Tuesday, June 09, 2009

தென்கிழக்கு வாசமல்லி - 4

தென்கிழக்கு வாசமல்லி - 3

வைத்தியநாதன் எனக்கு நினைவு தெரிய ஆரம்பிச்சக் காலத்துல்ல இருந்து எனக்கு நண்பன்..என் மனச்சாட்சிகிட்ட சொல்லாம மறைக்க நினைச்ச எத்தனையோ விசயங்களைக் கூட நான் வைத்திகிட்ட மறைச்சது இல்ல...அவன் தங்கச்சி மூக்களகியைக் கூட எனக்காக கை ஓங்கி வைத்தி அடிச்ச சம்பவம் நிறைய இருக்கு...

வைத்திக் கூட சேர்ந்து செஞ்ச ஒவ்வொரு விஷ்யமும் என்னையும் மீறி என் கண்ணுக்குள்ளே வரிசை கட்டி நிக்க ஆரம்பித்தன...முப்பது கிலோ மீட்டர் தாண்டி போய் டென்ட் கொட்டாயிலே முதல் முதலா பலான படம் பார்த்தது...அவங்க மாமா சிகரெட்டை மாத்தி மாத்தி அடிச்சு முதல் தம் அனுபவம் பெற்றது...சரக்கு அடிக்க ஒரு வாரமாக் காசு சேர்த்து பத்தாமப் போய் மூக்களகி கொலுசை சுருட்டி வித்து என் முதல் தண்ணி பந்தல் அமைச்ச வள்ளல் என் வைத்தி....ச்சே ஒரு பொண்ணுக்காக போய் அவன் மேல கையை வச்சுட்டோமேன்னு ஒரு பக்கம் மனசு லேசா வலிக்க ஆரம்பிச்சது...

இங்கேயே இருந்தா ஒரு நிலையிலே மனசு நிக்காது...அப்படியே டவுண் பஸ் ஏறி தென்காசி வரைக்கும் போயிட்டு வருவோம்...மனசு அமைதியாகிரும் அப்படின்னு ஒரு கணக்கு போட்டுட்டு பஸ் ஸ்டாண்ட் பார்த்து நடக்க ஆரம்பிச்சேன்...டீ கடையிலே போய் ஒரு தம் போட்டுட்டு ஒரு டீயும் அடிச்சுட்டு போலாம்ன்னு டீ கடை பக்கம் ஒதுங்குனேன்...

டீயைச் சூடா தொண்டைக்குள்ளே இறக்கிட்டு ரோட்டை வேடிக்கைப் பாத்துகிட்டே நின்னேன்... சல்லுன்னு என்னைத் தாண்டி ஒரு டிவிஎஸ் 50 தாண்டிச்சு....புழுதி கிளப்பிட்டுப் போன வண்டி சந்தேகமில்லாமல் வைத்தி வீட்டு வண்டி தான்...வண்டியிலே போனது வைத்தி...பின்னாடி உக்காந்துப் போனது அவளே தான்....மிச்சமிருந்த டீயை சடக்குன்னு வந்த கோபத்திலே தூர எறிஞ்சுட்டு வண்டி போன பக்கம் எரிச்சலாப் பாத்துட்டு நின்னேன்...

"தம்பி டீ காசு ஒண்ணே காலைக் கொடுப்பா.." டீக்கடைகார் அண்ணன் குரல் கேட்டு பாக்கெட்டில் கை விட்டு காசைத் துழாவி எடுத்து கொடுத்தேன்...

தென்காசி பிளானைக் கேன்சல் பண்ண்ட்டு ஆத்திரமா வீட்டைப் பார்த்து திரும்பி நடந்தேன்...ம்ம்ம் கிரவுண்ட்க்குத் தான் போயிருப்பான்..அங்கே தான் வண்டி ஓட்டச் சொல்லித் தர முடியும்..அங்கேயே போய் பாத்துருவோம் அப்படின்னு கிளம்பினேன்..

நாலு ஆள் ஆச்சு சரியா தூங்கி....ப்ச்...என்னா அடி தெரியும்ல்ல....விளையாட்டுன்னா அதுல்ல இவ்வளவு கோவம் ஆகாது...பாவம் பையன்...." அம்மாவின் குரலைக் கேட்டு கட்டிலில் இருந்து உடம்பை கஷ்ட்டப் பட்டு நகத்தி ஜன்னல் பக்கம் தலையை நீட்டுனேன்.

பக்கத்து வீடு கிட்டத்தட்ட முடியற நிலைக்கு வந்துருச்சி...இன்னும் ஒரு பத்து பதினைஞ்சு நாள்ல்ல பால்காய்ப்பு இருக்கும்ன்னு நினைச்சுகிட்டேன்...அம்மா என் கதையைத் தான் பிரசங்கம் பண்ணிகிட்டு இருக்காங்கன்னு நல்லா புரிஞ்சது...அவளும் அங்கே இருக்காளான்னு ஜன்னல்ல எவ்வளவு முடியுமோன்னு அவ்வளவு தலையை நெளிச்சுப் பார்த்தேன்...நீலத் துப்பட்டா காற்றில் ஆடியது தெரிந்தது அவளும் அங்கேத் தான் இருந்தா...

"மேட்ச்ல்ல தோத்துட்டாங்கன்னு தனியா வந்த இவனை பனை மட்டையிலே போட்டு விளாசு விளாசுன்னு விளாசி இருக்கான்வ...முதுகுல்ல பட்டை பட்டையா தொலி உரிஞ்சு...இப்போத் தான் கொஞ்சம் பரவாயில்ல...ஆனா ரொம்ப சிரமப்பட்டுட்டான்...."

அச்சோ அய்யோ என அக்கறையாய் விசாரிப்புகள் தொடர்ந்தன..அதுல்ல ஒரு அச்சோவாச்சும் அய்யோவாச்சும் அவ சொல்லியிருப்பாளான்னு காதைத் தீட்டிக் கேட்டும் என்னாலக் கண்டுபிடிக்க முடியல்ல..

முதுல்ல வலி பின்னி எடுக்க குப்புற படுத்துட்டு கண்ணை மூடிகிட்டேன்....எப்போ தூங்குனேன்...எப்படி தூங்குனேன்னு தெரியாமலே தூங்கிப் போயிட்டேன்...லேசான மல்லிகை வாசம் சித்தம் துளைக்க முழிப்பு தட்டுனப்போ ஜன்னல் வெளியே வானம் வெளிர் மஞ்சள் நிறத்துக்கு மாறி போயிருந்தது

ம்ம் மணி ஆறாகியிருக்கும்...மல்லி வாசம் எங்கே இருந்து வருதுன்னு ஜன்னல் வழியா எட்டிப்பார்த்தேன்...அந்த மல்லி கொடியிலே அங்கே ஒண்ணும் இங்கெ ஒண்ணுமா மொட்டு எல்லாம் மெல்ல விரிஞ்சு கிடந்துச்சு..வலியையும் மீறி ஒரு புத்துணர்வு வந்துச்சு அப்படி ஒரு அழகானக் காட்சி அது...ஒரு துண்டை எடுத்து மேலுக்குப் போத்திட்டு கீழே போய் நின்னேன்...அப்பா மல்லி வாசம் என்ன ஒரு அற்புத வாசம்...மூச்சை நல்லா இழுத்து மல்லி வாசத்தை எனக்குள்ளே இழுத்துகிட்டேன்...

"ம்ம்ம்ஹும்..."

"ம்ம்ம்கூம்"

"ம்ம்ம்ம்ம்ம்கூஊஉம்"

"காதுல்ல கூட செம் அடி போலிருக்கு....சுத்தமாப் போயிடுச்சு போல..." சுளுக்குன்னு ஒரு சிரிப்பு சத்தம் வேற உசுப்பு ஏத்த பொட்டியை உரசுன வத்திகுச்சி மாதிரி சர்ன்னு திரும்புனேன்..பூவைப் பாத்து புயல் வணக்கம் வச்சு பாத்து இருக்கீங்களா...அப்படி ஒரு காட்சி அங்கே நடக்க இருந்துச்சு..ஆனா ஒரு சின்ன இடைவெளியில் நடக்காமல் தடுக்கப்பட்டது....

ரேடியோவில்ல சிம்புவோட அப்பா பொன்னான மனசே பூவான மனசே நீ வைக்காத பொண்ணு மேல ஆசன்னு பாடிகிட்டு இருந்தார்....பொல்லாத மனசு எங்கே அறிவுரையைக் கேக்குது.... ஒத்த சடைப் போட்டு தோளுக்கு முன்னாடிப் போட்டிருந்தா அதுல்ல நீளாமா மல்லிகை பூ....பாவாடைத் தாவணியிலே தாமிரபரணியின் சலசல குளிர்ச்சியோடு மலர்ச்சியா நின்னுட்டிருந்தா... பத்த வச்ச பூவாணாம்...பூக்காம புஸ்ஸாகிப் போனப்புல்ல என் கோபம் நான் எவ்வளவோ தடுத்தும் என்னைக் கேக்காம வெளிநடப்பு செய்துகிட்டு இருந்துச்சு....

மொத்தக் கோபத்தையும் ஒத்தச் சிரிப்புல்ல ஊதி தள்ளிட்டா....இருந்தாலும் கெத்து குறையாமல் போலி முறைப்பு காட்டிட்டு அவளைப் பாத்தேன்...

"ம்ம் யாராவது அப்பாவி சிக்கிட்டா....சப்புன்னு அடிச்சு தான் வீரன்ன்னு நினைப்புல்ல திரியறது...அப்புறம் உண்மையா அடிதடிக்கு அஞ்சாதவங்க வந்தா...அடி உதைன்னு வாங்கிட்டு ஆஸ்பிட்டல் போய படுக்குறது.. இதெல்லாம் என்ன சங்கதியோ...."

"அப்பாவியா...யாரு அப்பவி?" அணையப் போன கோப தீயில் அவப் பேச்சு எண்ணெய் விட்டது போலிருந்துச்சு...

"வைத்தி தான்....பாவம் வைத்தி...தெரியுமா?"

"நிப்பாட்டிட்டு கிளம்பிரு....போதும்" வலி அதிகமா இருந்தும் இரண்டு கைகளையும் தூக்கி அவளைக் கும்பிட்டு தான் கேட்டேன்....

"ஒண்ணு அடி தடி இல்லைன்னா கும்பிடா..." மறுபடியும் அதே சிரிப்பு...

"போதும் போயிரு...." என் குரல்ல இருந்த கடுமை எனக்கே ஆச்சரியமா இருந்தது..

"போகல்லன்னா.. என்ன பொம்பள பிள்ளை தானே....வைத்தி மாதிரி அப்பாவியா வாங்கிட்டு போயிருவேன்னு நினைப்பா.... கராத்தே பழகி இருக்கேன்..பிளாக் பெல்ட் வாங்கியிருக்கேன்.....தெரிஞ்சுக்கோ.." அப்பவும் அவ சிரிச்சுகிட்டே தான் சொன்னா..

"சரிடீ... கேக்குது... உனக்கு உன் தாவணியைப் பிடிச்சிட்டு பின்னாலே வரதுக்கு அந்த வைத்தி தான் லாயக்கு... அவன் அப்பாவி தான்.... இப்போ என்னை வெறுப்பு ஏத்தறதை விட்டுட்டு அவனைத் தேடிப் போறீய்யா..." எப்படியோ என் கோபத்தை கொட்டி தீர்த்த திருப்தி எனக்குள்ளே வந்துச்சு....

"என்னச் சொன்ன..... வைத்தியைத் தேடிப் போகணுமா... தப்பா பேச வேணாம்... சொல்லிட்டேன்..." முதல் முறையா அவ முகத்துல்ல சிரிப்பு தொலைஞ்சுப் போயிருந்துச்சு....எனக்கு லேசா சிரிப்பு வந்துச்சு..

"ஆமா..அவன் கிட்டத் தான் போகச் சொன்னேன்.... ரெண்டு பேரும் சேந்து தானே வண்டியிலே ஒட்டிகிட்டும் உரசிகிட்டும் வீதி உலா வந்தீங்க.... என்னா சிரிப்பு.... என்னா நெருக்கம்...."

"என்னப் பேசுறன்னு புரிஞ்சு பேசுறீய்யான்னு யோசிச்சுக்கோ..." அவ முகத்தில் சிரிப்பு சுத்தமாப் போய் ஒரு இறுக்கம் நிறைஞ்சு இருந்தது..

"ஆமா எல்லாம் தெரியுது... உங்க தில்லியிலே எப்படின்னு தெரியாது... இங்கே ஒருத்தன் கூட ஒருத்தி சுத்துன்னா அது தான் அர்த்தம்...அதுவும் வைத்தியைப் பத்தி உன்னை விடஎனக்குத் தெரியும்...உன்னை என்ன எல்லாம் பண்ணியிருப்பான்னும் .. தெரிஞ்சுக்க முடியும்..அந்தக் கேவலப் பொழப்பு எனக்கு வேணாம்...போயிரு..."

ஆத்திரத்தில் பொங்குவாள்ன்னு பாத்தா..பொல பொலன்னு அழ ஆரம்பிச்சுட்டா.....சொன்ன சொல்லைப் பத்தி நினைக்கல்லன்னாலும் அவ அழுதது என்னமோ மாதிரி ஆயிடுச்சு...அப்பவும் கூட எனக்கு அவ மேல கோபம்ன்னு சொல்ல முடியாது..வைத்தி மேலத் தான் கோபம்... வைத்தியை அவ மெச்சுனது தான் கோபம்... அந்தக் கோபத்துக்கான காரண காரியங்களை ஆராயுற மனசுல்ல நான் அப்போ இல்லை...
அவ அழறதைப் பாக்க பிடிக்காம நான் திரும்பிகிட்டேன்....

எவ்வளவு நேரம் அப்படியே நின்னேன்னு எனக்கேத் தெரியாது.... நான் திரும்பி பாக்கும் போது அவ அங்கே இல்லை....அந்நேரத்துக்கு நான் சந்தோசம் தான் பட்டிருக்கணும்.... ஆனா மனசு ஒரு ஓரமா வலிச்சது...அந்த வலி அப்படியே மனசு முழுக்க பரவ ஆரம்பிச்சது....

ராத்திரி முழுக்கத் தூங்க முடியல்ல... கட்டில்ல புரண்டு உருண்டு படுத்துப் பாத்தேன்..உறக்கம் பிடிக்கல்ல... அவ அழுகையும் சிரிப்பும் மாறி மாறி என் கண்ணு முன்னாடி வந்துப் போச்சு...

அட வெக்கம் கெட்ட விளக்கெண்ணெய்.... அந்தப் புள்ள மேல பிரியமாத் தானே இருக்க அப்புறம் எதுக்குடா அந்தப் புள்ளயைக் கண்ணீர் விட வச்ச.... உள் மனசு சாட்டை சுத்திச்சு... அந்த சாட்டை முனையைப் பிடிச்சு இழுத்த சைத்தான் மனசு... மாப்பி பொம்பளை புள்ள அழுகை எல்லாம் நம்பிராதே... நீ ஆம்பளை.... என்னச் செஞ்சுபுட்ட..... வில்லங்க வைத்தி என்னச் செஞ்சியிருப்பானோ அந்த உண்மையைத் தானே சொன்ன அப்படின்னு சப்பைக் கட்டு கட்டுச்சு...

இரண்டு மனமும் ஒவ்வொரு பக்கம் பிரிஞ்சு கிடக்க... நான் மல்லாந்து விட்டம் பாத்து கண் மூடாம இரவைக் கழிச்சேன்....

காலையிலே செம மழை....கண் முழிச்சி ஜன்னல் வழியாப் பாத்தேன்... மழையடிச்ச வேகத்துல்ல நேத்து பூத்த பிஞ்சு மல்லி செடி முறிஞ்சுப் போய் கிடந்துச்சு...

இன்னும் வாசம் வீசும்

Wednesday, June 03, 2009

தென்கிழக்கு வாசமல்லி - 3

தென்கிழக்கு வாசமல்லி - 2

"என்ன மாப்பி...கொஞ்ச நாளா ஒரு தினுசாத் திரியுற...என்ன சேதி..."

"எலேய் வைத்தி...இந்த காதல் காதல்ன்னு சொல்லுறான்வளே அப்படின்னா என்னலே..."

"ம்ம் அப்படிக் கேளு மாப்பி சொல்லுறேன்...தண்ணி அடிக்கும் போது....காரமாக் கொஞ்சம் போல ஊறுகாயை தொட்டு உள் நாக்குல்ல வைக்கும் போது ஜிவ்வுன்னு ஒரு கரண்ட் கிளம்பும் அதை ரசிச்சிருக்கீயோ...."

சரக்கை நினைச்சுகிட்டே உள்நாக்கை மடிச்சு ஊறுகாய் ஞாபகத்தோட வைத்திக்கு ஆமா போட்டேன்.

"வாழ்க்கையே ஒரு போதை மாப்பி...அந்த போதைக்கு ஒரு மகா பக்கப் போதை தான் இந்த காதல்....போதை தீருற வரைக்கும் நீ தான் ராஜா....உலகமே உனக்கு கூஜா......ஆனா மாப்பி எந்த போதையும் ஒரு நாள் இறங்கியேத் தீரும் அது உலக நியதி... காதலும் அப்படித் தான்...சரக்கடிச்ச மறு நாள் காலையிலே எந்தரிக்கும் போது தான் லைட்டாத் தலை வலிக்கும்... ஆனா காதலிச்சா.....விடாமா தலை வலிக்கும்...." ஒரு குட்டிப் பிரசங்கமே நிகழ்த்தி முடிச்சுட்டான் வைத்தி...

"வைத்தி...நீ சொல்லுறது குத்து மதிப்பாத் தான் புரியுது...ஆனா காதல்ங்கற மேட்டர் கொஞ்சம் கிக்காத் தான் இருக்கும் போல இருக்கு....கொஞ்ச நாளா இந்த எளையராஜா போடுற பாட்டெல்லாம் என்னை மனசுல்ல வைச்சே போடுற மாதிரி இருக்கு...அப்புறம்....பள்ளியூடத்துல்ல புரியாத பாரதியார் கவிதை எல்லாம்....இப்போ விளக்கமா விளங்குற மாதிரி இருக்கு...முக்கியமா இப்போ எல்லாம் இந்த பேர் அன்ட் லவ்லி வெளம்பரம் எனக்கு ரொம்பப் புடிக்குதுடா.."

"உன் மாமன்வளுக்கு எல்லாம் எனக்குத் தெரிஞ்ச வரைக்கும் காதலிக்கற வயசுல்ல பொண் பிள்ளையே கிடையாது..அப்புறம் எப்படி... காலேஜ்ல்ல கூட எல்லாப் பிள்ளையளும் நீ வரது தெரிஞ்சுடுத்துன்னாத் தெறிச்சுன்னா ஓடரதுகள் .... எப்படிப் பாத்தாலும் உனக்கு இதெல்லாம் நடக்க வாய்ப்பே இல்லையே...." வைத்தி கன்னத்தில் கை வைச்சு குத்த வைத்தான்

"லேய் வைத்தி...என் மாமன்வளுக்கு பிள்ளையல்வ இருந்தாலும் நாங்க லவ் எல்லாம் பண்ணிர மாட்டோம்.. நமக்குன்னு ஒரு லெவல் இருக்குல்லா...காலேஜ்ல்ல மீனாவும் ரம்பாவும் படிக்கிறாள்வ...நாங்க லவ் பண்ணுறதுக்கு பைக் எடுத்துட்டு கிளம்ப...போடா"

"மாப்பி... அதுகளும் அஜித் விக்ரம்ன்னு ஆசப் பட்டதாத் தான் சொல்லிட்டுத் திரியரதுகள்....நக்கல்.. மகா நக்கல் பிடிச்சதுகள்..."

"எவளுக்குமே அசராத என்னைய அவ ரொம்பவே அசைச்சு பாத்துட்டா வைத்தி...சும்மா ஒரு மின்னல் பொண்ணா வந்தப்பால்ல இருக்கு அவ நடவடிக்கை எல்லாம்...அப்படி ஒரு துறுதுறுப்பு குறுகுறுப்பு,,,அழகுல்ல லேசா வீரா படத்துல்ல வர்ற மீனா மாதிரி இருக்கா...மாடர்ன் ட்ரெஸ் போட்டா நதியா மாதிரி இருக்கா....லவ்ன்னு ஒரு வில்லங்கத்தைப் பண்ணா அவளைத் தான்டா பண்ண்ணும்ன்னு ஒரு தீர்க்கமான முடிவுக்கே வந்துட்டேன்டா"

"மாப்பி...ஆரம்பத்துல்ல அப்படித் தான் இருக்கும்..ஆறாங்கிளாஸ் படிக்கறச்சே குஷ்பூ படத்துக்கே தாலிக் கட்டி பொண்டாட்டி ஆக்குனவன் தானே நீ....அப்புறம் மீனா வந்தாப்போ அதே தாலியை மீனா படத்துக்கும் கட்டி பீல் பண்ணல்லயா.... விடு இதுவும் அப்படித் தான்....இன்னிக்கு இவ..நாளைக்கு இன்னொருத்தி...."

"ப்ச் வைத்தி....என் மவனே....என் மனசுல்ல இருக்கதை எப்படி சொல்லுவேன் உனக்கு.....நீயும் நானும் சாரா டக்கர்ல்ல எத்தனையோ பேரைப் பாத்துருக்கோம்... எப்படி எல்லாம் ரசிச்சிருக்கோம்...அதெல்லாம் சும்மா மேலுக்குத் தொட்டுப் போற காத்து மாதிரி இவ அப்படியே உள்ளுக்கு போயிட்டாடா... மூச்சு காத்து மாதிரி முழுசும் நின்னுட்டு இருக்காடே..."

"சரி வா பொழுது சாயறதுக்குள்ளே கிழக்கே பனங்காட்டுக்குள்ளே நல்ல கள்ளு கிடைக்கரதாம் அடிச்சுட்டு விவரமாப் பேசுவோம்..." வைத்தி அழைப்பை ஏற்க முடியாத படி அப்போ ஒரு சம்பவம் ஆகிப் போச்சு.

வைத்தியோட தங்கச்சி மூக்களகி மாலதியும் அவக்கூட சைக்கிள்ல்ல நம்ம தேவதையும் எங்களைப் பாத்து தான் வந்துட்டுருந்தாங்க..அவசர அவசரமாத் தலையைக் கோதிவிட்டுகிட்டேன்.... சட்டையை ஒரு முறை நேரா இழுத்து விட்டுகிட்டேன்...மாலதி நேரா வைத்தி பக்கம் போய் சைக்கிளை நிறுத்தினா...என்னை முறைப்பா ஒரு பார்வை பார்த்தா..மனசுல்ல வைஜெயந்தி ஐ.பி.எஸ்ன்னு நினைப்பு... என்.சி.சியிலே இருந்தா எதோ இந்திய ராணுவத்திலேயே இருக்கர மாதிரி ஒரு மிதப்பு...ஏழாம் நம்பரை திருப்பிக் கொஞ்சம் தட்டி போட்ட மாதிரி ஒரு மூக்கு...அதான் அவளுக்குப் பேர் மூக்களகி..அவளுக்கு நான் அந்தப் பேரை வச்சதால எனக்கும் அவளுக்கும் பல வருச பகை....சமயம் கிடைக்கும் போதெல்லாம் என்னைக் கவுக்க அவ தவறுனதே இல்லை... இப்போக் கூட அவப் பாத்தப் பார்வையிலே எதோ ஒரு வில்லங்கம் இருக்கற மாதிரியே எனக்குத் தெரிஞ்சது..என் தேவதை மேல நான் தீவிர நோக்கமா இருந்ததாலே மூக்களகியப் பெருசாக் கண்டுக்கல்ல..


"வைத்தி பாட்டு கிளாஸ்க்குப் போற வழியிலே சைக்கிள் பஞ்சர் ஆயிடுத்து..உன் சைக்கிள் கொடு...எங்களுக்கு கிளாஸ்க்கு நேரம் ஆரது,,"

"ம்ம்க்கும் மூக்களகிக்கு வெடிகுண்டு தொண்டை...பேசுன்னாலே தீபாவளி ஆட்டோம் அரை சவுண்டுல்ல வெடிச்ச மாதிரி இருக்கும்,,,இதுல்ல பாட்டு வேறயா...சோகம்டா...எனக்குச் சிரிப்பு கொள்ளல்ல.. நான் நினைச்சதே அவளுக்குக் கேட்டிருச்சுப் போல...

"வெட்டிப் பசங்களோட சுத்தாதே....பீடி சிகரெட் எல்லாம் குடிக்கிற கிராதகப் பசங்களோடச் சேந்தா நன்னாப் படிக்கிற நீயும் நாயாட்டம் போயிடுவன்னு அப்பா சொல்லற மாதிரி ஆயிடப் போற..." என்னைப் பார்த்து மேம்போக்காச் சொல்லுற மாதிரி சொன்னா மூக்களகி

அந்த மூக்குல்ல மொளகாத் தூல் முக்கா கிலோ வாங்கி கொட்டணும் போல எனக்குக் கோபம் பொத்துகிட்டு வந்துச்சு..இருந்தாலும் என் தேவதை பக்கத்துல்ல இருக்குறாளேன்னு அடக்கிட்டு நின்னேன்....

"வைத்தி..இது என் சினேகிதி....பேர்....உனக்குத் தான் தெரியுமே....அவளுக்கு சைக்கிள் ஓட்டத் தெரியாது... அப்படியே உன் சைக்கிள்ல்ல ஓட்டச் சொல்லிக் கொடுக்கலாம் இல்லையா..."

"ஓ தாராளமா.... நம்ம ஊருக்கு விருந்தாளியா வந்து இருக்கா.. நாமத் தானே எல்லாம் செய்யணும்...சைக்கிள் மட்டுமில்ல டிவிஎஸ்...இந்த பஜாஜ் சன்னி...இதெல்லாம் கூட ஓட்டச் சொல்லித் தரலாமே ப்ரீயா இருக்கச்சே ஆத்துக்கு அழைச்சுண்டு வா மாலு.."

"ஆமா ஆமா வைத்தி அண்ணன் பெரிய ரேஸ் பைக் டிரைவர்....ஆறு கண்டம் போய் அறுநூறு ரேஸ் ஜெயிச்சுட்டு வந்துருக்கார்...உங்களுக்கு எல்லா வண்டியும் ஓட்டச் சொல்லித் தருவார்... சைக்கிளை வாங்குன நாள்ல்ல இருந்து இன்னி வரைக்கும் முழுசா குரங்கு பெடல் ஒழுங்காப் போட்டது இல்ல...மொக்கச்சாமி இன்னிக்கு என்ன வெளம்பரமாப் பேசுறான் பாருய்யா" வழக்கம் போல எனக்குள்ள என் மன வாய்ஸ் கேட்டது...தேவதை...தேவதை...எக்குத் தப்பா எதுவும் பேசக் கூடாதுன்னு அமைதியாவே நின்னேன்...

அவ என்னடான்னா என்னைத் திரும்பிக் கூடப் பாக்கல்ல வைத்தி என்னவோ பெரிய விஞ்ஞானி மாதிரியும் அவன் விடுற ரீல் எல்லாத்தையும் எதோ புதிய பூகோளத் தத்துவம் மாதிரியும் அப்படி கவனிச்சுக் கேட்டுட்டு இருந்தா....எனக்கு அதுக்கு மேலயும் பொறுக்கல்ல...

"ஏரிக் கரை பூங்காற்றோ ....." பாட்டை மெதுவா விசிலடிக்க ஆரம்பிச்சேன்.... அப்பவும் அவக் கவனிக்கல்ல..சரின்னு கொஞ்சம் வால்யூம் ஏத்தி அடிக்க ஆரம்பிச்சேன்....

"சீ பொறுக்கி...." அப்போ பாத்து அந்தப் பக்கம் வந்த அடுத்த வருச உலக அழகி போட்டிக்கு அப்போக் கிளம்புன எங்க உள்ளூர் குமரிக இரண்டு நான் அதுகளைப் பாத்து தான் விசிலடிச்சேன்ங்கற நினைப்புல்ல என்னத் திட்டிட்டுப் போனாளுக... அந்தத் திட்டு மூக்களகி காதுல்ல விழுந்திருந்தாக் கூடப் பரவாயில்ல... அவ..அதான் தேவதைக் காதுல்ல விழுந்து தொலைச்சிருச்சு...

மூக்களகிக்கு மூக்கு முட்டச் சிரிப்பு... அப்படி சிரிச்சா...பாக்க பயங்கரமா இருந்துச்சு... இவளும் சிரிச்சிருந்தாப் பரவாயில்ல... ஆனா ஒரு மாதிரியாப் பாத்தாளே பாக்கணும்... விசிலை முழுங்கன மாதிரி என் முகம் ஆயிடுச்சு...

"சரி நாங்க கிளம்புறோம்...லேட்டாரது...நீ கிளம்பி ஆத்துக்குப் போய் உன்னையும் யாராது பொறுக்கிக் கூட்டத்தோடச் சேத்துடப் போறா..." மூக்களகி வெற்றி களிப்பில் சைக்கிள் ஏறினாள் கூடவே என் தேவதையும் போனாள்...

"வைத்தி மவனே..உன் தொங்கச்சிக்கு ஒரு நாள் இருக்கு.. மூக்குல்ல மூணு ஆணி அடிக்கப் போறேன் பாரு...."

"விடுரா..சின்ன வயசுல்ல இருந்தே உனக்கும் அவளுக்கு ஆகரதுல்ல...இது என்ன புதுசா?" வைத்தி சைக்கிள் போற திசையில்ல இருந்து இன்னும் கண்ணை எடுக்காமலே என்கிட்டச் சொன்னான்.

"அதுக்குன்னு இன்னொரு பொண்ணு முன்னாடி....இப்படி பண்ணுறது நல்லா இல்ல...."

"ச்சே விடு மாப்பி...அவளும் நம்மாத்து பொண்ணு தான்....அப்படி எல்லாம் உன்னைத் தப்பா நினைக்க நான் விட்டுருவேனா..."

"உங்காத்துப் பொண்ணுன்னா..உனக்குச் சொந்தமா..."

"சொந்தம் மாதிரின்னு வச்சுக்கலாம்...அவ பேர் ரஞ்சனி...ஊர் தில்லி...அப்பாவுக்கு மத்திய அரசாங்கத்துல்ல உத்தியோகம்..ப்ளஸ் டூ முடிச்சிருக்கா... ஐ.ஐ.டிக்கு என்டரண்ஸ் எழுதியிருக்கா...நன்னாப் பாடுவா...பரதம் தெரியும்..சமையல்ல ஒரளவு தெரியுமாம்...எரோனாடிக்கல் படிக்கணும்ன்னு லட்சியமாம்...இப்போ நம்ம ஊருக்கு லீவுக்கு வந்துருக்கா....வீடு கூட கட்டின்டு இருக்கா உங்காத்துப் பக்கத்துல்ல..அது அவ அப்பா ரிட்டையர் ஆனப் பிறகு செட்டில் ஆரதுக்காம்.."

"வைத்தி மவனே இவ்வளவு விசயம் தெரிஞ்சு வச்சுருக்கே..எப்படிடா?"

"நம்ம மனசுக்குப் பிடிச்சவாளைப் பத்தி தெரிஞ்சுக்கறதுல்ல என்னடா கஷ்ட்டம்"

வைத்தி சொன்னது சரக்குன்னு நடு நெஞ்சுல்ல அரிவாள் எடுத்து கோடு போட்ட மாதிரி எரிஞ்சது...

"டேய் வைத்தி மவனே....நான் காதல் பத்தி உன் கிட்டப் பேசுனது எல்லாம்..."

"ஆமாடா மாப்பி... காதல் ஒரு போதை தான்....இப்படி ஒரு பொண்ணு கூட இருந்தா வாழ்க்கை முழுக்க அந்த போதையிலே இருந்துடலாம்டா.... சரி தானே..." நான் சொல்ல வந்த விசயத்தை வைத்தி சொன்னான். அதை வேற ரொம்ப ரசிச்சு கண்ணை எல்லாம் மூடி நெஞ்சுல்ல கை வைச்சு சிலாகிச்சுச் சொன்னான்...

"வைத்தி அந்தப் பொண்ணை நான் லவ் பண்ணுரென்...."

நான் சொன்னதை வைத்தி காதில்ல வாங்குன மாதிரியே தெரியல்ல... ரெண்டு கையையும் நெஞ்சுல்ல வஎய்ச்சுகிட்டு ரொம்ப ரொமான்டிக்கா முகத்துல்ல சிரிப்பை எல்லாம் வர வச்சுகிட்டு காதலுக்கு மரியாதை விஜய் மாதிரி போஸ் கொடுத்துகிட்டு இருந்தான். நான் செமக் கடுப்பாயிட்டேன்.

"டேய் வைத்தி மவனே... நான் சொன்னது கேட்டுச்சா..அந்தா அந்த சைக்கிள்ல்ல உன் தொங்கச்சி மூக்களகி கூடப் போறாளே அந்தப் பொண்ணை நான் லவ் பண்ணுறேன்... நீ வேற நல்ல பொண்ணைப் பாத்து லவ் பண்ணிக்கோ நானே வேணும்ன்னா உன் லவ்க்கு உதவி பண்ணுறேன்.. இப்போ போஸ் கொடுக்கறதை நிறுத்திட்டு இறங்கி வா..."

நான் கொஞ்சமும் எதிர்பாக்காத மாதிரி வைத்தி பக பகன்னு சிரிக்க ஆரம்பிச்சான்...

"மாப்பி நீ என்ன லூசாடா... நான் தான் அவளை லவ் பண்ணுறேன்னு சொல்லிட்டேன்ல்ல.. அப்புறம் வந்து.... இப்படி பேசுற..போ..போய ஆத்துல்ல போய் நான் கொடுத்த தம் நன்னா இழுத்து விட்டு யோசி...உனக்கே புரியும் அவளுக்கு நான் தான் சரின்னு..."

"டேய்...மவனே வைத்தி...வெளையாடதே...நான் சீரியசாச் சொல்லுறேன்....அவளை நான் தான் லவ் பண்ணுறேன்... வம்பு பண்ணாதே சொல்லிட்டேன்..."

"மாப்பி..பொண்ணு எங்க ஆளுங்க... புரியுதா..... வீணா வேல் கம்பு வீச்சரிவாளுக்கு உன் உயிரைக் கொடுத்துராதே...உங்க ஆளுங்க பக்கம் எதாவது பொண்ணு இருந்தாச் சொல்லு நாங்க ஜோடியா வந்து உதவுறோம்...." வைத்தியின் நக்கல் என்னைச் சுள்ளுன்னு தாக்கிச்சு,,,


வைத்திக்கு யோசிக்கக் கூட நேரம் கொடுக்காம அவன் மீது மேகமாப் பாய்ஞ்சேன்.. கொத்தா அவன் சட்டையைப் பிடிச்சு கீழே தள்ளுனேன்.... மண்ணுல்ல நானும் அவனும் உருண்டோம் புரண்டோம்.... அவன் மேல் உதடு கிழிஞ்சு ரத்தம் கொட்ட ஆரம்பிச்சது... விடாமல் நானும் வனை அடித்தேன்....வைத்தி எம பாதக பைய அடிக்கக் கூடாத இடத்துல்ல சட்டுன்னு முட்டியை வச்சு எத்திட்டான்...

அவ்வளவு தான் குடல் மொத்தமும் வாய் வழியா வந்துரும் போல வலி பொங்கியது... சத்தம் கூடப் போட முடியாமல் முழங்கால் போட்டு உட்கார்ந்தேன்...

நிமிர்ந்து பார்த்தால் மூக்களகி பக்கத்தில் தேவதை....


"சேராதன்னு சொன்னாக் கேக்குறீயா..முரட்டுத் தனமா அடிச்சு இருக்கான் மாட்டுப் பைய...." மூக்களகி வைத்தியின் காயத்தை பார்த்து பரிசோதனைச் செஞ்சுட்டு இருந்தா...

வைத்தி அப்பாவியா மூஞ்சை வச்சிகிட்டு நின்னான்...உதட்டுல்ல வழிஞ்ச ரத்தம் வேற நல்லாவே அவனுக்கு வேலை செஞ்சது... என் மெய் வலியை வெளியே சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் முக்கு முனகிட்டே எழுந்து நின்னேன்...

அப்போ என் தேவதை கையில் ஒரு வெள்ளை கைக்குட்டை இருந்துச்சு... அந்த கைக்குட்டையாலே அவளே வைத்தியோட உதட்டு ரத்தத்தைத் துடைச்சு விட்டா...

அதைப் பார்த்துக் கொண்டிருந்த எனக்கு 'அங்கே" அடிப்பட்டதை விட மனசுல்ல ஆயிரம் மடங்கு வலிச்சுது... வைத்தி என்னைப் பாத்து பரிகாசமாப் புன்னகைத்தான்....நடக்கக் கூட முடியாமல் ஒரு மாதிரி நின்னுட்டு இருந்தேன் நான் அவங்க மூணு பேரும் அங்கிருந்து போவதைப் பாத்தப் படியே...

இன்னும் வாசம் வீசும்