Thursday, February 09, 2012

மீண்டும் தென்கிழக்கு வாசமல்லி - 4

இதுக்கு முன்னாடி படிக்க

உடம்பு சரியாகி ஆபிஸ்க்கு போன முதல் நாள்...அவளைப் பாக்க அவ கேபினுக்கு போனேன்....போனி டெயில் போடிருந்தா முன் நெத்தியிலே கத்தையா கொஞ்சம் முடி சரிஞ்சு விழுந்து கிடந்துச்சு.....சந்தனத்தை அரைச்ச கலர்ல்ல ஒரு சல்வார்...கையிலே ஒரு வளையல்...அவ லேப் டப் தட்டுற தாளத்துக்கு அந்த வளையல் போட்ட ஆட்டத்தை நாள் முழுக்க பாத்துட்டே இருக்கலாம் போல இருந்துச்சு...

சட்டுன்னு அவ தலையை  தூக்கி என்னை பாத்தப்போ தான் நான் என் கண்ணை அவ வளையல் ஆட்டத்துல்ல இருந்து  எடுத்தேன்

ஒரு சின்ன சிரிப்போட என்னைப் பாத்து அந்த தேன் தொட்ட குரல்ல என்னைப் பாத்து."வெல்கம் பேக்.....ம்ம்ம் முப்பது நிமிசத்துல்ல வர்றேன்னு சொல்லிட்டு மூணு மாசம் வெயிட் பண்ண வச்சிட்டீங்களே....கம் இன் ...." கையைக் கொடுத்தா...

புதுசா பூத்த ரோஜாப் பூவை எடுத்து உள்ளங்கையிலே வச்சு  அழுத்துனாப்புல்ல இருந்துச்சு எனக்கு...

"சாரி இந்த வாட்டி கொஞ்சம் லேட்டாயிருச்சு...அடுத்த வாட்டி சொன்ன டைம்க்கு கரெக்ட்டா வந்துருவேன்...பாருங்க" நானும் சிரிச்சுகிட்டே சொன்னேன்

"இந்த வாட்டியே டாக்டரை வச்சு எமதர்பார்ல்ல எக்ஸ்ட்ரா டைம் கேட்டு வாங்கியிருக்காங்க பாஸ் அடுத்த வாட்டி எல்லாம் கேஸ் நிக்காது.... எனிவே குட் டு சி யு பேக் (Any ways good to see you back)”  அப்படி சொல்லிட்டு  மறுபடியும் சிரிச்சா..அந்த சிரிப்பு உள்ளே வரை போய் எனக்கு இன்னொரு பிறப்பைக் கொடுத்துட்டு வந்து என் உதட்டுல்ல உக்காந்த்துச்சு

கொஞ்ச நேரம் அவகிட்ட அதே சிரிப்பு குறையமா பொதுவா பேசிட்டு இருந்துட்டு என் சீட்டுக்குக் கிளம்புனேன்.... ரெண்டு அடி எடுத்து வச்ச பிறகு என்னமோ தோணுச்சு திரும்பி அவ சீட்டுக்கு வந்து

ரஞ்சனி....ரொம்ப தேங்க்ஸ் அப்படின்னு சொல்லிட்டு அவ பதிலுக்கு எதிர்பாக்கமா நடந்தேன்.. அந்த கேப்புல்ல இரு கண்ணையும் லேசா மூடி திறந்து மறுபடியும் அந்த சிரிப்பு சிரிச்சா பாருங்க ரஞ்சனி
எல்லா அகராதியிலும் அழகுன்னா அதுக்கு அர்த்தமா உம் அவ பேர் தான் இருக்கணும்ன்னு என் மனசுக்குள்ளே தோணுச்சு

அடுத்த சில் நாள் ஆபிஸ்ல்ல வேலை ஜாஸ்தியாகிடுச்சு...டாம் கிளையண்ட் சைட்டுக்கு போய் இருந்தான்...இன்னும் ஒரு மாசம் அங்கே தான் இருப்பான்.... நாணாவுக்கு மலேரியா வந்து வீட்டுல்ல படுத்துட்டான்...

புராஜக்ட்ல்ல எல்லாரும் புதுசு....ரிலீஸ் தேதி வேற நெருங்கி வந்துட்டு இருந்துச்சு....புது பசங்கள்ல்ல முக்கியமா சொல்ல வேண்டிய பசங்கன்னா...கேஜிங்கற கிருஷ்ணகிரி....சொந்த ஊர் சிக்கிம்...சென்னை வந்து பத்து வருசம் ஆச்சு....டேட்டா ஸ்பெஷலிஸ்ட்...

அடுத்து சுதா....முதல் புராஜெக்ட்...அண்ணா யுனிவர்சிட்டி டாப்பர்...

அப்புறம் லட்சுமிபதி ஊர் ஆந்திரா கடப்பா....பாலகிருஷ்ணாங்கற மகத்தான தெலுங்கு கலைஞனை எனக்கு அறிமுகப்படுத்துன பெருமை இவனையே சேரும்.பதிலுக்கு அவனுக்கு நம்ம கேப்டன்...பசுநேசன்ன்னு தமிழகத்தின் மகத்தான கலைஞர்களை நான் அறிமுகப்படுத்தி வச்சது தனிக்கதை..

இதுல்ல நீங்க கவனிக்க வேண்டிய விஷயம் சுதாவுக்கு சொந்த ஊர் வேலூர்...அவங்க அப்பா பேர் ராமாரெட்டி அந்த விவரத்தையும் விளக்கமா சொல்லுறேன்... இப்போதைக்கு புராஜக்ட் முக்கியம் அதுனாலே அதைக் கவனிப்போம்

 முதல் ரிலீஸ்க்கு இரண்டு வாரம் தான் இருந்துச்சு...ராத்திரி பகல் பாக்கமா ஆபிஸே கதின்னு கிடந்து வேலை பாத்தோம்...டீ...தம்ன்னு குறையாம டென்சனை ஊத்தியும் ஊதியும் தள்ளி வேலை பாத்துட்டு இருந்தேன்..
எல்லார் கிட்டயும் அதே சிரிப்பு எப்போவும் சுறுசுறுப்பு கொஞ்சம் குறும்புன்னு ரஞ்சனி எப்பவும் ஆபிஸ்ல்ல வளைய வந்துட்டிருந்தா

சுருக்கமா சொல்லணும்ன்னா அந்த புராஜக்ட்க்கு அவ தான் ஆணி வேர்ன்னு சொல்லணும்...எல்லா வேலையும் இழுத்து போட்டுகிட்டு செஞ்சா...சனி ஞாயிறுன்னு பாக்கமா அவ முன்னால நின்னு எல்லாரையும் உற்சாகமா வேலை செய்ய வச்சா...அவப் பாக்காத நேரம் எல்லாம் அவளையே நான் பாத்துட்டு இருந்தேன்...அவளை நான் பாக்காத நேரம் மனசுக்குள்ளே ஓரு ஓரமா அவ ஞாபகம் இருந்துட்டே இருந்துட்டே இருந்துச்சு...அவளை நினைக்கும் போதெல்லாம் என்னையுமறியாமல் எனக்குள்ளே ஒரு பரவசம் பரவும்...ரஞ்சனி ஒரு தேவதை

ஒரு ஞாயித்து கிழமை ரூம்ல்ல தனியா இருந்தேன்....சன் டிவியிலே சூர்யா ஜோதிகாவை துரத்தி துரத்தி உயிரின்  உயிரேன்னு பாடிக்கிட்டு இருந்தான்... மனசு பரபரன்னு ரஞ்சனியின் ஒவ்வொரு ஞாபகமாய் விரட்டிட்டு போயிட்டு இருந்துச்சு....என் சூட்கேஸ்ல்ல இருந்த என் பழைய  ஸ்கெட்சிங் பேடை எடுத்துப் பிரிச்சேன்... மனிதன் படத்து தலைவரின் அம்சமான பென்சில் ஸ்கெட்ச்சில் ஆரம்பிச்சு நெல்லையப்பர் கோயில் வாசல் பூக்காரம்மா...பத்தாம் கிளாஸ் மேத்ஸ் எடுத்த ஆலிஸ் டீச்சர்...சுருட்டை முடியோட சின்ன வயசு சச்சின்...எதோ ஒரு புடவை கடை வெளம்பரத்துல்ல பாத்த அந்தக் காலத்து மீனா...ஆங்....ஹாலிவுட் படம் பாக்க ஆரம்பிச்ச காலத்துல்ல வரைஞ்ச சல்மா ஹய்கோட பிகினி படம் இப்படி பக்கம் பக்கமா படங்களை புரட்டிகிட்டே வந்தேன்....கடைசி பக்கத்துல்ல  பாளையங்கோட்டை வீட்டு மதில் சுவரோரம் நின்ன மல்லிக் கொடி...அது பக்கத்துல்ல நான் அப்போ பாத்த ரஞ்சனி.....நான் வரைஞ்ச படம்...

ரஞ்சனி நிறைய மாறி இருந்தா...மாத்தம் எல்லாம் ஏத்தம் கொடுக்கறதுக்கு கொஞ்ச பேருக்கு தான்..அதுல்ல ரஞ்சனி நிச்சயம் ஒருத்தி...அழகுக்கு அழகு சேர்ந்திருஞ்சு...ஒளிக்கு ஒளி சேந்துருச்சு...ரஞ்சனி தேவதையா இருந்தா இப்போ தேவதைகளுக்கு எல்லாம் அரசியாயிட்டா...

கடைசியா ரஞ்சனி படத்தை வரைஞ்சப் பிறகு நான் வேற எந்த படமும் வரையல்லங்கற விவரமும் எனக்கு புரிஞ்சது...கிட்டத்தட்ட பத்து வருசம் கழிச்சு வரையணும்ன்னு தோணுச்சு...மறுபடியும் ரஞ்சனியை வரையணும்ன்னு தோணுச்சு....

நோட்டை எடுத்துட்டு அப்படியே வெளியே வந்து உக்காந்தேன்....மனசுக்கும் விரலுக்கும் என்ன தொடர்போ தெரியல்ல....அப்படியே ரஞ்சனி கொஞ்சம் கொஞ்சமா நோட்ல்ல தெரிய ஆரம்பிச்சா....முன் நெத்தியிலே விழுந்த கத்த முடி அதை அவ விரலை வச்சு நெட்டி தள்ளிட்டு பூவா உதட்டை குவிச்சு அவ சிரிக்கிற மாதிரி....கசங்காத அவ மேலாடை...பாத்து பாத்து வரைஞ்சு முடிச்சு நிமிந்தா.....

“என்னடா பண்ணிட்டு இருக்க....ஏர்போர்ட்க்கு வருவேன்னு பாத்தேன்...வரவே இல்ல....ஒரு போன் கால் கூட இல்ல.......அப்படி என்ன பிசியா இருக்க....”

சட்டுன்னு நோட்டை என் கையில் இருந்து பிடுங்கிட்டான் டாம்....

“சார்  ரொம்ப பிசி போல....” அந்த தேன் தொட்டக் குரலுக்கு சொந்தக்காரி டாம்க்கு பின்னாடி படியேறி வந்தா...

“மாப்ளே...இதெல்லாம் நீ வரைஞ்ச படமாடா...சொல்லவே இல்ல....இவ்வளோ நல்லா வரைவீயா....வாஆஆஆவ்”

“கொடு பாப்போம்.....” அவன் கிட்ட இருந்து அவ நோட்டை பிடுங்கினா...

“மச்சி எல்லாம் தலைவர் படம் தானா.....பாருடா  காஜோல்.....தில் வாலே படத்துல்ல தானே ...இந்த குட்டியூண்டு ஸ்கர்ட் போட்டுட்டு மழையிலே ஆடுவா...அப்படியே இருக்கா.......”

ஒவ்வொரு பக்கமா புரட்டிட்டு இருந்தாங்க....

“ஹே இது....மார்டின் லூதர் கிங்...பக்கத்துல்ல சே குவேரா....இது.....”

“மால்கம் எக்ஸ்”

“பொண்ணுங்க படமா தான் இருக்குன்னு பாத்தேன்....இவங்க படமும் இருக்கே பரவாயில்லயே”

“எனக்கு பிடிச்சவங்க படம் எல்லாம் இருக்கும் மனசுக்கு பிடிச்சா தான் வரைய முடியும்”

“மச்சி ஷகிலா சேச்சி படம் ஒண்ணு வரைய முடியுமாடா....” டாம் அடுத்த பக்கம் பொரட்ட இருந்தப்போ அவன் போன் அடிக்க  “ஆர்பி நீங்கப் பாருங்க....இதோ வர்றேன்” அவன் அந்தப் பக்கம் போனான்...

“மனசுக்குப் பிடிச்சவங்களைத் தான் வரைய முடியும்...சரி ரொம்ப சரி...”
ரஞ்சனி புரட்டுன பக்கத்துல்ல இப்போ அவ பாத்தது அவளோட படத்தை....அந்த மல்லி கொடிக்கு பக்கத்துல்ல அவ நிக்குற படத்தை.... பக்கத்துல்ல நான் பாதி வரைஞ்சிருந்த அவளோட இப்போதைய படத்தை....

நான் அவளையே பாத்தேன்....அவ  நோட்டு புக்ல்ல இருந்து கண்ணை எடுக்கவே இல்ல....

அவளோட செல்போன் அடிச்சுது.....எடுத்து கிசுகிசுன்னு எதோ பேசுனா....

“ஹே போன்ல்ல யாரு தெரியுமா அஸ்வின் என்னோட வுட் பி....வேலண்டைன்ஸ் டே நாளைக்கு...அவருக்கு கிப்ட் வாங்க தான் கிளம்புனேன்...போற வழியிலே உங்களையும் பாத்துட்டு போலாம்ன்னு டாம் சொன்னான்...வந்தது நல்லதாப் போச்சு....கிப்ட் கிடைச்சுருச்சு....”

நான் புரிஞ்சும் புரியாமலும் அவ அடுத்து என்ன சொல்ல வர்றான்னு கேக்க அப்படியே நின்னேன்...

“இந்த படம் நல்லாயிருக்கு....இது அஸ்வின் கிட்ட இருக்கணும்...ஹி வில் லவ் இட்...ஆக்சுவலி ரெண்டு படமும்....” நோட்டை எடுத்து வச்சிகிட்டா...

“இந்த படம்  இன்னும் முழுசா வரைஞ்சு முடிக்கல்ல”

“வரைஞ்ச வரைக்கும் போதும்” கடைசி வார்த்தைக்கு அழுத்தம் அதிகம் கொடுத்து சொன்னா...”வரைஞ்ச வரைக்குமே நல்லாயிருக்கே....இது கண்டிப்பா அஸ்வின் கிட்ட இருக்க வேண்டிய படம்...”  திரும்பவும் அழுத்தமா சொன்னா...

அது வரைக்கும் எனக்கு வராத கோவம் சட்டுன்னு வந்துச்சு....அவக் கையிலே இருந்து நோட்டை வாங்குனேன்...கிட்டத்தட்ட இழுத்து பிடுங்குனேன்...

“உங்க அஸ்வினுக்கு வேணும்ன்னா அவரை வரையச் சொல்லுங்க...இல்ல நீங்க வரைஞ்சு கொடுங்க....இது எனக்கு வேணும்...இது என் கிட்டத் தான் இருக்கணும்...இருக்கும்”  அவ கொடுத்த அழுத்தத்தையும்  தாண்டி அழுத்தமாய் சொன்னேன்...

முதல் முறையா அவக் கண்ணுல்ல நெருப்பு பூக்குறதைப் பாத்தேன்....

தொடரும்

4 comments:

மணி said...

ரெம்ப கேப் விடுறீங்க பாஸ்
எனிவே நல்லா போகுது....

Unknown said...

தேங்க்ஸ் பாஸ்...அடுத்த பகுதி சீக்கிரமே வந்துடும்...கேப்பை குறைச்சுடுவோம் :)))

கோபிநாத் said...

;-))) ரைட்டு ;-))

Unknown said...

ரைட்டா போவுதா கோபி!!! கேப் அதிகம் விடாம அடுத்த பகுதியையும் போட்டுருவோம்...