விலக்கியே வைத்தேன்... என்னமோ தெரியல்ல அவக் கண்களை என்னால் நேருக்கு நேர் சந்திக்க முடியல்ல...

அவ கட்டியிருந்த புடவையோட நுனி பாதையோரமா இருந்த முள்ளில் சிக்கிட்டு இருந்துச்சு...அவளால்ல அதை குனிந்து எடுக்க முடியாம நின்னுகிட்டு இருந்தா... புடவைக் கட்டிப் அதிக பழக்கமில்ல போல... முந்தானைச் சரிஞ்சுடுமோன்னு கொஞ்சம் தயங்கி நின்ன மாதிரி தெரிஞ்சுது..என் உதவி அவளுக்குத் தேவைப்பட்டதுங்கறதை அவக் கேக்காமலே நான் புரிஞ்சுகிட்டேன்..

அக்கம் பக்கம் அவ வகுப்பு தோழிகள் வேற யாரும் இல்ல.. ரொம்பத் தயங்கித் தான் என்னக் கூப்பிட்டிருக்கான்னும் நான் புரிஞ்சிக்கிட்டேன்.. நான் அவக் கால் பக்கம் குனிஞ்சு.. ரொம்ப பக்குவமா அந்த முள்ளுல்ல இருந்து அவப் புடவையை விடுவிச்சேன்.. அக்கம் பக்கம் போனவங்க யாராவது பாக்குறாங்களோன்னு ஒரு சின்ன எச்சரிக்கை வேற எனக்குள்ளே ஓடுச்சு,,,

முள்ளை எடுக்கும் போது தான் அவ பாதங்களை எதேச்சையாப் பாத்தேன்... பாதம் மேல மெல்லிய கொலுசு... பூ வேலைப் பாடு எல்லாம் பண்ணி பிரமாதமா இருந்துச்சு... கலிங்.. கலிங்ன்னு ரொம்ப மெல்லிய ஓசை... காது வச்சுக் கேட்டாத் தான் கேக்கும் போல... அப்புறம் நகத்துல்ல எல்லாம் ஒலிவ் பச்சை நெயில் பாலிஷ் .. நேரம் எடுத்து போடிருக்கா போல... அழகா இருந்துச்சு... இதை எல்லாம் பாக்க கிடச்ச சில் வினாடிகளில் பாத்து ரசித்து சிலாகிச்சுட்டேன்...

"தேங்க்ஸ் சிவா" தெத்துப் பல் தெரிய ஒரு சிரிப்பொடச் சொன்னாப் பாருங்க... ரஞ்சனி சிறு வயசுல்ல பல் கிளிப் இல்ல போட்டிருப்பா.... இப்போ ஒரு சிரிப்புல்லயே கொடைக்கானல் சில்வர் பால்ஸ் காட்டுறாளேன்னு நினைச்சிகிட்டேன்...


அவப் போய் வெகு நேரம் வரை நான் வேற எதோ ஒரு உலகத்துல்ல திரிஞ்சிகிட்டு இருந்தேன்...

எனக்கு பக்கத்துல்லயே இத்தனை வருசம் இருந்த ரஞ்சனி அன்னிக்குத் தான் எனக்கு புதுசா அறிமுகம் ஆனதுபோல இருந்துச்சு.. இந்த அனுபவம் எனக்கு ரொம்பவே புதுசு... கொஞ்சம் கிறுக்குத்தனமா இருந்துச்சு.. ஆனா ரொம்ப நல்லா இருந்துச்சு....


இந்த கிறுக்குத் தனத்துக்குப் பேர் தான் காதலோ... காதல்ங்கற வார்த்தை என் சிந்தனையில்ல விழ்ந்த உடனே நடுமண்டையிலே சுத்தியல்ல அடி வாங்குன மாதிரி இருந்துச்சு..

ரஞ்சனியை நான் எப்படி காதலிக்க முடியும்... என் அண்ணன் சரவணன் இல்ல ரஞ்சனியைக் காதலிக்கிறான்...

இது துரோகம் இல்லையா..எதோ ஒரு கோவத்தில் என் கையை அழுத்தினேன்... ரஞ்சனி புடவையில்ல சிக்கியிருந்த முள் இன்னும் என் கையில் தான் இருந்துச்சு... அது என் விரல்ல குத்தி ரத்தம் வந்துச்சு...

அன்னிக்கே அந்த லெட்டரைக் கொடுத்துருக்கலாம்... இல்ல சரவணன் கிட்டவாது... டேய் அண்ணா இந்த லெட்டர் எல்லாம் கொடுக்குற பொழப்பு நமக்கு சரி வராது ஆளை விடுன்னு சொல்லி ஆட்டத்தை முடிச்சிருக்கலாம்...

என்னமோ புடிக்கப் போய் என்னமோ ஆனக் கதையால்ல இது போவுது....

அன்னிக்கு முழுக்க வகுப்புல்ல எனக்கு எந்த கவனமும் இல்ல... அண்ணனுக்கு நல்ல தம்பியா இருக்கணும்டா... புடவை...ஜிமிக்கி... கொலுசுன்னு... குப்புற கவிழக் கூடாது... கூடவே கூடாது...இது ஒரு சின்ன சத்யச் சோதனைதாண்டா சிவா... இதுல்ல சிலிப் ஆகிடாதே....

அண்ணன் கிட்ட போய் எல்லா உண்மையையு சொல்லிரணும்... அவன் நாலு அடிச்சாக் கூட வாங்கிக்கணும்...உன் காதலை நீயே பாத்துக்கோடா... நமக்கு இந்த காதல் எல்லாம் சரிபடாது சாரின்னு சரண்டர் ஆகி ஜாமீன் வாங்கணும்... என் அண்ணன் என்னை மன்னிச்சுருவான்....

அப்புறம் இனி இந்த ரஞ்சனி பக்கம் திரும்பவே கூடாது.... திரும்பவே கூடாது.... எனக்கு நானே சொல்லி தலையை வேகமாய் ஆட்டினேன்... அது தெர்மோ டயனமிஸ் கிளாஸ்.. நான் தலை ஆடுனது எந்த தெர்மோடயனமிக்ஸ் சிலபஸ்க்குள்ளும் வராத காரணத்தால் குழம்பிய பேராசிரியர் என்னை எழுப்பி விட்டார்.

"என்ன மேன் இங்கெ சீரியசா லெக்சர் போகும் போது.. நோ.நோன்னு மண்டையை ஆட்டுறே..DO U HAVE ANY COUNTER ARGUEMENTS FOR THE CONCEPT I JUST EXPLAINED" அவர் என்ன சொல்லுறார்ன்னே தெரியாமா பல்ப் ஸ்டாண்ட்டில் மிஸ் பிட் ஆன பல்ப் போல நின்றேன்...

"I am Feeling feverish sir" அப்படின்னு பாவமாய் உளறினேன்.

அந்த சமயம் பார்த்து சரியாய் லஞ்ச் மணி அடித்தது. நான் தப்பித்தேன்..

மதியமே வீட்டுக்கு கிளம்ப முடிவெடுத்து நடக்க ஆரம்பிச்சேன்....

"சிவா...." மறுபடியும் ரஞ்சனியின் குரல் கேட்டு அப்படியே நின்னேன்..

திரும்பக் கூடாது திரும்பக் கூடாது அப்படின்னு புத்தி சொன்னாலும் கால் தானாத் திரும்பி அவப் பக்கம் நடக்க ஆரம்பிச்சது..

"எங்கேக் கிளம்பிட்டே?"

"லஞ்ச்" திக்கி திக்கிச் சொன்னேன்...

"நானும் வரலாமா...." ரஞ்சனியின் இந்தக் கேள்வியில் என் மொத்தமும் கலங்கிப் போனது...

தொடரும்