Tuesday, March 06, 2012

மீண்டும் தென்கிழக்கு வாசமல்லி - 9

இது வரை

சாயங்காலம் நாலு மணி இருக்கும்...என் டெஸ்க் போன் அடிச்சது...டயலர் டிஸ்ப்ளேவுல்ல அவளோட பேர்...கிட்டத் தட்ட அன்னிக்கு அவுட்டிங்ல்ல கையிலே பீர் டின்னோட அவக் குரலை கேட்டது...மறுபடியும் இப்போத் தான் கேக்கப் போறேன்...எதாவது புராஜ்க்ட் சம்பந்தமா இருக்கும்...எடுத்து காதில் வச்சு ஹலோன்னு சொன்னேன்...

"பொண்ணு பாத்துருக்காங்களாம்...கல்யாணமாம்...எப்போ...கார்ட் எல்லாம் அடிச்சாச்சா...? சொல்லவே இல்ல...?"

""

"சரி கார் ஓட்டத் தெரியுமா...என்ன என்னவோ தெரியுது...இது தெரியாதா... என்னை வீட்டுல்ல ட்ராப் பண்ணனும்..வர முடியுமா...ம்ம்ம் வரணும்... டிரைவரை வீட்டுக்குப் போகச் சொல்லிட்டேன்..இன்னும் பத்து நிமிசத்துல்ல நான் கிளம்புறேன்...வந்துருங்க..."

பட்டுன்னு போனை வச்சுட்டா...

முப்பது நிமிசம் கழிச்சி அவளோட புது ஸ்விப்ட் காரை சென்னை ட்ராபிக்கை சமாளிச்சி ஓட்டிட்டு இருந்தேன்...அவ எனக்குப் பக்கத்துல்ல உக்காந்து இருந்தா...இப்பவும் அவ யூஸ் பண்ணுற பர்ப்யூம் என்னன்னு என்னால கண்டுபிடிக்க முடியல்ல...வாசம் ஆளை கிறங்கடிக்க வச்சது..

"ம்ம் ராதாகிருஷ்ணன் சாலை போங்க..."

"வீடு அந்தப் பக்கம் ஆச்சே...இப்படி போனா ரொம்ப சுத்து"

"சுத்திகிட்டே போங்க சார் ஒண்ணும் அவசரமில்ல...."சிரிச்சா..

"ம்ம் ஒரு காபி...உட்லேண்ட்ஸ் ட்ரைவின்ல்ல நல்லாயிருக்கும்...சாப்பிட்டு போலாமா ப்ளிஸ்?"   கார் ஜெமினி மேம்பாலத்தை நெருங்கும் போது ரஞ்சனி கேட்டா


"அப்புறம் பொண்ணு என்னப் பண்றா?"

"எந்தப் பொண்ணு?"

"உங்களுக்கு பாத்துருக்க பொண்ணு"

"தமிழ் லிட்ரேச்சர்ல்ல எம்பில்"

"ஓ...ஐடி பொண்ணு இல்லயா...ஐடி பொண்ணு வேணாமா? இல்ல ஒரு ஐடி பொண்ணும் இந்த சுடுமூஞ்சியை கட்டிக்க மாட்டேன்னு சொல்லிட்டாளா?"
கேட்டுட்டு குறுகுறுன்னு என்னைப் பாத்தா...நான் காபியை மெதுவா உறிஞ்சிட்டு இருந்தேன்..

"அன்னிக்கு ஆஸ்பிட்டல்ல என்னைப் பாக்க வந்தப்போ ஏன் அழுதீங்க?" சடக்கென அந்த கேள்வியைக் கேட்டா

 காபி புரையேறி தும்முனேன்....அவக் கண்ணைச் சிமிட்டினா...அப்புறம் சுதாரிச்சுகிட்டு


“ யார் அழுதா?”


“நான் பாத்தேன்...உங்கக் கண்ணீர் என் கன்னத்து மேல விழுந்துச்சு...எனக்குத் தெரியும் ஐ சா இட் ஐ பெல்ஃட் இட்..இங்கே” கன்னத்துல்ல கை வச்சு காட்டுனா..


“இல்ல...அப்படி எதுவும் நடக்கல்ல”


“நடந்துச்சு...எனக்கு தெரியும் எனக்கு மட்டும் தான் தெரியும்...அண்ட் இட் வாஸ் சோ சுவீட்”


"நான் பாத்தேன்...என்னை ஆஸ்பத்திரியிலே பாக்க வரும் போது...என்ன தூரமா நின்னு பாத்துட்டே இருந்தீங்க...அப்புறம் குனிஞ்சு என் நெத்தி பக்கமா வந்து...அப்போ உங்க கண்ணு கலங்கிப் போயிருந்துச்சு...கண்ணுல்ல இருந்து ஒரு சொட்டு என் கன்னத்துல்ல விழுந்துச்சு.....ஏன் அழுதீங்க,,,? மறுபடியும் மறுபடியும் கேட்டுகிட்டே இருந்தா.. கையிலே இருந்த காபி கோப்பையை உருட்டிட்டே கண்ணால என் மேல ஒரு போர் தொடுத்தாப் பாருங்க எத்தனை முறை வேணும்ன்னாலும் தோக்கலாம் போல இருந்துச்சு அவக்கிட்ட...

அவளை உற்று பாத்தேன்..பார்வை அவ மேல மொத்தமா பரவியது

கழுத்து காயம் தழும்பு ஆகி போயிருந்துச்சு... உதட்டு காயம் அவ உதட்டை இன்னும் அழகாக் காட்டுச்சு... கன்னத்து காயம் இருந்த தடம் தெரியாம மாறி போயிருந்துச்சு...கழுத்து வரைக்கும் முடி வளந்துருந்துச்சு... அவளோட சிரிப்பு மட்டும் மாறவே இல்ல.......

”என்னப் பண்ணுறீங்க...?”

“பாக்குறேன்...” முணுமுணுத்தேன். மெதுவா என் கையை அவ உள்ளங்கையால பற்றி பிடிச்சா...

”கல்யாணம் நின்னு போகல்ல நானே தான் நிறுத்திட்டேன்...அஸ்வின் நல்லவர்...ஹி அண்டர்ஸ்டாண்ட்ஸ்....”   காபி குடிக்கும் போது அவளே சொன்னா. வெயிட்டர் ஆர்டர் பண்ண போண்டா செட்டை கொண்டு வச்சு வச்சார்.

“ஒரே குழப்பமா இருக்கு...ஒரு வாழ்க்கை முழுக்க நம்ம வச்சிருந்த  நம்பிக்கை ஒரே பொழுதுல்ல தகர்ந்து போகும் போது அந்த குழப்பம் இன்னும் அதிகமாகிடுது...”

”ம்”


“நீங்க சொல்லுங்க....”

“என்ன சொல்லணும்?”

“அன்னிக்கு ஹாஸ்பிட்டல்ல என் பக்கமா வந்து நிக்கும் போது ஏன் அழுதீங்க...?” மறுபடியும் கேட்டா..



"உங்களுக்குத் தெரியுமா...திருநெல்வேலியிலே நாம சந்திச்சு பிரிஞ்சப்போ.. .உங்க மேல எனக்கு கோவம் கோவமா வந்துச்சு...அந்த கோவம் அப்புறம் அப்படியே படிபடியா மறந்து போயிருச்சு....

""

"எப்பவோவாச்சும் அந்த ஞாபகம் எல்லாம் வரும்.... எங்க வீட்டுல்ல யாரும் என்னை அழ வச்சதும் இல்ல...அதே மாதிரி யாரும் ரொம்ப பெரிசா சிரிக்க வச்சதும் இல்ல...இரண்டையும் செஞ்சது நீங்க மட்டும் தான்...அந்த அனுபவம் எனக்கு புதுசு..."

அவ பேச பேச நான் கேட்டுகிட்டு இருந்தேன்..

"எல்லாப் பொண்ணுக்கும் அடலாசண்ட் ஏஜ்ல்ல வர்ற ட்ரீம் பாய் கான்சப்ட் எல்லாம் எனக்கும் இருந்துச்சு... நெருப்பு மாதிரி  ஒருத்தன் வர்றணும் அவனைப் பாத்த கோவம் வர்றணும்...அவ ஞாபகம் எப்பவும் வர்றணும்..அவன் கூட இருந்தா குறுகுறுன்னு ஒரு சந்தோசம் வர்றணும்..அவன் நினைப்பே சுகமா இருக்கணும்...என் மொத்த பீலிங்க்ஸ்க்கும் அவன் தான் டார்கெட்டா இருக்கணும்.. என் சிரிப்பு என் அழுகை இரண்டுக்கும் அவன் தான் காரணமா இருக்கணும்இப்படி எல்லாம் யோசிச்சு கவிதை கூட எழுதி வச்சிருந்தேன்... அப்பா கிட்டே காட்டுனேன்..  கனவு எல்லாம் வாழ்க்கை ஆகாது கெட் ரியல்ன்னு சொல்லி சிரிச்சுட்டு போயிட்டார்...”


யாரும் அப்படி என் லைப்ல்ல வரவும் இல்ல..ஒரு கட்டத்துல்ல ஐ வாண்டட் டு கெட் ரியல் டூ.. எல்லாத்தையும் உதறிட்டு லைப்ங்கற ரேஸ்ல்ல சொசைட்டி, ஸ்டேட்டஸ்ன்னு ஓட ஆரம்பிச்சி..அப்பா பாத்த பையனைக் கல்யாணம் பண்ணிக்க ஓகே சொல்லும் போது...அகெய்ன்...உங்களை மறுபடியும் சந்திச்சேன்..."

"என்னை மாதிரியே நீங்களும் எல்லாத்தையும் தாண்டி வந்திருப்பீங்கன்னு தான் நினைச்சேன்.. மழை விட்டப் பிறகும் தூவாணம் விடாதுன்னு சொல்லுவாங்களே அதே மாதிரி ஒரு சின்ன க்யுரியாசிட்டி எனக்கு இருந்தது உண்மை தான்னாலும்..லைப்போட ரியாலிட்டி முன்னாடி அதெல்லாம் நிக்காதுன்னு என்னை நானே சமாதானப் படுத்திகிட்டேன்...பட் நீங்க மாறல்ல...அப்படித் தானே...."

என்னை மறுபடியும் குறுகுறுன்னு பாத்தா

" இன்னிக்கு நான் ஆபிஸ்க்கு வந்ததே வேலைய ரிசைன் பண்ணத் தான்... யாருக்கும் தெரியாது... ஐ ஹேவ் புட் இன் மை பேப்பர்ஸ்(I HAVE PUT IN MY PAPERS)...நான் போறேன்ப்பா... இந்த நாட்டை விட்டே போறேன்...YOU SET ME FREE AND NOW I AM GONNA BE GONE"   சொல்லிட்டு என்னைப் பாத்து சிரிச்சா


"ம்" கொட்டவும் முடியாமல் காபி தம்ளரில் விரலை வைத்து தட்டிக்கிட்டு உட்காந்து இருந்தேன்...

""என்ன ஒரு பதிலையும் காணும்...சும்மா சொல்ல்க் கூடாது தேவதாஸ் ரோல் உனக்கு நல்லாவே செட் ஆகும் போலிருக்கு...நாட்டை விட்டு போறேன்னு சொன்னதுக்கு என்ன ஒரு ரியாக்ஷன்டா சாமி...செம லவ் பண்ணுர போலிருக்கு"

"ம்ம்ம் சரி சரி இந்த சோக முகத்தை கழுவிட்டு...எங்க அப்பா கிட்ட வந்து உங்க பொண்ணை நான் லவ் பண்ணுறேன்....கல்யாணம் பண்ணி கொடுங்கன்னு வந்து கேளு...ப்ச் அப்பா மூணு நாள் ஊர்ல்ல இல்ல..கோயிலுக்கு போறோம்...சன்டே வீட்டுக்கு வா...உனக்காக காத்திருப்பேன்...அப்பாவுக்கு உன்னை ரொம்ப பிடிக்கும் ஒத்துக்குவார்....சரியா?"

அதிகப்படியான சந்தோசமோ துக்கமோ இரண்டுமே ஒரு மனுசனை அமைதியாக்கிடும் போலிருக்கு ...அவளை அப்பவே அங்கேயே கட்டிப் பிடிச்சு முத்தம் கொடுக்கணும் போல இருந்துச்சு...


"I  DEFINITELY MISSED YOU....." எழுந்து வந்து என் நெத்தியிலே அவ முத்தம் கொடுத்தா...அவக் கண்ணுல்ல இருந்த கண்ணீர் என் கன்னத்துல்ல விழுந்துச்சு..

“அந்த தமிழ் எம்பில் பொண்ணு அதை என்னப் பண்ணப் போறீங்க....?”

“உனக்கு ஓகேன்னா சைட்ல்ல வச்சிக்குறேன்...என்னால சமாளிக்க முடியும் என்ன சொல்லுற?”

“இழுத்து வச்சு அறுத்துருவேன்....இப்படி எல்லாம் ஏடாக்கூடமா பேசுற நாக்கை...”

“உனக்கு வேணாம்ன்னா வேணாம்...அதுக்கு எதுக்கு இவ்வளவு வயலன்ஸ்”

“I DUN WANT TO LOSE YOU AGAIN ..."  அப்படி சொல்லிட்டு தோளோடச் சாஞ்சுகிட்டா..அந்த ஒரு நிமிசம் உலகத்துல்ல அது வரைக்கும் படைக்கப்பட்ட படைக்கப்பட போற எல்லாம் ஜீவராசிகள்ல்ல ஆசிர்வதிக்கப்பட்டவன் நான் தான்னு நினைச்சேன்..இவளுக்காக எவ்வளவு வேணும்ன்னாலும் போராடலாம்...உன்னை இதே சிரிப்போட வாழ்க்கை முழுக்க பாத்துப்பேன் ரஞ்சனி எனக்கு நானே சத்தியம் பண்ணிகிட்டேன்.

வெள்ளிகிழமை விடிய விடிய குடிச்சுட்டு ஒரே கூத்து...வாட்டர் டேங்க் மேல ஏறி நின்னு டைட்டானிக் பாணியிலே ஐ யாம் த கிங் ஆப் த வேர்ல்ட் டயலாக் எல்லாம் சொன்னேனாம்...சனிக்கிழமை காலையிலே டாம் சொன்னான்..

அவனுக்கு என் மேல செம கடுப்பு தான்..ஆனா அந்தக் கடுப்பையும் தூக்கி சாப்பிட்டுருச்சு நட்பு...

“மச்சான்... இந்தப் பொண்ணுங்களுக்கு டேஸ்டே இல்லன்னு திரும்ப திரும்ப ப்ரூவ் பண்ணுறாங்கடா... எனக்கு என்னடா குறைச்சல்..அரவிந்த சாமி கலர்...
பாடி வேணும்ன்னா கொஞ்சம் வீக்...அதுல்ல நீ அடிச்சுட்ட...ஆனா என்னால டெவலப் பண்ண முடியும் மச்சி..இரண்டே வாரம் ஜிம் போனா போதும்...போடா..அப்படி எங்கிட்ட இல்லாதது என்னடா உங்கிட்ட இருக்கு....?”
டாம் புலம்பி தள்ளிட்டு கடைசியா முழு போதையில்ல என்னைக் கட்டிப்பிடிச்சு உம்மா கொடுத்துட்டு “நல்லாயிருக்கணும்டா நீங்க...நீ என் மச்சான்...அவ நான் லவ் பண்ண பொண்ணு ஆனா இந்த நிமிசத்துல்ல இருந்து அக்கா...ரைட்டா?”

ஞாயிறு மாலைக்குள் நிறைய வேலை பாக்கி இருந்தது...எங்க வீட்டை சமாளிக்க என்னப் பண்ணலாம்ன்னு நிறையவே யோசிக்க வேண்டியிருந்தது...

போன்ல்ல எதோ எஸ் எம் எஸ் வந்துருந்துச்சு எடுத்து பாத்தேன்...ரஞ்சனி கிட்டே இருந்து தான் வந்துருச்சு...

கல்யாணமாகி மூணு வருசம் கழிச்சு என் பொண்டாட்டி தமிழ் லிட்டரேச்சர் கிட்ட அந்த எஸ் எம் எசை ஒரு தாள்ல்ல எழுதிக் காட்டி அர்த்தம் கேட்டேன்...

WHEN THE BRIDGES BETWEEN US ARE BURNT FOREVER WE MAY STAND APART ON THE SHORES HATING EACH OTHER.....

"யாரையாவது ரொம்ப லவ் பண்ணீங்களாப்பா...” என் தலையை ஆதரவா கோதிவிட்டு கேட்டாள்...

“இல்லயே”

“அப்படின்னா இது ஒண்ணுமில்ல....ராத்திரிக்கு எத்தன சாப்பாத்தி போடணும் உங்களுக்கு....காலையிலே பிளைட் எத்தன மணிக்குன்னு கேட்டப்படி அவ சமையலறைக்குள்ளே போயிட்டா...

பிகு:

அந்த எஸ் எம் எஸொட அர்த்தம் சத்யமா இன்னி வரைக்கும் எனக்குப் புரியவே இல்ல...புரிஞ்சவங்க யாராவது இருந்தா நீங்களாவது சொல்லுங்க...

அதுக்கு அப்புறம் இந்த நிமிசம் வரைக்கும் நான் மறுபடியும் ரஞ்சனியை சந்திக்கல்ல..எங்கே இருக்கான்னு தேடவும் இல்ல....ஆனா மறுபடியும் அவ போயிட்டா....அவ ஞாபகம் எப்பவாது வரும்...கொஞ்ச நேரம் இருக்கும் அப்புறம் போயிடும்...மல்லிவாசம்....ஆனா எதோ ஒண்ணு சொல்லுது எங்கேயாவது எப்போவாது அவளை நான் மறுபடியும் சந்திப்பேன்னு...அப்படி சந்திச்சா அந்தக் கதையையும் உங்க கிட்ட சொல்லாம யார் கிட்ட சொல்லப் போறேன்..

நன்றி இத்தோடு பாகம் 2 நிறைவு.