Saturday, August 01, 2009

தென்கிழக்கு வாசமல்லி - 5

தென்கிழக்கு வாசமல்லி - 4

மழை எல்லாம் ஓய்ஞ்சுப் போய் இரண்டு வாரம் முடிஞ்சு போச்சு... கல்லூரி திறக்க ஒரு வாரம் இருந்துச்சு..வீட்டை விட்டு வெளியேவே வர்றல்ல... வியாழக்கிழமை சாயந்திரம் வீட்டு வாசல்ல சைக்கிள் மணி சத்தம் கேட்டு ஜன்னல் வழியாப் பாத்தேன்..அங்கே வைத்தி நின்னுகிட்டு இருந்தான்...

அடுத்த பத்தாவது நிமிசம் வைத்தி சைக்கிளை வேகமா மிதிக்க நான் பின்னாடி உக்காந்து இருக்க..கிரவுண்ட் பக்கம் போய் சேர்ந்தோம்... வைத்தி பாக்கெட்டில் இருந்து எடுத்து பத்த வச்ச சிகரெட்டை ஒரு இழுப்பு இழுத்துட்டு என் கிட்ட கொடுத்தான்..நானும் என் பங்குக்கு நிதானமா ஒரு இழுப்பு இழுத்தேன்...

"நாளைக்கு தலைவர் படம் ரிலீஸ்...டிக்கெட் சொல்லிட்டேன்...காலையிலே 11 மணி ஷோ....நீ இல்லாம இப்போ வரைக்கும் தலைவர் படம் மொத நாள் மொத ஷோ நான் பாத்தது கிடையாது...."

"பேனர் எல்லாம் சொல்லியாச்சா...?"

"ம்ம் சொல்லியாச்சு..ஸ்டார் கட்டுறான்வ நம்ம பையல்வ...பாளையங்கோட்டை பாயும் புலி மன்றம்ன்னா சும்மாவே...அதிர விடணும்ல்லா"

மாத்தி மாத்தி சிகரெட்டை இழுத்து விட்டதுல்ல புகையோடச் சேந்து உள்ளுக்கு இருந்த பகையும் வெளியே போயிருச்சு...மனசு லேசான மாதிரி இருந்துச்சு...நிலா நடு வானத்துக்கு வர்ற வரைக்கும் வைத்தியும் நானும் ஊர் சுத்தித் திரிஞ்சோம்...சூடா ஒரு டீயை போட்டுட்டு அப்படியே பேரின்ப விலாஸ் தியேட்டர்ல்ல போய் தோரணம் கட்டுற அழகை எல்லாம் பாத்து ரசிச்சுட்டே நின்னோம்....தலைவர் பட ரிலீஸ்ன்னா தமிழ்நாட்டுக்கே திருவிழாவாச்சே... திருநெல்வேலி சீமை மட்டும் சும்மாவா என்னா...

போஸ்ட்டரில் தலைவர் வேட்டி சட்டை நெத்தியில் பட்டை கழுத்தில் உத்திராச்சக் கொட்டை எனப் பட்டயக் கிளப்பிகிட்டு இருந்தார்...

நானும் சரி வைத்தியும் சரி மறந்து கூட அவளைப் பத்தி அதுவரைக்கும் ஒரு வார்த்தைக் கூட பேசல்ல...நான் ரொம்ப கவனமா இருந்தேன்...வைத்தி என்னை விட கவனமா இருந்தான்...ஒரு கட்டத்துல்ல எல்லாத்தையும் பேசி தீத்துட்டு என்னப் பேசுறதுன்னு புரியாம வைத்தியும் நானும் ஆளுக்கு ஒரு புறம் நிலாவைப் பாக்க ஆரம்பிச்சோம்...

"அந்த நிலா...நம்மளைப் பாக்குதுடா வைத்தி...." நான் தான் முதல்ல பேச ஆரம்பிச்சேன்...

"இல்லலே...அந்த நிலா உன்னியத் தான் பாக்குது... அதுக்கு நான் இருக்கதே தெரியாதுல்ல" வைத்தி சொன்ன பதில் எனக்கு சட்டுன்னு பிடிபடல்ல..

"எலேய் வைத்தி...நிலாவுல்ல இருக்க கறை உன் கண்ணுக்குத் தெரியுதாடே...நல்லாப் பாத்து சொல்லுடே.." நான் விடாமல் வைத்தியை வம்புக்கு இழுத்தேன்..

"ஏப்பூ...நிலாவுல்ல குறையுமில்ல...கறையுமில்ல... பாக்குறவன் கண்ணுல்ல தான் கோளாறு இருக்கு....நிலான்னா அழகுலே...அம்சம்லே....ரசிக்க பழகுலே...."

"ஏ வைத்தி என்ன பேச்சுல்ல ஒரு உள்ளர்த்தம் வச்சே பேசுற மாதிரியே இருக்கு....என்ன சொல்ல வர்ற"

"பொடியுமில்ல வெடியுமில்ல..வெங்கயாம்...நான் சுத்தி வளைக்காம விசயத்துக்கு நேராவே வருதேன்... நீ எல்லாம் ஒரு மனுசனால்லே....ஊத்தவா பயலே.." சடக்குன்னு வைத்தி கேட்ட கேள்வியிலே ஒரு கணம் திகைச்சுப் போயிட்டேன்.. என் திகைப்பு அடங்குறதுக்குள்ளே அவன் மறுபடியும் பேச ஆரம்பிச்சுட்டான்...நான் ஒண்ணு நினைக்க வைத்தி ஒண்ணு நடக்க...எதோ ஒண்ணு நடக்க என்னமோ ஆகி போயிருச்சுன்னு வைத்தி பேசி முடிக்கும் போது தோணுச்சு...

என் மனசு ரொம்ப தெளிவாயிருந்துச்சு... எனக்கும் வைத்திக்கும் இருந்த பிணக்கு தீந்த சந்தோசம் ஒரு புறம்ன்னா மறுபுறம் இன்னொரு சந்தோசம்...அந்த சந்தோசத்தை வார்த்தையிலே எப்படி விவரிக்கறதுன்னு எனக்கு இப்போக் கூட பிடிபடல்ல...

"லேய்...அவளை நான் விரும்புனது உண்மை....நீயும் அவளை விரும்புறன்னு தெரிஞ்சதும் கொதிச்சது உண்மை..அதுல்ல நீ என்னை நக்கலடிச்சதுல்ல எனக்கு கோபம் கிளை விட்டு கிளம்புனதும் உண்மை..ஆனா இதை எல்லாம் விட பெரிய உண்மை என்னன்னா.. அவ என்னை விரும்பல்லங்கறது தான்....அது தெரிஞ்சப்போ அப்படியே நொறுங்கி போயிடுச்சு நம்ம மனசு....அண்ணாச்சி ஓயின் ஸ் பார்ல்ல இருக்க டேபிள் நனைய நனைய தண்ணியப் போட்டு அழுதேன் தெரியுமா.....அதுவும் தனியா...ஒருத்தனுக்கு காதல் தோல்வின்னு சாய்ஞ்சு அழுவுறதுக்கு தோள் கொடுக்கறவன் தான் உண்மையான நண்பன்...ஆனா எனக்கு நண்பனே வில்லனா போயிட்டானேன்னு விடிய விடிய வாட்டர் பேக்கேட் பிழிய பிழிய பீல் பண்ணேன்லே...."

வைத்தியும் என்னை மாதிரி தான் அவளை விரும்பியிருக்கான்...பாவம் பைய. நான் தான் கொஞ்சம் பொறுத்துப் போயிருக்கணும்..ஆனா என்னப் பண்ணுறது காதல்ன்னு வந்துட்டா கண்ணு மண்ணு தெரியாமல்லா போவுது... வைத்தி பேச பேச அவன் மேல எனக்கு நட்பு பொங்கி வழிந்தது...

"லேய்...மொதல்ல நான் ரொம்ப நம்பிக்கையாத் தான்லே இருந்தேன்...கல்யாணம் எல்லாம் எந்த மண்டபத்துல்ல வைக்கிறது... சமையலுக்கு யார்....கல்யாணத் துணி எல்லாம் கூட போத்தீஸ்ல்ல எடுக்கணும்...எனக்கு என்ன கலர்...அவளுக்கு என்னக் கலர்ன்னு ..ப்ச்..மொத்தமும் கெணத்துல்ல விட்டெரிஞ்ச கல்லாப் போயிருச்சு..அன்னிக்கு அவ அழுதுகிட்டே வந்து என் தங்கச்சிகிட்டே நின்னப்போ....அதுக்கு அப்புறம் அவப் பேசுன ஒவ்வொரு வார்த்தையும் என் கனவு கோட்டைக்கு வச்ச் ஒவ்வொரு களவெடிலே...."


வைத்தி பேச பேச மனசுக்குள்ளே ஒரு பக்கம் பட்டாம்பூச்சியும் இன்னொரு பக்கம் கரப்பான் பூச்சியும் ஊர்ந்துகிட்டு இருந்துச்சு...

"லேய் மன்னிச்சுக்க... நம்ம ஊர் எருமை மாட்டுக்கும் உனக்கும் ஒரே கலர்...நான் வெளுப்பு இல்லன்னாலும் உன்னியவிட எட்டு மடங்கு கலர்...இதை நீயே ஒத்துக்குவடே...அப்புறம் சிரிப்பு அப்படின்னா என்னன்னே தெரியாத ஒரு முகம்...கலைச்சு விட்ட தலை முடி....உர்ர்ன்னு ஒரு பார்வை....இப்படி ரொமான் ஸ்க்கு கொஞ்சமும் செட் ஆகாத பைய நீ....இதுக்கு எல்லாம் அந்த பிள்ளையை தேம்பி தேம்பி அழ வைக்குற மாதிரி அப்படி ஒரு நாற பேச்சு வேற பேசியிருக்கே...."

நான் பேசுனது எல்லாம் வைத்திக்கு தெரிஞ்சு இருக்கு.... மூக்களகிக்கு வேற தெரிஞ்சுப் போச்சுன்னு தெரிஞ்சுகிட்டேன்...அவ நேரா அங்கே போய் தான் அழுதுருக்கா....அதுவும் தேம்பி தேம்பி அழுதுருக்கான்னு தெரிஞ்சதும் மனசுல்ல அப்படியே எதோ ஒண்ணு உருகி ஓட ஆரம்பிச்சது...

"எங்கிட்டோ போற எவனோ நம்ம பத்தி தப்பாப் பேசிட்டான்னு வை... அவனைத் திருப்பி திட்டிபுடுவோம்...இல்ல அவன் நாக்கை அறுத்து அவன்ட்டேயே கொடுத்துரணும் ஒர்ரு கோவம் தான் வரும...ஆனா அழுகை வராதுல்லா...அவளுக்கு அழுகை வந்துருச்சு...அதுவும் நிக்காம தேம்பி தேம்பி அழுகுறா....மனசு தாங்கல்லலே....."

வைத்தி என் முகத்தை உத்துப் பாத்துகிட்டே பேசுனான்..என் தொண்டைக் குழிக்குள்ளே பந்து மாதிரி எதோ ஒண்ணு உருண்டு உருண்டு ஓடுது... பேச்சு குழல்ல எதோ அடைப்பு வந்தாப்புல்ல நான் அப்படியே தலையைக் கவுத்துகிட்டேன்...

"அப்பா திட்டுனா கூட அழுவாத பிள்ளையாம்.... எட்டூர் போய் என்னவெல்லமோ சேம்பியன் சிப் வாங்குன பிள்ளையாம்....நம்ம இந்திரா காந்தி அம்மா பேரை அந்தப் பிள்ளைக்கு எதுக்கு வச்சாங்களோ அந்தப் பேருக்கு ஏத்த மாதிரியே திடமா நிக்கற பிள்ளை....அந்தப் பிள்ளைய கண் கலங்க வச்சுட்டீயே வெங்கப் பயலே...அங்கிட்டு இங்கிட்டுன்னு நான் காவாலித் தனம் பண்ணியிருக்கலாம்.... நீ அந்தப் பிள்ளை கிட்ட சொன்ன மாதிரி நான் பொறுக்கி பய தான்ன்னு வச்சுக்குவோம்லே.... ஆனா அந்தப் பிள்ளை தேவதை மாதிரிலே....பொறுக்கிக்குக் கூட பொசுக்குன்னு உள்ளுக்குள்ளே மல்லிவாசம் தான் வீசும் அந்தப் புள்ளையைப் பாத்தா... எனக்கும் அப்படி தான் ஆச்சு....."

இதைச் சொல்லும் போது வைத்தியின் குரல் கொஞ்சம் நடுங்கிப் போயிருச்சு...வைத்தி தோள் மேல என் கையைப் போட்டு மெதுவா அழுத்துனேன்...

"ம்ம்ம் ஆனது ஆச்சு...பாதி ராத்திரி வரைக்கும் அடிச்ச சரக்கு தெளிஞ்சு வெளிச்சத்துல்ல யோசிச்சேன்...இந்தாக் காலையிலே ஆத்துல்ல போய் ஒரு குளியல்ல போட்டேன்...எப்படி பாத்தாலும் நீ யாருடா? நம்ம பைய.....உன் சந்தோசம் தான் என் சந்தோசம்... நல்லா இருந்துட்டு போ....கொஞ்சம் குத்தும் அப்புறம் குடையும்... இன்னொருத்தி வந்து மாமனுக்கு கஞ்சி காய்ச்சு ஊத்துனா என் மனசு ஆறிடப் போவுது...அப்படின்னு தேத்திக்கிட்டு சைக்கிளை எடுத்துட்டு உங்க வீட்டுக்கு காலையிலே வந்து சேந்துட்டேன்..."

காலையிலே நாலு மணி வரைக்கும் தூக்கம் வர்றல்ல... அப்புறம் முடிவு பண்ணேன்... தப்பெல்லாம் என் பேர்ல்ல தான்... அப்படி பேசி இருக்க கூடாது.... மன்னிப்பு கேட்டுரணுப்பா... நாளைக்கு விடிஞ்சதும் முதல் வேலையே அது தான்.... தீர்மானம் பண்ணிட்டு படுத்து தூங்கி போனேன்...

காலையிலே எந்தரிச்சு மல்லி செடிக்கு கொஞ்சம் கூடுதல் கவனிப்பு எல்லாம் முடிச்சுட்டு...சைக்கிள் எடுத்துட்டு அவப் பாட்டு கிளாஸ் போயிட்டு வர்ற வழியிலே போய் நின்னேன்..... கிளாஸ் முடிச்சுட்டு வர்ற வரைக்கும் காத்துகிட்டு நின்னேன்... ஒரு நாலு சிகரெட் புகைச்சு முடிச்சேன்...

"அவளுக்கு தில்லியிலே எதோ காலேஜ்ல்ல இன்டர்வியூ வந்துருக்காம்.... நேத்து சாயங்காலம் மதுரைக்குப் போயி..அங்கிருந்து பிளேன் பிடிச்சு சென்னை போய் அப்படியே தில்லி போறதாச் சொன்னா.....இந்நேரம் தில்லி போயிட்டு இருப்பான்னு நினைக்கிறேன்....." வெக்கம் ப்ளஸ் கெத்து ரெண்டும் கெட்டு மூக்களகி கிட்ட விசாரிச்சு அறிஞ்ச விவரம் இது....அவ திரும்பி வருவாளா...எப்போ வருவா.... எதுவுமே மூக்களகிக்குத் தெரியல்ல...அவத் தெரிஞ்சக்கவும் இல்ல...

அடுத்த சில நாட்கள்ல்ல அவங்க வீட்டை யாரோ ஒரு ஆளுக்கு வாடகைக்கு விட்டிருப்பதா அம்மா சொல்லித் தெரிய வந்துச்சு...அவங்க குடும்பம் திரும்பவும் தில்லிக்கே போயிட்டதாகவும் ஊருக்கு வர்ற திட்டத்தை இன்னும் கொஞ்ச வருசங்களுக்குத் தள்ளிப் போட்டிருப்பதாகவும் பேச்சு வாக்குல்ல அங்கே இங்கே காதுல்ல விழுந்துச்சு...

அவக் கிட்ட நான் கேக்க நினைச்ச மன்னிப்பு எனக்குள்ளேவே பத்திரமா பொதிஞ்சு வச்சிருந்தேன்...அவ நட்டு வச்சு நான் தண்ணி ஊத்தி வளத்த மல்லி செடி நிறைய பூக்க ஆரம்பிச்சது... அந்த வாசம் தினமும் மனசையும் வேலியோரத்தையும் நிறைச்சு வச்சது.... பூவரசம் மரப் பொந்து பக்கம் ஒரு மரங்கொத்தி பறவை ஒண்ணு வந்து கொத்து கொத்துன்னு கொத்திகிட்டு இருந்த அழகை ரசிச்சிட்டு இருந்த போது தான்..பொந்துல்ல இருந்து தலை நீட்டுன அந்த வெள்ளை கவர் கண்ணுல்ல பட்டுச்சு...

சில சமயங்களில் மெளனம் கூட நல்ல இசையாவது உண்டு.... அதை ரசிக்க தெரிய வேண்டும் அவ்வளவு தான்....

நான் மிகவும் ரசிக்கும் கச்சேரி உன் மவுனங்களே..... இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
அன்புடன் ரஞ்சனி பிரியதர்ஷினி

(Sometimes silence can be musical..you need to listen to it
My most admired music is your silence
Happy Birthday - Love Ranjani Priyadarshini)

ஆங்கிலத்துல்ல இருந்த அந்த வரிகளை திரும்ப திரும்ப படிச்சேன்.....

காதலிப்பதும் காதலிக்கப்படுவதும் கடவுளின் மிகச் சிறந்த பரிசுகள்....( TO LOVE AND TO BE LOVED ARE GOD'S MOST VALUED GIFTS TO A MAN)

பூவரசம் மரத்தின் அடியில் காம்பஸ் வச்சு செதுக்கி வச்சேன்....

பல வருசத்துக்கு முன்னாடி செதுக்குனது...இன்னும் அப்படியே இருக்கு அந்த மரத்துல்ல.... அந்த பர்த்டே அதுவும் தான் அப்படியே இருக்கு.... கொஞ்சம் பழுப்பேறி போச்சு...பரவாயில்ல...என் முதல் காதலின் அடையாளம் ஆச்சே அது.... அப்படி பழசை எல்லாம் நினைச்சுகிட்டே பூவரசு மரத்தடியிலே ரொம்ப நேரம் நின்னேன்.... லேசா தூறல் போடவும் அப்படியே பொடி நடை போட்டு வீட்டுக்குள்ளே போய் டிவியைப் போட்டேன்....

"ஏரிக்கரை பூங்காற்றே.. நீ போற வழி தென்கிழக்கோ....தென்கிழக்கு வாசமல்லி என்னைத் தேடி ஒரு சேதி சொல்லி...." தூறல் நின்னுப் போச்சு படத்து பாட்டு ஓடுச்சு... முகத்துல்ல ஒரு சிரிப்போட நானும் அந்த பாட்டை பாத்து ரசிச்சேட்டு இருந்தேன்...

TO LOVE AND TO BE LOVED ARE GOD'S MOST VALUED GIFTS TO A MANஎன்னையுமறியாமல் என் உதடுகள் முணுமுணுத்தன..

(தென்கிழக்கு வாசமல்லி இப்பகுதி இத்தோடு முடிகிறது....மீண்டும் என் வாழ்க்கையில் இந்த மல்லி வாசம் வீசியது.. வேறொரு சூழலில் வேறொரு சந்தர்ப்பத்தில் சமயம் கிடைக்கும் போது அதைப் பற்றி பகிர்ந்து கொள்கிறேன்.. இப்போதைக்கும் முற்றும்... நன்றி)